வெளி நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்புபவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்ல போதிய விமான சேவைகள் இருக்காது என்ற காரணத்தால், தேவை (demand) அதிகமாகப் போகிறது என்றும், அதனால் அடுத்த வருடத்தின் நடுப்பகுதி வரை சில விமானக் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள், தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் இல்லாமல் NSW மாநிலத்திற்குப் பயணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத ஆரம்பத்தில் இருந்து குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களது மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் இப்படிப் பயணிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் சர்வதேச பயணத்திற்கான தேவை அதிகரிப்பதால், விமான கட்டணமும் அதிகரிக்கும் என்று குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக நிபுணர் (travel expert) Pierre Benckendorff கூறினார்.
“பல விமான சேவை நிறுவனங்கள் இன்னமும் சர்வதேச பயணத்தை முழுமையாகத் தொடங்கவில்லை என்பதால், விநியோகத்தை விட தேவை விரைவில் அதிகமாக இருக்கும், இதனால் விலைகள் அதிகரிக்கும்,” என்று அவர் கூறினார்.
அதனால்தான் நாங்கள் விலையேற்றத்தைக் காண்கிறோம்
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விலைகள் மேலும் உயரும் என்று iFLYflat என்ற பயணக் குழுவின் தலைமை நிர்வாகி Steve Hui கணித்துள்ளார்.
“ஆரம்பத்தில், பறக்கும் விமானங்களில் அதிகளவு பயணிகளை ஏற்றிச் செல்லவே விமான நிறுவனங்கள் இப்போது விரும்புகின்றன. அதிகப்படியான விமானங்கள் பறக்க ஆரம்பித்ததும் செலவுகளை மீட்க அவர்கள் அதிக விலை வசூலிக்கத் தொடங்குவார்கள்” என்று அவர் கூறினார்.
பெருந்தொற்று காரணமாக, விமான நிறுவனங்கள் தற்போது பயண ஒழுங்குகளில் மாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்குகின்றன. இப்பொழுதே பயணச் சீட்டுகளை வாங்குவது நல்லது என்று Steve Hui கூறுகிறார்.
“நீங்கள் இப்பொழுது பயணத்தை முன் பதிவு செய்தால், பின்னர் ஏதாவது நடந்தால் அல்லது உங்கள் சூழ்நிலைகள் மாறினால், உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம்” என்று அவர் கூறினார்.
[node_list title="மேலும் அறிய:" uuid="bb2a1adc-e444-4563-9283-8980288867b5"]
தற்போது நம் நாட்டிற்கும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கிடையிலான விமானப் பயணங்கள் மிகவும் பிரபலமாக இருப்பதால் அவற்றின் விலைகளும் மிக அதிகமாக இருக்கின்றன என்று Dr Pierre Benckendorff கூறினார்.
ஆஸ்திரேலியா-இந்தியா விமானப் பயணத்திற்கு அதிக விலை
“ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமானப் பயணத்திற்கு அதிக விலைகள் நிர்ணயிக்கப் பட்டிருப்பதை நாங்கள் காண்கிறோம், ஏனெனில் அந்த வலுவான குடும்ப உறவுகள் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ளன. ஆஸ்திரேலியா அல்லது இந்தியாவுக்குத் திரும்ப விரும்பும் மக்களிடமிருந்து கோரிக்கைகள் அதிகளவில் உள்ளன” என்று அவர் கூறினார்.
“இதே போன்று, கலாச்சார உறவுகள் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே இருப்பதால், ஒப்பீட்டளவில் விமானச் சீட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதை நாங்கள் காண்கிறோம்.”
விலைகள் எவ்வளவு விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதை மூன்று காரணிகள் தீர்மானிக்கும், அவர் கூறினார்: “வணிகங்களில் ஈடுபட்டுள்ளோர் எவ்வளவு பயணிக்கிறார்கள் - ஏனென்றால் அங்குதான் விமான நிறுவனங்கள் அதிக பணம் சம்பாதிக்கின்றன; இரண்டாவது, தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள்; மூன்றாவது எரிபொருள் விலைகள்.”
எரிபொருள் விலைகள் தற்போது அதிகரித்து வருவதால், குறைந்தபட்சம் இந்த ஆண்டின் இறுதி வரை விமானப் பயணச்சீட்டின் விலைகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.