ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் 2021ம் ஆண்டிற்கான தரவுகளின்படி, மெல்பன் மக்கள் தொகை 4,875,390 ஆக காணப்பட்ட அதே சமயம், சிட்னியின் மக்கள் தொகை 4,856,693ஆக உள்ளது.
இதன்படி ஆஸ்திரேலியாவின் அதிகூடிய சனத்தொகை கொண்ட மாநிலமாக 18,697 பேரால் சிட்னியைப் பின்தள்ளி மெல்பன் முதலிடம் பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக 1905ம் ஆண்டு மெல்பன் காணப்பட்டதற்குப் பிறகு தற்போது மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகம், நகர்ப்புற மக்கள்தொகையைக் கணக்கிடுவதற்கு பல முறைகளைப் பயன்படுத்துகிறது. இதில் Significant Urban Area classificationஉம் அடங்கும். குறிப்பாக 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் அனைத்து நகர்ப்புற மையங்களும் அடங்கும்.
இதனடிப்படையில் குறித்த கணக்கெடுப்பில் Melton நகரம் உள்ளடக்கப்பட்டதையடுத்து, மெல்பனின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மெல்பன் நகரம் சர்வதேச புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற மாநிலங்களில் வசிக்கும் ஆஸ்திரேலியர்களை ஈர்ப்பதன் காரணமாக, சமீபத்திய தசாப்தங்களில் மெல்பனின் மக்கள் தொகை, சிட்னியை விட வேகமாக வளர்ந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகளவான பன்முகத்தன்மை, வீட்டுவசதி உட்பட ஒப்பீட்டளவில் மலிவான வாழ்க்கைச் செலவு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் இரண்டும் சமமாக இருத்தல் போன்ற காரணிகள் மெல்பன் நகரை தனித்துவமாக்கியிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.