சிறுவர்களுக்கு மீண்டும் Covid தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம்

சிறுவர்களின் நோயெதிர்ப்பு, பெரியவர்களைப் போல தொற்றிய வைரஸை நினைவில் வைத்துக் கொள்ளாது என்பதால், அவர்கள் மீண்டும் தொற்றுக்கு ஆளாகும் போது நோய்த்தொற்று அவர்களுக்கு மீண்டும் ஏற்படும் அபாயம் இருப்பதாக சிட்னியில் உள்ள Garvan Research Institute என்ற ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கண்டறிந்துள்ளனர்.

Children sitting at desks listening to teacher holding digital tablet

Primary school students in a classroom. Credit: JohnnyGreig/Getty Images

“குழந்தைகளுக்கு இரண்டு வகையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது” என்ற கருத்துடன் ஆரம்பிக்கிறார் இந்த ஆய்வை முன்னெடுத்த பேராசிரியர் Tri Phan.
முதலாவது, பிறவியிலேயே இயற்கையாக வருவது. இந்தப் பாதுகாப்பு பொதுவாகக் குழந்தைகளில் ‘மிகவும் வலிமையானது’ என்பதுடன், பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொல்ல interferons எனப்படும் இரசாயனங்களை அவர்கள் உடலில் உருவாக்குகிறது.
அடிப்படையில் வியாதிகளும் இல்லாத பெரும்பாலான குழந்தைகளுக்கு COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டால், இலேசான அறிகுறிகள் தோன்றும் என்றும் பெரியவர்களை விட, நோய்த் தொற்றிலிருந்து அவர்கள் விரைவாக குணமடைவார்கள் என்றும் பேராசிரியர் Tri Phan கூறினார்.
இருப்பினும், வயது ஏற ஏற, இந்த உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு குறைகிறது என்றார் அவர்.
Tri Phan.png
Tri Phan is a Conjoint Professor at St Vincent's Clinical School, UNSW Medicine and Health. Credit: Garvan Institute of Medical Research
இரண்டாவது வகை நோய் எதிர்ப்பு சக்தி, சூழ்நிலைக் கேற்ப மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளும் தகவமைப்பால் உருவாகிறது. இது, முக்கியமாக B மற்றும் T செல்களைக் கொண்டிருக்கும். உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியின் முதல் வரிசை பாதுகாப்பு மீறப்படும் போது, அந்தப் பொறுப்பை இந்த நோய் எதிர்ப்பு சக்தி தன் கைகளில் எடுத்துக் கொள்கிறது.
B செல்கள் antibody எனப்படும் பிறபொருளெதிரிகளை உருவாக்குகின்றன. இதே வேளை, மனித உடலுக்குள் இனப்பெருக்கம் செய்வதைத் தடுப்பதற்காக T செல்கள் வைரஸ்-பாதிக்கப்பட்ட செல்களைக் கொல்லும்.
“குழந்தைகளின் உள்ளார்ந்த நோயெதிர்ப்பு அமைப்பு மிகவும் வேகமாக செயல்படுவதாலும், மிகவும் சக்தி வாய்ந்தது எபன்பதாலும், அது வைரஸை விரைவாக அகற்றி விடுகிறது. இதனால், B மற்றும் T செல்கள் தகவமைப்பு நினைவகத்தை உருவாக்கப் போதிய நேரம் கிடைப்பதில்லை,” என்று பேராசிரியர் Tri Phan, SBSஇடம் கூறினார்.
சிறுவர்கள் மீண்டும் கோவிட் தொற்றுக்கு ஆளாகும்போது, அவர்களின் உடல்கள் வைரஸை நினைவில் கொள்வதில்லை; அத்துடன், அதை ஒரு புதிய அச்சுறுத்தலாகக் கருதுகின்றன
பேராசிரியர் Tri Phan
“சிறுவர்களுக்கு நோய்த்தொற்று மீண்டும் ஏற்படும் போது, அவர்கள் நோய்வாய்ப்படும் ஆபத்து அதிகமாக உள்ளது. அதனால்தான் சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவது முக்கியம் என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று பேராசிரியர் Tri Phan கூறினார்.

தொற்று மீண்டும் ஏற்படுவதால் வரும் ஆபத்து

Covid-19இன் மாறுபாடுகளும் சிறுவர்களை மீண்டும் பாதிக்கலாம் என்று குழந்தை தொற்று நோய் நிபுணரும் நுண்ணுயிரியலாளருமான பேராசிரியர் Brendan McMullan கூறினார்.
“ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கிறது. அதே போல் கடுமையான நோய் வரும் அதிக ஆபத்தில் உள்ள (ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையுள்ள) குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்படுகிறது” என்று பேராசிரியர் Brendan McMullan கூறினார்.
நாட்டிலுள்ள 2.2 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்களுக்கு Covid தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையின் தரவுகள் காட்டுகின்றன, இதில் அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஐந்து வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகள். அத்துடன், தொற்றுநோய் பரவத் தொடங்கியதிலிருந்து 24 பேர் இதனால் இறந்துள்ளனர்.
தொற்று மறுபடி வருபவர்கள் குறித்துத் தனியாகத் தரவுகள் நம் நாட்டில் தொகுக்கப்படவில்லை.
ஆனால், ஒருவரின் வயது, முன்னர் எப்பொழுது தொற்று ஏற்பட்டது, எந்த மாறுபாடு, அவரின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசி போன்ற பல காரணிகளைப் பொறுத்து ஒருவருக்குத் தொற்று மீண்டும் ஏற்படும் ஆபத்தின் அளவு இருக்கிறது.
“பெரியவர்களை விட சிறுவர்களுக்கு SARS-CoV-2 மறுதொற்றின் ஆபத்து குறைவாக இருப்பதாகச் சில ஆய்வுகள் காட்டுகின்றன.”
“இருப்பினும், பல்வேறு வயதினருக்கு COVID-19 தொற்று திரும்புவது குறித்து மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது, இதில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் தாக்கம் மற்றும் பல்வேறு திரிபுகள் / பரவும் தொற்று அலைகளின் விளைவு ஆகியவை அடங்கும்.”
அமெரிக்காவில் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் 2022ஆம் ஆண்டு ஜூலைக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், தொற்று நோயால் குழந்தைகளின் இறப்பிற்கு முதன்மையான காரணம் COVID-19 தான் என்பதை JAMA Network Open வெளியிட்ட ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது.
“அமெரிக்காவில் 940,000ற்கும் அதிகமானோர் இறப்பதற்கு COVID-19 அடிப்படைக் காரணமாகும், இதில் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே 1,300 பேர் இறந்துள்ளனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கவனக்குறைவு 

தொற்று ஏற்பட்டாலும் சிறுவர்கள் இலேசான அறிகுறிகளை மட்டும் காட்டுவதாலும், COVID-19 தொற்றிலிருந்து விரைவாகக் குணமடைகிறார்கள் என்பதாலும், பெற்றோர் கவனக் குறைவாக இருப்பதாகப் பேராசிரியர் Tri Phan கூறினார்.
ஐந்து முதல் 15 வயது வரையிலான சிறுவர்களில் 51 சதவீதமானவர்கள் மட்டுமே தடுப்பூசியின் இரண்டாவது சுற்றைப் பெற்றுள்ளனர் என்று சுகாதாரத் துறையின் சமீபத்திய தரவு காட்டுகிறது.
சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவது ஒரு நல்ல யோசனை என்று பேராசிரியர் Tri Phan கூறினார். (தொற்று மற்றும் தடுப்பூசி மூலம் ஏற்படும்) கலப்பு வகை நோய் எதிர்ப்பு சக்தி, கடுமையான நோய்களிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்குவதாகவும், Covid-19 தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான தேவையை நீக்குவதாகவும் தரவுகள் காட்டுகின்றன.



உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 6 February 2023 2:52pm
By Kulasegaram Sanchayan, Sahil Makkar
Source: SBS


Share this with family and friends