Latest

ஜனவரி 26: பூர்வீக குடி மக்களுக்கு அந்த நாள் உணர்த்துவது என்ன?

பல பூர்வீக குடியினர் தம் உயிரையும் உடமைகளையும் இழந்த நாட்களின் தொடக்க நாளாகவே ஜனவரி 26ஆம் நாள் பூர்வீக குடி பின்னணி கொண்டவர்களால் பார்க்கப்படுகிறது. பல நூற்றுக்கணக்கான ஆண்டு கால, இனவெறி அரசாங்க கொள்கைகளின் தொடக்கத்தை இந்த நாள் குறிக்கிறது. திருடப்பட்ட தலைமுறையினரைத் தோற்றுவித்ததும் இந்தக் கொள்கைகள் தான். இதனால் ஒரு சமுதாயம் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டுள்ளது. கடந்த ஒரு சில வருடங்களுக்கும் முன் ஆரம்பித்த, “நம் நாட்டின் அதிகார பூர்வ தேசிய தினமான இந்த தினத்தை வேறொரு நாள் கொண்டாடலாமே!” என்ற அழைப்பு தற்போது பெருகி வருகிறது. ஜனவரி 26ஆம் நாள் தற்போது பெரும்பாலும் படையெடுப்பு நாள், அல்லது உயிர்பிழைத்த நாள் அல்லது துக்க நாள் என்று குறிப்பிடப்படுகிறது.

GettyImages-1201929861 (1).jpg

A member of the Koomurri dancers holds up an Indigenous and Australian flag during the WugulOra Morning Ceremony on Australia Day at Walumil Lawns, Barangaroo on January 26, 2020 in Sydney, Australia.

பிரிட்டிஷ் கப்பல்கள் சிட்னி கடற்கரைகளில் தரையிறங்கி, “terra nullius” – அறுபத்தையாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூர்வீக குடி மக்கள் இங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதையே அவர்கள் மறைத்து விட்டு, இந்த மண்ணில் மக்கள் யாரும் குடியிருக்கவில்லை என்ற புனை கதையைப் பரப்பி, இந்த நாட்டையே பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தியதைக் குறிக்கும் நாள் ஜனவரி 26ஆம் நாள். இந்த நாள், தற்போது அதிகார பூர்வ தேசிய தினம். ஆனால், பல பூர்வீகக் குடி மக்களுக்கும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களுக்கும் இது கொண்டாடுவதற்கான நாள் அல்ல.

துக்க தினம்
இந்நாட்டில் குடியமரும் நோக்கத்துடன் பிரிட்டிஷ் கப்பல்கள் வந்திறங்கிய 150ஆவது ஆண்டு நிறைவு 1938ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட போது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் சிட்னி தெருக்களில் அணிவகுத்துச் சென்றது. William Cooper என்பவர் தலைமையிலான (Australian Aborigines League) ஆஸ்திரேலிய பூர்வீக குடிமகள் கழகம், Jack Patten மற்றும் William Ferguson தலைமையிலான (Aborigines Progressive Movement) பூர்வீக குடி மக்கள் முற்போக்கு இயக்கத்துடன் இணைந்து இந்த அணிவகுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெரியளவில் ஒழுங்கமைக்கப்பட்ட உலகின் முதல் மனித உரிமைகள் கூட்டங்களில் அதுவும் ஒன்று. அன்றைய தினத்தை, Day of Mourning - இரங்கல் தினம் அல்லது துக்க தினம் என்று அதன் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் அறிவித்தார்கள்.

தங்கள் மக்களுக்கு எதிரான அப்போதைய தப்பெண்ணத்தையும் பாகுபாட்டையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இந்த தலைவர்கள் எடுத்த ஜனநாயக செயல் முறைகள் மூலம் முயற்சிகள் அரசின் எதிர்ப்பைச் சந்தித்தன. துக்க தினம் என்று அறிவித்து, பூர்வீக குடி மக்கள் தவறாக நடத்தப்படுவதை எதிர்க்கவும், மற்றும் பூர்வீக குடி மக்களுக்கு முழு உரிமைகள் வழங்கப்படுவதற்கும் அவர்கள் விரும்பினார்கள்.

“நடைமுறையை மாற்ற இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதற்காக நாம் கடினமாகப் போராட வேண்டும். சம வாய்ப்பு வழங்கப்பட்டால், மற்றவர்கள் போல் பெருமையுடன் பூர்வீக குடிமக்களும் வாழ முடியும் என்பது எனக்குத் தெரியும். பூர்வீக குடி மக்களின் முன்னேற்றத்திற்கு, நாடு முழுவதும் நாம் அனைவரும் ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும்,” என்று William Cooper கூறினார்.

தங்கள் நாட்டை இழந்ததற்கு, அவர்களின் சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை பறி போனதற்கு, மற்றும் காலனித்துவ ஆட்சியில் தங்கள் உறவுகளில் பலர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதன் மூலம் அவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

“இந்த நாளில் வெள்ளையின மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், ஆனால் பூர்வீக குடி மக்களாகிய எங்களுக்கு ஆஸ்திரேலியாவின் 150வது பிறந்த நாளில் மகிழ்ச்சியடைவற்கு எந்தக் காரணமும் இல்லை. பூர்வீக மக்கள் இந்த நாட்டில் இழி நிலையில் வாழ்கிறார்கள் என்பதை வெள்ளையின மக்களுக்கு எடுத்துச் சொல்வதே நாம் இங்கு கூடியிருப்பதன் நோக்கமாகும்.”

“நாங்கள் பின் தள்ளப்படுவதை ஏற்க மறுக்கிறோம். இது குறித்துக் கேள்வி கேட்பதென்று நாம் முடிவு செய்துள்ளோம். பூர்வீக குடி மக்கள் வெள்ளையினத்தவரிலும் தரம் குறைந்தவர்கள் அவர்கள் பாசாங்கு செய்கிறார்கள். எம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். அதற்கு எங்கள் பதில் – “எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்!” நாடு முன்னேறும் போது நாங்கள் பிந்தள்ளப்படுவதை நாம் விரும்பவில்லை. எங்கள் குடியுரிமைகளை நாம் கேட்கிறோம்,” என்று Jack Patten கூறினார்.

சிட்னியிலுள்ள Australia Hall என்ற மண்டபத்தில் ஒரு மாநாடு நடத்தப்பட்டதுடன், துக்க தின ஆர்ப்பாட்டங்கள் முடிவடைந்தது. தேசிய அளவில் ஒருங்கிணைந்து பூர்வீக குடி மக்கள் நடத்திய முதல் நிகழ்வு என்றும், நவீன கால, பூர்வீக குடிமக்களின் உரிமை இயக்கத்தின் தொடக்கப் புள்ளி என்றும் கருதப்படுகிறது.

“நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நான் பயணம் செய்துள்ளேன், தொலைதூர இடங்களுக்கும் பயணம் செய்துள்ளேன். பூர்வீக குடி மக்கள் வாழ்வதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள ‘Aborigines Reserves’ என்ற இடங்களையும் பார்வையிட்டுள்ளேன். அத்தகைய குடியிருப்புக்களில் எங்கள் மக்களின் மோசமான நிலையை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன் ... இது குறித்துக் குரல் எழுப்பவும், நடவடிக்கை எடுக்கவும் நேரம் வந்துவிட்டது. இதனால்தான் பூர்வீக குடி மக்கள் முற்போக்கு இயக்கம் உருவாக்கப்பட்டது,” என்று William Ferguson கூறினார்.

காலப் போக்கில், இந்த துக்க தினம், பூர்வீக குடி மக்களுக்கும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களுக்கும் ஒரு வருடாந்திர நிகழ்வாக மாறியது. அதன் முன்னெடுப்பில் பல மாற்றங்களுக்கு – 1967ஆம் ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பு உட்பட பல சீர்திருத்தங்களுக்கும் வழிவகுக்குத்தது.

கூடாரத் தூதரகம்

அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கூடாரத் தூதரகம், கான்பராவிலுள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு முன் 1972ஆம் ஆண்டு ஜனவரியில் அமைக்கப்பட்டது. பெரிய குடைகளை நாடாளுமன்றத்தின் முன் வளாகத்தில் விரித்து, நான்கு பேர் ஆரம்பித்த எதிர்ப்புத் தெரிவிக்கும் இந்தப் புதிய வழி, சர்வதேச அங்கீகாரத்தை அடைந்ததுடன் பூர்வீக குடி மக்கள் உரிமைகளைக் கோரும் இயக்கத்தை மீண்டும் புதுப்பித்ததுடன் நில உரிமைகளின் முக்கிய அணிவகுப்பாக மாறியது. 
Pic Radio Redfern.jpg
Radio Redfern was the main source of information for people wanting to join the protests. The broadcast included interviews and music from First Nations artists.

இருநூறாம் ஆண்டு விழா எதிர்ப்புகளும் உயிர்பிழைத்த நாளும்

இந்நாட்டில் குடியமரும் நோக்கத்துடன் பிரிட்டிஷ் கப்பல்கள் வந்திறங்கிய 200ஆவது ஆண்டு நிறைவு 1988ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் பெரு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் பொதுவானதாக, வாழ்க்கையின் பகிரப்பட்ட நேர்மறையான அனுபவத்தை சித்தரிக்கும் வகையில் இந்த விழா ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதனை சமன்செய்ய, பூர்வீக குடிமக்களும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தனர். வியட்நாம் போருக்குப் பின்னர் நாட்டின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக சிட்னி நகரில் 40 000ற்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் அணிதிரண்டனர்.

பூர்வீக பின்னணி மக்களுக்கு நில உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்த காலம் அது. அத்துடன், பல பூர்வீக குடி மக்களின் (1987-1991 காலப் பகுதியில் நிகழ்ந்த) இறப்புகள் குறித்த Royal Commission விசாரணை நடந்து கொண்டிருந்த பின்னணியில் இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன.

ஜனவரி 26ஆம் நாள் ‘படையெடுப்பு நாள்’ என்று மறு பெயரிடப்பட்டு, ஆஸ்திரேலியா தினமாக அந்த நாளைக் கொண்டாடுவதற்கான தங்கள் எதிர்ப்பை பூர்வீக குடி மக்களும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களும் அறிவித்தார்கள். “வெள்ளை ஆஸ்திரேலியாவுக்கு ஒரு கறுப்பு வரலாறு உள்ளது,” “1988 ஐ கொண்டாட வேண்டாம்” மற்றும் “ஆஸ்திரேலியா தினம் = படையெடுப்பு நாள்” என்ற பதாகைகளை அவர்கள் தாங்கிச் சென்றார்கள்.

“வெள்ளையினத்தவர் இந்த நாட்டிற்கு வந்தது குறித்து பூர்வீக குடிமக்கள் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை. இன்றைய நாளில் நாம் உயிர்பிழைத்தது குறித்துக் கொண்டாடுகிறோம். எந்தவொரு, நியாயமான எண்ணம் கொண்ட ஆஸ்திரேலியரும் வெள்ளையர்கள் வருகையில் கொண்டாடுவதற்கு எதுவும் இருப்பதாக உணர்வார்கள் என்று நாங்கள் வாதிடுவோம், ஏனென்றால் அது இனப்படுகொலை, பூர்வீக நிலத்தின் அழிவு மற்றும் கலாச்சாரத்தின் அழிவு மற்றும் இந்நாட்டில் காயம், வலி மற்றும் துயரம் மட்டுமின்றி நோய்களும் கொண்டு வரப்பட்டதன் தொடக்கத்தைக் குறித்தது” என்று NSW மாநில பூர்வீக நில உரிமைகள் சட்டத்தின் பதிவாளரும் மார்ச் 88 குழுவின் உறுப்பினருமான Chris Kirkbright கூறினார்.

“இந்த நாளை நாங்கள் இன்று கொண்டாட விரும்புகிறோம். நாங்கள் உயிர் பிழைத்ததைக் கொண்டாட விரும்புகிறோம், எங்கள் கலாச்சாரத்தைக் காட்சிப் படுத்த விரும்புகிறோம்.”

என்ற இந்தக் கருத்துக்கள் மற்றவர்களாலும் எதிரொலிக்கப்பட்டன. அந்தக் குரல்கள் Radio Redfern வானொலியிலும் ஒலித்தன. “இது எங்கள் துக்க நாள் என்று நான் நினைக்கிறேன், அதே வேளை, எங்கள் கொண்டாட்ட நாளும்தான். நாங்கள் 200 ஆண்டு கால வெள்ளையின படையெடுப்பிலிருந்து தப்பியுள்ளோம்” என்று ஒரு எதிர்ப்பாளர் கூறினார்.

சமீபத்திய ஆண்டுகளில், நாடு முழுவதும் ஆஸ்திரேலிய தினத்தை, ஜனவரி 26 அல்லாத இன்னொரு தினமாக மாற்ற வேண்டுமென்று அழைப்பு வலுத்து வருகிறது.

நாடு முழுவதும் படையெடுப்பு தினப் பேரணிகளில் கலந்து கொள்ளும் மக்கள் அதிகளவில் கலந்துகொள்வதன் மூலம், தேதி மாற்ற இயக்கத்திற்கு வழங்கப்படும் ஆதரவு அதிகரித்து வருகிறது.






SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




    Share
    Published 27 January 2023 7:06am
    Updated 27 January 2023 9:20am
    By Kulasegaram Sanchayan, Bertrand Tungandame
    Source: SBS


    Share this with family and friends