Key Points
- மெல்பனில் காணப்பட்ட காரின் படங்கள் குறித்து தங்களுக்குத் தெரியும் என்று விக்டோரியா பொலீஸ் கூறுகிறது.
- இந்த வாகனம் குறித்து பொலீஸாரிடம் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.
- CCP விமர்சகரும் லிபரல் கட்சி முன்னணி உறுப்பினருமான ஒருவர் இது சீன அரசின் செயலாக இருக்கலாம் என்று அஞ்சுகிறார்.
சீன பொலீஸாரின் வாகனம் போன்று தோற்றமளிக்கும் வகையில் பல்வேறு அதிகாரபூர்வமற்ற decals ஒட்டப்பட்ட நிலையில், மெல்பனில் அவதானிக்கப்பட்ட கார் ஒன்றின் புகைப்படம், வார இறுதியில் சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலான கவனத்தை ஈர்த்தது.
இந்த போலி சீன பொலீஸ் கார், இங்குள்ள சீன-ஆஸ்திரேலிய சமூகத்தின் உறுப்பினர்களை "மிரட்டவும், அவர்களது இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்தவும்" பயன்படுத்தப்படுகின்றன என்று எதிர்க்கட்சி கவலை வெளியிட்டுள்ளது.
ஆனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற Benjamin Herscovitch(Research Fellow at the Australian National University) இதில் வெளிநாட்டு தலையீடு இருப்பது சந்தேகமே எனவும், சமூகத்தை troll செய்வதற்காக யாரோ ஒருவர் மேற்கொள்ளும் விளையாட்டுத்தனமான செயல் எனவும் கூறுகிறார்.
காரின் ஓரத்தில் 'பொது பாதுகாப்பு அமைச்சகம்' என்றும், bonnetஇல் 'பொலீஸ்' என்றும், சீன எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன.
இந்த படங்கள் பற்றி அறிந்திருப்பதாகவும், ஆனால் இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும் விக்டோரியா பொலீஸ் கூறியுள்ளது.
"இந்த நேரத்தில் குறிப்பிட்ட விடயத்தில் குற்றங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பாக தங்களுக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை" என்றும் விக்டோரியா பொலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் SBS Newsஇடம் தெரிவித்தார்.
இது ஆஸ்திரேலியாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) "அதிக ஆர்வமுள்ள" ஆதரவாளரின் செயலாக இருக்கலாம் எனவும், வெளிநாட்டு தலையீடுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம் என்றும், எதிர்க்கட்சியின் உள்துறை விவகாரங்களுக்கான செய்தித் தொடர்பாளர் James Paterson தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று மெல்பன் 3CR வானொலியிடம் பேசிய செனட்டர் Paterson, ஆஸ்திரேலியாவில் உள்ள சீன புலம்பெயர்ந்தோரை மிரட்டுவதே நோக்கமாக இருக்கலாம் எனத் தான் அஞ்சுவதாக கூறினார்.
இதேவேளை மெல்பனில் காணப்பட்டது போன்று போலி லேபிள்களுடன் மற்றொரு வாகனம், NSW இன் தெற்கு கரையில் அவதானிக்கப்பட்டுள்ளது.
'சிறப்பு போலீஸ்' மற்றும் ''settled in Australia' என்ற சொற்றொடர்களுடன் மாண்டரின் எழுத்துக்கள் வாகனத்தின் வெளிப்புறத்தில் எழுதப்பட்டுள்ளன.
சீன பொலீஸ் லேபிள்களைக் கொண்ட இதுபோன்ற கார்கள் ஆஸ்திரேலியாவில் காணப்படுவது இது முதல் முறை அல்ல.
2019 இல் அடிலெய்ட் மற்றும் பெர்த்தில் இரண்டு கார்கள் இவ்வாறு காணப்பட்டதாக ABC News தெரிவித்துள்ளது. குறித்த கார் உரிமையாளர்களில் ஒருவர் இது ஒரு "நகைச்சுவை" என குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்திய ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இரண்டு இரகசிய சீன பொலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான Safeguard Defendersஇன் கடந்த ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த வாகனங்கள் தொடர்பில் கருத்துக்களைப் பெறுவதற்காக, SBS News ஆஸ்திரேலிய பெடரல் பொலீஸாரைத் தொடர்பு கொண்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.