பிரிஸ்பேனில் Diploma கற்கைநெறியை மேற்கொண்டுவந்த அபின் பிலிப் என்ற மாணவர், கடந்த திங்கள்கிழமை Sunshine Coast-இலுள்ள Gardener நீர்வீழ்ச்சியில் மூழ்கி மரணமடைந்தார்.
இந்தியா கேரளாவைச் சேர்ந்த அபின் பிலிப், குயின்ஸ்லாந்தின் தென்கிழக்கில் உள்ள இந்த பிரபலமான நீர்வீழ்ச்சியில் மற்ற இரண்டு நண்பர்களுடன் விடுமுறையைக் கழிக்கச்சென்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீர்வீழ்ச்சியில் நீந்திய பிறகு பிலிப் காணாமல் போனதாக Sunshine Coast கேரள சங்கத்தின் தலைவர் செபாஸ்டியன் சஜீஷ் தெரிவித்தார்.
காணாமல் போன நபரைப் பற்றிய தகவல் திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் கிடைத்ததாகவும், சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புக் குழுவினர் அவரது சடலத்தை மீட்டதாகவும் குயின்ஸ்லாந்து பொலிஸார் SBS மலையாளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் பதிலில் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கு இடமில்லாத இச்சம்பவம் குறித்து மரண விசாரணை அதிகாரி விரைவில் அறிக்கையை வெளியிடுவார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை "அபின் பிலிப் சமூகத்தில் மிகவும் விரும்பப்பட்ட உறுப்பினராகவும், மிகவும் பிரபலமானவராகவும் இருந்தார், ஒரு சிறந்த கால்பந்து வீரர் மற்றும் திறமையான புகைப்படக் கலைஞராகவும் இருந்தார்." என Sunshine Coast கேரள சங்கத்தின் தலைவர் செபாஸ்டியன் சஜீஷ் தெரிவித்தார்.
அபின் பிலிப்பின் உடலை தாயகம் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதேநேரம், இதற்கென GoFundMe ஊடாக நிதி சேகரிக்கப்பட்டுவருகின்மை குறிப்பிடத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க, ஆஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இறப்பவர்களில் இந்திய பின்னணிகொண்டோர் அதிக எண்ணிக்கையில் காணப்படுவதாக, புதிய அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில் சர்வதேச மாணவர் சமூகத்திலிருந்து பல இறப்புகள் பதிவாகியுள்ளன.
"ஆஸ்திரேலியாவிலுள்ள மேலும்பல சமூக அமைப்புகள் புதிதாக வந்துள்ள புலம்பெயர்ந்தோர் மற்றும் மாணவர்களுக்கு நீர்நிலைகளில் பாதுகாப்பாக இருப்பது குறித்த விழிப்புணர்வு திட்டங்களை வழங்க வேண்டும்" என சிட்னியில் உள்ள மலையாளி சமூக உறுப்பினர் ஷாபு தாமஸ் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம் நீர்நிலைகளைச்சுற்றிக் காணப்படும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14.More information and support with mental health is available at
and on 1300 22 4636.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்