மேலும் 14 மில்லியன் பேர் COVID பூஸ்டர் பெற தகுதி: உங்களுக்கும் கிடைக்குமா?

கடந்த ஆறு மாதங்களில் COVID booster shot பெறாதவர்கள் மற்றும் கோவிட் தொற்று ஏற்படாதவர்கள் இந்த மாதம் (பிப்ரவரி) 20ஆம் தேதி முதல் கூடுதல் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம்.

NSW CORONAVIRUS COVID19

Dr Jamal Rifi administers a Covid vaccine at a pop-up drive through vaccination clinic at Belmore Oval, in Sydney. (file) Source: AAP / DAN HIMBRECHTS/AAPIMAGE

முக்கிய விடயங்கள்
  • மற்றைய தடுப்பூசிகளை விட ஒமிக்ரான் திரிபிற்கு எதிராக செயல்படும் mRNA தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் மக்களைக் கேட்டுக் கொள்கிறார்
  • சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இந்த நேரத்தில் பூஸ்டர் தேவையில்லை என்கிறார் சுகாதார அமைச்சர்
  • எதிர்காலத்தில் அதிக COVID அலைகளை, தலைமை மருத்துவ அதிகாரி Paul Kelly எதிர்பார்க்கிறார்
நாட்டிலுள்ள வயது வந்தவர்கள் அனைவரும் இப்போது COVID-19 தடுப்பூசியின் கூடுதல் பூஸ்டர் டோஸைப் பெறலாம் என்று சுகாதார அமைச்சர் Mark Butler கூறினார்.
கடந்த ஆறு மாதங்களில் COVID booster shot பெறாதவர்கள் மற்றும் கோவிட் தொற்று ஏற்படாதவர்கள் இந்த மாதம் (பிப்ரவரி) 20ஆம் தேதி முதல் கூடுதல் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம்.
இதுவரை தடுப்பூசியின் எத்தனை சுற்றுகளைப் போட்டிருந்தாலும், அனைவரும் இந்த பூஸ்டர் டோஸைப் பெறலாம்.
மற்றைய தடுப்பூசிகளை விட ஒமிக்ரான் திரிபிற்கு எதிராக செயல்படும் mRNA தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் Mark Butler கூறினார்.
ஒமிக்ரானின் BA.4/BA.5 திரிபுகளைக் குறிவைக்கும் Pfizerரின் bivalent தடுப்பூசிகள் நாட்டில் வழங்கப்பட அண்மையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

“அதிகபட்சம் 14 மில்லியன் பேர் இன்னொரு பூஸ்ட் டோஸுக்கு தகுதி பெறுவார்கள், ஆனால் சமீபத்திய அலைகள் காரணமாக இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைவாக இருக்கலாம்” என்று அமைச்சர் Mark Butler கூறினார்.
நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (ATAGI) ஆலோசனையை மேற்கோள் காட்டிய அமைச்சர், கடுமையான நோய் ஏற்படும் அதிக ஆபத்தில் உள்ளவர்கள் இந்த ஆண்டு பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது என்றார்.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள், வேறு நோய் வாய்ப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிக்கலான மருத்துவ தேவைகள் உள்ளவர்கள் அனைவரும் கடுமையான நோயின் அதிக ஆபத்தில் இருப்பவர்கள் என்று கருதப்படுவார்கள்.
“ஆரோக்கியமான சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர்களுக்கு இப்பொழுது பூஸ்டர் தேவையில்லை என்று ATAGI அறிவுறுத்தியுள்ளது. இந்த வயதினரிடையே கடுமையான நோய்கள் அதிகமாக ஏற்படாததும், இவர்களிடையே அதிக அளவிலான கலப்பு வகை நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் Mark Butler கூறினார்.
இருந்தாலும், கடுமையான நோய்களுக்கு ஆளாகக் கூடிய நிலையிலுள்ள ஐந்து முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இந்தக் கூடுதல் டோஸுக்குத் தகுதியுடையவர்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
கூடுதல் டோஸ் சிலருக்கு நான்காவது அல்லது ஐந்தாவது டோஸாகவும் இருக்கலாம். 18 முதல் 30 வயதுடைய பலருக்கு இரண்டாவது பூஸ்டர் அல்லது நான்காவது டோஸாகவும், 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஐந்தாவது டோஸாகவும் இந்த மேலதிக பூஸ்டர் இருக்கும்.
அரசின் முடிவை ஆஸ்திரேலிய மருத்துவ சங்கத் தலைவர் Steve Robson வரவேற்றார். குளிர் காலம் தொடங்குவதற்கு முன்னதாக மற்றொரு பூஸ்டர் டோஸ் வழங்கப்படுவதை அவர் வரவேற்றார்.
“COVID இன்றும் உயிரைப் பறிக்கிறது; அத்துடன், சுகாதாரக் கட்டமைப்பில் ஒட்டுமொத்த அழுத்தத்தைக் கொடுக்கிறது. மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவது மிகவும் முக்கியம்” என்று Steve Robson, ABC செய்தியிடம் கூறினார்.
எதிர்காலத்தில் மேலும் COVID-19 அலைகள் இருக்கும் என்று நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி Paul Kelly கூறினார்.
“முன்னர் ஒமிக்ரோன் அலை வந்தபோது மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களை விட, சமீபத்திய கோவிட்-19 அலைகளின் போது மிகக் குறைவானவர்களே மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள்” என்று Paul Kelly கூறினார்.
“இந்த அலையின் போது தொற்று அதிகமாகப் பரவவில்லை. மேலும், கலப்பு வகை நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடையே பெரியளவில் பாதுகாப்பு வழங்குகிறது" என்று அவர் மேலும் கூறினார்.
சமீபத்திய அலைகளில் நாட்டில் சுமார் ஒரு மில்லியன் பேருக்கு COVID-19 தொற்று ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளன, ஆனால் அந்த எண்ணிக்கை மூன்று மில்லியனாக இருக்கலாம் என்று தான் நம்புவதாக சுகாதார அமைச்சர் Mark Butler கூறினார்.



உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 8 February 2023 4:34pm
By Kulasegaram Sanchayan, Sahil Makkar
Source: SBS


Share this with family and friends