பிரபலமான இடங்களுக்கு சர்வதேச விமானப் பயணங்களை மீண்டும் தொடங்கப் போவதாகவும், இந்தியாவிற்கு ஒரு புதிய வழியைத் தொடங்குவதாகவும் Qantas அறிவித்துள்ளது.
NSW மாநிலம், சர்வதேச எல்லைகளை நவம்பர் முதலாம் தேதி திறக்கப் போவதாக அறிவித்திருந்தது நாம் அறிந்த செய்தி. இந்த அறிவிப்பு Qantas நிறுவனத்திற்கு உந்துதலாக அமைந்துள்ளது.
பிரதமர் Scott Morrison மற்றும் Qantas நிறுவன Alan Joyce இருவரும் இணைந்து சர்வதேச விமானப் பயண அட்டவணையில் பெரிய மாற்றங்களை இன்று, வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.
சிட்னி - புதுடெல்லி புதிய விமான சேவை
சிட்னி நகருக்கும் இந்திய தலைநகர் புதுடெல்லிக்கும் இடையே ஒரு புதிய விமான சேவை டிசம்பர் மாதம் 6ஆம் தேதி தொடங்கப்படும். அந்த சேவை வாரத்திற்கு மூன்று முறை பறக்கும்.
சிட்னி - சிங்கப்பூர் விமான சேவை மீண்டும் நவம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கும். முன்னர் திட்டமிட்டதை விட நான்கு வாரங்களுக்கு முன்னதாக இந்த சேவை மீண்டும் தொடங்கப் படுகிறது. அந்த சேவையும் ஆரம்பத்தில் வாரத்திற்கு மூன்று முறை பறக்கும். கிறிஸ்மஸ் விடுமுறை காலத்தில் மேலதிக சேவைகள் அறிமுகப் படுத்தப்படும்.
சிட்னியில் இருந்து ஃபிஜிக்கு வாரத்திற்கு நான்கு விமான சேவைகள் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
திட்டமிட்டதை விட மூன்று மாதங்கள் முன்னதாக தென்னாபிரிக்காவின் Johannesburg நகருக்கு, சிட்னியிலிருந்து விமான சேவை அடுத்த வருடம் ஜனவரி 5ஆம் தேதி முதல், வாரத்திற்கு மூன்று முறை பறக்கும்.
தாய்லாந்து நாட்டின் தலை நகர் Bangkok – சிட்னி விமான சேவை வருடம் ஜனவரி 14ஆம் தேதி முதல் தொடங்குகிறது. Jetstar வழங்கும் சிட்னி - Phuket சேவை ஜனவரி 12ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இலண்டன் மற்றும் அமெரிக்காவின் Los Angeles நகரங்களுக்கான சேவை மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த சேவைகள் குறித்து Qantas செய்தி வெளியிட்ட சில மணி நேரங்களில் பயணச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Covid-19 பெருந்தொற்று 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்த பின்னர் தாம் வெளியிடும் மிகப் பெரிய செய்தி இது என்று Qantas நிறுவனத்தின் Alan Joyce கூறினார்.
அனைத்து பயணிகளும் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்க வேண்டும். அத்துடன், புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதை சோதனை செய்து நிரூபிக்க வேண்டும்.
தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் இல்லாத பயணம் மேற்கொள்ள சிங்கப்பூருடன் ஒரு Travel Bubble உருவாக்கும் திட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அரசு இருப்பதாகப் பிரதமர் அறிவித்தார்.
இது அடுத்த சில வாரங்களில் செயலுக்கு வரும் என்று பிரதமர் மேலும் கூறினார்.
With Emma Brancatisano.
மேலும் அறிய

சர்வதேச விமானக் கட்டணம் அதிகரிக்கிறது
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.