உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அவசர நிலைக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் எப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவெடுப்பார்.
சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய இந்தக் குழு, Covid-19 தொற்று பரவல் உலகின் பல பாகங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 12 முறை கூடியுள்ளது.
Covid-19 பெருந்தொற்று உலக மக்களைத் தொடர்ந்து பாதிக்கிறது என்றும் சர்வதேச அளவில் பரவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்றும் ஒருங்கிணைந்த சர்வதேச தீர்வு இதற்குத் தேவை என்றும் கடந்த ஜூலை 8ஆம் தேதி நடந்த கூட்டத்தில் இந்தக் குழு ஒருமனதாக ஒப்புக் கொண்டது.
WHO எடுத்துள்ள முடிவு, ஆஸ்திரேலியா உட்பட இதில் பங்கேற்கும் 190ற்கும் மேற்பட்ட நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும்.
மக்களின் நடத்தை, பொருளாதார தாக்கம், இறப்பு மற்றும் நோயுற்ற தன்மை போன்ற விடயங்கள் தான் தற்போதைய பெருந்தொற்று நோயின் தலைவிதியைத் தீர்மானிக்கும் என்று NSW இல் உள்ள மருத்துவ நோயியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி (Institute of Clinical Pathology and Medical Research) நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் Stephen Li, கூறினார்.

Australia is preparing for a fresh wave from Omicron's two new sub-lineages, BA.5 and BA.4. Source: AAP Image/Joel Carrett
பெருந்தொற்று முற்றுக்கு வந்துவிட்டது என்று தற்போது கூறுவது பொருத்தமற்றது என்கிறார் அவர்.
வைரஸின் வீரியம் மாறாத வரையும், இன்னும் சிறந்த, குறிப்பிட்ட தடுப்பூசிகள் மற்றும் நோயெதிர்ப்பு மருந்துகள் எம்மிடம் தயாராகும் வரையில் இந்த வார்த்தையை நாம் கேட்க முடியாது.
Covid-19 வைரஸ் பல தடவைகள் உரு மாறியுள்ளது என்பதை WHO மற்றும் உலகெங்கிலும் செய்யப்பட்ட பல ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், வைரஸ் அதன் வீரியத்தை இழக்கவில்லை. தொடர்ந்தும் இந்த வைரஸ் கடுமையான நோய்களையும் மரணங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
நம் நாட்டில், டெல்டா திரிபு அல்லது மூன்றாவது அலை, முந்தைய இரண்டு அலைகளை விட அதிகமான இறப்புகளை ஏற்படுத்தியது. அத்துடன், நோய்த்தொற்று கண்ட மிக அதிகமானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது மட்டுமின்றி அதிகப்படியானவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார்கள் என்று Monash பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே இரண்டு புதிய துணைத் திரிபுகள் - BA.5 மற்றும் BA.4 ஆகியவற்றை ஏற்படுத்திய Omicron திரிபு, இன்னுமொரு புதிய அலைக்கு தயாராகி வருகிறது. புதிதாக தொற்று கண்டவர்கள், மீண்டும் நோய்த்தொற்று கண்டவர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள், மற்றும் இதனால் இறப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
பெருந்தொற்று நோய் முடிவுக்கு வர இன்னும் வெகு காலம் உள்ளது என்று WHO இன் COVID-19 தொழில்நுட்பத் தலைவர் டாக்டர் Maria Van Kerkove நம்புகிறார்.
“நெருப்பு விளையாடுவதைப் போல நாங்கள் இந்த வைரஸைக் கையாள்கிறோம்... COVID-19 பெருந்தொற்று ஒழிந்தது என்று உலகமக்கள் கூற விரும்பிகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் இதுபோன்ற தீவிரமான தொற்று பரவல், அதிக மாறுபாடுகளுக்கு வழிவகுக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.
paxlovid மற்றும் molnupiravir போன்ற வாய்வழி மருந்துகள் COVID-19 தொற்று ஏற்பட்டவர்கள் கடுமையான நோய்களுக்குள்ளாவதையும் இறப்பதைத் தடுப்பதிலும் நம்பிக்கை தரும் விளைவுகளைக் காட்டியுள்ளன.
Omicron மற்றும் எதிர்கால மாறுபாடுகளை இலக்காகக் கொண்ட தடுப்பூசிக்கான சோதனையை அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர். pfizer மற்றும் Moderna போன்ற பெரிய நிறுவனங்களும் இதே போன்ற தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருகின்றனர்.
COVID-19 தொற்றினால் அதிக ஆபத்து ஏற்படக்கூடியவர்களுக்கு வருடாந்திர தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்படலாம்.
காலப்போக்கில் Covid-19 தொற்றுநோய் மேலுமொரு தொற்று நோய் என்ற நிலைக்கு மாறும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
நீண்ட கால கோவிட் மற்றும் கோவிட்-19ற்குப் பிந்தைய கோவிட் என்றும் அழைக்கப்படும் பாதிப்புகள் குறித்து சுகாதார அதிகாரிகள் ஏற்கனவே கவலையடைந்துள்ளனர்.
Long Covid என்பது பொதுவாக SARS CoV-2 நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நபர்களுக்கு நோய்த்தொற்று தோன்றிய மூன்று மாதங்களுக்குப் பிறகு ஏற்படும் அறிகுறியாகும்.
பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தொற்றுநோய் ஒருபோதும் முடிவடையாது என்று கூறப்படுகிறது.
பொது மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கடந்து நீண்ட காலத்திற்குப் பிறகும் அவர்கள் நோய்வாய்ப்படலாம் என்றும் கவலைகள் நீடிக்கின்றன.