பெடரல் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு பல்லாயிரக்கணக்கான மின்னஞ்சல்களை அனுப்பியதாகக் கூறப்படும் 34 வயதான குறித்த பெண், தொலைபேசி இணைப்புகள் மற்றும் கணினி அமைப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புதன்கிழமையன்று தனது வீட்டில்வைத்து ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மேற்கு சிட்னியைச் சேர்ந்த இப்பெண், கைது செய்யப்படும் வரை 24 மணி நேர காலப்பகுதியில், 32,397 மின்னஞ்சல்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு மூன்று வினாடிகளுக்கும் சராசரியாக ஒரு மின்னஞ்சல் என்ற அளவில், இம்மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இப்பெண்ணின் நடவடிக்கை காரணமாக ஏனையோர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்துடன் தொடர்பு கொள்வது தடுக்கப்பட்டதாகவும், அங்கு பணிபுரிபவர்கள் கணினி வலையமைப்புகளை பயன்படுத்துவது கடினமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மின்னஞ்சல் அனுப்பும் நடவடிக்கைக்கையை மேற்கொள்ள இப்பெண் பல domainகளைப் பயன்படுத்தியதாகவும், மின்னணு தகவல்தொடர்புகளில் அனுமதிக்கப்படாத செயற்பாடுகளை செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றையதினம் Penrith நீதிமன்றத்தில் முனனிலைப்படுத்தப்பட்ட இப்பெண்ணுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது. அவர் ஏப்ரல் 11 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைகளை எதிர்கொள்வார்.
ஒருவருக்கு இத்தகைய குற்றத்திற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.