குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதுள்ள ஊதியம் இல்லாத விடுப்புக்கு பதிலாக இப்புதிய ஊதியத்துடனான விடுப்பு நடைமுறைக்கு வருகிறது. பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து இந்த அறிவிப்பினை வெளியிட்டார். குறைந்தபட்சம் ஏழு மில்லியன் தொழிலாளர்கள் இதன்மூலம் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் தேவையானது காலப்போக்கில் குறைவடைந்து செல்லும் எனத் தான் நம்புவதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட முழுநேர, பகுதிநேர மற்றும் casual பணியாளர்கள் அனைவரும் 12 மாத காலத்தில் 10 நாட்கள் ஊதியத்துடனான விடுமுறையை அணுகுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆகும். அல்பானீஸ் அரசானது கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நெருங்கிய உறவினர்(பிள்ளைகள், பெற்றோர், தாத்தா, பாட்டி, பேரக்குழந்தை), தற்போதைய அல்லது முன்னாள் வாழ்க்கைத்துணை அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களால் வன்முறை, அச்சுறுத்தல் அல்லது பிற தவறான நடத்தைகளை அனுபவிக்கும் எந்தவொரு பணியாளருக்கும் ஊதியத்துடன் கூடிய குடும்ப வன்முறை விடுப்பு கிடைக்கும்.
குடும்ப வன்முறை கொடுப்பனவு எவ்வளவு?
பணியாளர் வேலையில் இருந்திருந்தால் எவ்வளவு சம்பாதித்திருப்பாரோ அதுவே கொடுப்பனவாக இருக்கும்.
குடும்ப வன்முறை கொடுப்பனவு எப்போது தொடங்குகிறது?
பெரும்பாலான பணியிடங்களில் பிப்ரவரி 1 முதல் இது நடைமுறைக்கு வருகிறது. சிறு வணிகங்களில் பணிபுரிவோருக்கு ஆகஸ்ட் 1 முதல் இது நடைமுறைக்கு வரும்.
இப்பணத்தை யார் கொடுக்கிறார்கள்?
குடும்ப வன்முறை தொடர்பிலான விடுமுறையை முதலாளிகளே வழங்க வேண்டும். இதனால்தான் சிறு வணிகர்களுக்கு இம் மாற்றத்திற்குத் தயாராவதற்கு அவர்களுக்குக் கூடுதலாக ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது.
குடும்ப வன்முறை விடுப்பு payslips - ஊதியச் சீட்டில் பதிவாகுமா?
இல்லை, ஊதியச் சீட்டில் அது பதிவாகாது. ஆனால் விடுப்பு நிலுவைகள் மற்றும் பணியாளர்கள் எடுத்த எந்த விடுமுறையையும் முதலாளிகள் பதிவு செய்ய வேண்டும்.
குடும்ப வன்முறை விடுப்பு எடுப்பது எப்படி?
ஊதியத்துடன் கூடிய குடும்ப வன்முறை விடுப்பு எடுக்கும் பணியாளர்கள் தங்கள் முதலாளிக்கு விரைவில் அதுபற்றித் தெரிவிக்க வேண்டும். முதலாளி தனது பணியாளரிடம் அதற்கான ஆதாரங்களைக் கேட்கலாம்.
குடும்ப வன்முறை விடுப்பினை வருடாவருடம் சேகரிக்கலாமா - accumulate?
இல்லை, விடுப்பு பயன்படுத்தப்படாவிட்டால் ஆண்டுதோறும் அது காலாவதியாகும்.
1800RESPECT (1800 737 732) எனும் இலக்கத்தில் தொடர்பு கொண்டு யிலிருந்து ஆதரவினைப் பெறுங்கள்.
ஆண்களுக்கான பரிந்துரை சேவையிலிருந்து(Men's Referral Service) உதவி பெற 1300 766 491 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் உடனடி ஆபத்தில் இருந்தால் 000 (triple zero)ஐ அழைக்கவும்.
———————————————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்