ஆஸ்திரேலிய தினமா? அந்நியர் ஊடுருவிய தினமா?

Getty Images

Getty Images Source: Getty Images

ஆஸ்திரேலிய கண்டத்தில் குடியேறவென 1788 ஆம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி பிரிட்டன் நாட்டவர் கப்பலில், சிட்னியில் முதன் முதல் வந்திறங்கிய தினமே ஆஸ்திரேலிய தினம் ஆகும். அந்தவகையில் ஜனவரி 26ம் திகதியன்று ஆஸ்திரேலியா தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டாலும், எமது நாடு எம்மிடமிருந்து களவுபோன தினம் அல்லது எமது நாட்டை அன்னியர் ஊடுருவிய தினம் Invasion Day என்று ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களில் பல அமைப்புகள் இந்த நாளை அனுசரிக்கின்றன.


முதலாவது ஆஸ்திரேலியா தினம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிறிய ஒன்றுகூடலாக சிட்னியில் நடத்தப்பட்டிருந்தது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் பெருமளவான ஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்ததையடுத்து இங்கு ஏற்கனவே வாழ்ந்தவர்களையும் புதிதாக குடியேறியவர்களையும் இணைப்பதற்கான வழி ஒன்றை ஏற்படுத்துவது அவசியம் என பெடரல் அரசு கருதியது.

இதைத்தொடரந்து 1988ம் ஆண்டு நாட்டின் இனைத்து மாநில மற்றும் பிராந்திய அரசுக்கள் ஜனவரி 26ம் திகதியை ஆஸ்திரேலிய தினமாக கொண்டாடுவது என முடிவெடுத்த அதேநேரம் 1994ம் ஆண்டு முதலே  இத்தினம் பொது விடுமுறை நாளாக்கப்பட்டது.
Australia Day
Source: SBS
ஆஸ்திரேலியா தினம் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறிவிட்டதாக இத்தினத்தையொட்டிய கொண்டாட்டங்களை மேற்பார்வை செய்யும் The National Australia Day Council  அமைப்பின் தலைவர் Chris Kirby தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா தினம் பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகின்றது. பலர் தமது குடும்பத்துடன் சேர்ந்து வெளியில் சென்றோ அல்லது நிகழ்வுகளுக்குச் சென்றோ கொண்டாடுவர்.

அது தவிர ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கும் நிகழ்வு அன்றையதினம் நடப்பதுண்டு. ஆஸ்திரேலியாவின் பல்கலாச்சாரத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த நாள் தெரிவுசெய்யப்பட்டதாகச் சொல்கிறார் Chris Kirby.

அதுமட்டுமல்லாமல் இத்தினத்தையொட்டி நாட்டில் பலவேறு துறைகளில் சாதித்த மற்றும் பங்களிப்பு செய்தவர்களுக்கான விருதுகள் பிரதமரால் வழங்கப்படுவதும் வழக்கமாகும்.

ஆனால் ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களில் பலர் இந்த ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாடுவதில்லை என்றும்  அன்னியர் ஊடுருவிய தினமாகவே இதைப் பார்ப்பதாகவும் சொல்கிறார் பூர்வகுடியின பின்னணி கொண்ட Dr Chelsea Bond.

ஆஸ்திரேலிய தினத்தை வேறொரு திகதியில் கொண்டாடுவது பொருத்தமானதாக இருக்குமெனவும் Dr Chelsea Bond கூறுகிறார்.

இதேவேளை ஆஸ்திரேலிய தினம் என்பது தற்போதைய சமூகத்தை பிரதிபலிக்கும் ஒன்றாக மாறிவிட்டதென சரித்திர ஆய்வாளர் Dr Elizabeth Kwan கூறுகிறார்.








Share