ஆஸ்திரேலியாவில் Panadol போன்ற Paracetamol மாத்திரைகளின் விற்பனையை கட்டுப்படுத்தலாமா என அரசு திட்டமிட்டுவரும்நிலையில், இந்த மாத்திரைகளை நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களை இது கவலையடையச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீண்டகால நோய்நிலைமைகளால் அவதிப்படுபவர்களை இந்நடவடிக்கை பாதிக்கக்கூடும் என Pain Australia தெரிவித்துள்ளது.
குறிப்பாக அரசு ஆலோசித்து வரும் நான்கு மாற்றங்கள் குறித்து இக்குழு கவலை கொண்டுள்ளது:
- Paracetamol பாக்கெட் ஒன்றை 16 மாத்திரைகள் கொண்டதாக மட்டுப்படுத்தல்.
- மக்கள் ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு பாக்கெட்டுகளை மட்டுமே வாங்க அனுமதிப்பது.
- மருந்துச் சீட்டு இல்லாமல் மாத்திரைகளை வாங்க, 18 வயதிற்கு மேற்பட்டவர்களை மட்டுமே அனுமதிப்பது.
- Panadol Osteo போன்ற Paracetamol வாங்குபவர்கள் இந்தத் தயாரிப்புகளுக்கான மருந்துச் சீட்டைப் பெறும்படி கட்டாயப்படுத்தல்.
2006 மற்றும் 2016 க்கு இடையில், ஐந்து முதல் 19 வயதுடைய இளம் ஆஸ்திரேலியர்கள், அதிகப்படியான அளவுகளில் Paracetamol மாத்திரைகளை பயன்படுத்தியமை ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டதையடுத்து, இந்த மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் மக்களின் வீடுகளில் Paracetamol கையிருப்பைக் குறைப்பதும் ஒரு நோக்கமாகும்.
நாள்பட்ட வலியுடன் வாழ்பவர்கள் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு Paracetamol மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக்கூடும் என்பதால், 16 மாத்திரைகள் கொண்ட ஒரு பாக்கெட் இரண்டு நாட்களுக்கு மட்டுமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும் என Pain Australia தலைமை நிர்வாக அதிகாரி Giulia Jones கூறினார்.
அதேபோனறு 18 வயதிற்குட்பட்டவர்களை மருந்துச் சீட்டைப் பெற கட்டாயப்படுத்துவது, இளம் பராமரிப்பாளர்கள் தங்கள் பெற்றோருக்கு Paracetamol வாங்கிக் கொள்வதையும் பாதிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் TGAவின் மருந்துகள் திட்டமிடல் குறித்த ஆலோசனைக் குழு (ACMS) பிப்ரவரி மாதத்திற்குள் Paracetamolலுக்கான மாற்றங்கள் குறித்த இடைக்கால முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.