Jury Duty என்பது என்ன? இதில் பங்கேற்பதற்கு யாரெல்லாம் அழைக்கப்படலாம்?

வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு ஆஸ்திரேலிய குடிமகனும் ஜுரி- நீதிமன்றத்தில் ஒரு குற்றம்பற்றிய உண்மைகளைக் கேட்டறிந்து ஒருவர் குற்றவாளியா நிரபராதியா என்பதை முடிவுசெய்யும் பொதுமக்கள் சார்ந்த குழுவில் பணியாற்றுவதற்கு அழைக்கப்படலாம். அவ்வாறு நீதிமன்ற சேவைக்கு நீங்கள் அழைக்கப்பட்டால் என்ன செய்வது? மற்றும் ஏன் இவ்வாறு அழைக்கப்படுகிறீர்கள்?

jury duty

A lawyer talking to a jury. Source: Getty Images/Chris Ryan

ஆஸ்திரேலிய சட்ட அமைப்பில் ஜூரி என்பது முக்கிய அங்கம் வகிக்கின்றது. தேவையேற்படும்போது, ஒரு ஆஸ்திரேலிய குடிமகனாக ஜூரி சேவையில் பங்கேற்பது உங்களது கடமையாகும். அவ்வாறு பணியாற்றுவதற்கு நீங்கள் அழைக்கப்பட்டு உரிய காரணங்களின்றி நீங்கள் அந்தப் பணியைச் செய்யாதுவிட்டால் அதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

ஜூரி சேவையானது சமூக உறுப்பினர்களை நீதி நிர்வாக செயற்பாட்டில் பங்கு வகிக்க அனுமதிக்கிறது.

உதாரணமாக ஒருவர் மீது கடுமையான குற்றம் சுமத்தப்பட்டால், அந்த நபர் குற்றவாளியா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பணியில் 12 சாதாரண உறுப்பினர்கள் அடங்கிய ஜுரி ஈடுபடுத்தப்படும்.
jury lawyer
Source: Getty Images/RichLegg
கொலை, பாலியல் வன்முறை, ஆயுதமுனையில் நடத்தப்பட்ட கொள்ளை போன்ற தீவிரமான சில வகை வழக்குகளில் ஜுரி பயன்படுத்தப்படுகிறது.

ஜுரியில் பணிபுரிவதற்கான பெயர்கள் ஆஸ்திரேலிய வாக்காளர் பட்டியலில் இருந்து எழுந்தமானமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதன் பின்னர் ஜுரியில் கடமையாற்றுவது தொடர்பில் உங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்படும்.

வழக்கமாக, ஒரு ஜுரியில் 12 உறுப்பினர்கள் பணிபுரிவர் என்றபோதிலும் சில சமயங்களில் இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். அதேநேரம் இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுடக்கூடும்.

இவ்வாறு ஜுரியில் கடமையாற்றுவதற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் சில சூழ்நிலைகளில், உதராணமாக சிறு குழந்தைகளையுடைய ஒற்றைப் பெற்றோர், முதியோர் பராமரிப்பாளர்கள், சிறு வணிகர்கள், வழக்கறிஞர்கள், கேட்டல் குறைபாடு உள்ளவர்கள் அல்லது உடல்நலப் பிரச்சினை உள்ளவர்களாக இருக்கும்பட்சத்தில், தம்மால் இக்கடமையில் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்தால் அப்படியானவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
lawyer
Legal System of Australia Source: Getty Images/RichLegg
அதேபோல ஜுரி அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டவர் விசாரணை முழுவதிலும் பங்கேற்க வேண்டும். அவ்வாறு முழுமையாக பங்கேற்க முடியாது என்று நினைத்தால் அதை முதலிலேயே அறிவிக்க வேண்டும்.

ஜூரியில் அங்கம்வகிப்பவர்கள் குறித்த வழக்கைப் பற்றி யாரிடமும் பேச வேண்டாம் எனவும் இணையத்தில் தகவல்களைப் பார்க்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுவார்கள்.

பொதுவாக ஏழு முதல் 12 நாட்களுக்குள் நடக்கும் விசாரணைகளில் ஜூரி பங்கேற்கும். இருப்பினும் தீவிரவாதம் தொடர்பான சில வழக்கு விசாரணைகள் பல மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு மேல் செல்லலாம். நீண்டகால விசாரணைகளில் பங்கேற்பது தொடர்பில் ஜூரியில் அங்கம் வகிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் முன்கூட்டியே கேட்கப்படும்
gavel judge
Source: Getty Images/Thana Prassongsin
இதேவேளை ஜுரியின் தீர்ப்பு ஏகமனதாக இருக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில் 11-1 என்ற அடிப்படையில் அதில் அங்கம் வகிப்பவர்களின் முடிவு அமைந்தாலும் அத்தீர்ப்பு குறித்த ஜுரியின் நீதிபதியால் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஜுரியில் பணிபுரிவதற்கு தேர்வானவருக்கு அவர் எத்தனை நாட்கள் கடமையில் ஈடுபடுகிறாரோ அத்தனை நாட்களுக்கும் ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Share
Published 22 February 2022 4:38pm
Updated 22 February 2022 4:42pm
By Chiara Pazzano


Share this with family and friends