நிதிநிலை அறிக்கை 2023: JobSeeker, நலன்புரி உள்ளிட்ட கொடுப்பனவுகள் அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவின் 2023-24ம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி JobSeeker கொடுப்பனவு வாடகை உதவி மற்றும் single-parent கொடுப்பனவு உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளன.

Dollars and dollars (AAP)

Dollars and dollars (AAP) Source: AAP

JobSeeker கொடுப்பனவு பெறுகின்ற சுமார் 900,000 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் இருவாரங்களுக்கான(fortnightly) கொடுப்பனவாக 40 டொலர்களை கூடுதலாக பெறவுள்ளனர்.

அதாவது குழந்தை இல்லாத ஒரு நபர் எனில், அவருக்கு இருவாரங்களுக்கு 730 டொலர்களுக்கு மேல் கிடைக்கும்.

அதேநேரம் இருவாரங்களுக்கான கூடுதல் 40 டொலர்கள் கொடுப்பனவு, Youth Allowance, Austudy மற்றும் பிற அரச கொடுப்பனவு பெறுபவர்களுக்கும் கிடைக்கவுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை கிடைப்பது கடினம் என்ற அடிப்படையில், JobSeeker ஊடாக இவர்களுக்கு அதிக கொடுப்பனவு வழங்கப்படும்பின்னணியில், இந்த வயது வரம்பு 55 ஆக குறைப்படுகிறது. இவர்களுக்கான கொடுப்பனவு வாரத்திற்கு 46 டொலர்களால் அதிகரிக்கப்படுகிறது.

நிநிநிலை அறிக்கை வெளியாவதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டதைப்போலவே, single-parent கொடுப்பனவு தொடர்பில் சலுகை கிடைக்கவுள்ளது.

இதன்படி single-parent கொடுப்பனவு தற்போது ஒரு குழந்தை 8 வயதானதும் நிறுத்தப்படுகின்றநிலையில், இது இனி குழந்தை 14 வயது ஆகும்வரை தொடரவுள்ளது.

Commonwealth Rent Assistance-அரசின் வாடகை உதவிப் பணத்தைப் பெறுபவர்கள் இந்த நிதிநிலை அறிக்கையின் ஊடாக 15 வீத அதிகரிப்பைப் பெறவுள்ளனர்.

அதாவது இருவாரங்களுக்கான கொடுப்பனவாக தற்போதுகிடைக்கும் தொகையுடன் சேர்த்து மேலதிகமாக 31 டொலர்களை இவர்கள் கூடுதலாக பெறவுள்ளனர் - இது 30 ஆண்டுகளுக்குப்பின்னர் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அதிகரிப்பு என கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers குறிப்பிட்டுள்ளார்.

16 வயதிற்குட்பட்டவர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பிற Commonwealth concession அட்டை வைத்திருப்பவர்கள், மருத்துவர்களை இலவசமாக(bulk bill) பார்வையிடுவதற்கு ஏதுவாக, குடும்ப மருத்துவர்களுக்கு மும்மடங்கு bulk billing ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

ஓய்வூதியம் பெறுவோர், முன்னாள் இராணுவவீரர்கள், concession அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் அரச ஆதரவு கொடுப்பனவுகளில் உள்ளவர்களுக்கு, 500 டொலர்கள் வரை மின்சார கட்டண சலுகை வழங்கப்படும். சிறு வணிகங்களுக்கும் 650 டொலர்கள் வரை மின்சார கட்டண சலுகை வழங்கப்படும்.

எதிர்பார்க்கப்பட்டதைப்போலவே முதியோர் பராமரிப்புப் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வுக்கு 11.3 பில்லியன் டொலர்களை ஒதுக்க அரசு உறுதியளித்துள்ளது.

இதன் விளைவாக, முதியோர் பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஒரு registered nurseக்கான ஊதியம் தற்போது கிடைப்பதைவிடவும் ஆண்டுக்கு 10,000 டொலர்களுக்கும் அதிகமாகவும்,enrolled nurseக்கு 7,500 டொலர்களுக்கும் அதிகமாகவும் உயரும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 9 May 2023 8:43pm
Updated 9 May 2023 9:17pm
Presented by Renuka
Source: SBS

Share this with family and friends