Key Points
- பெர்த்தில் இந்தியப் பின்னணிகொண்ட பெண் சௌஜன்யா, மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக திடீரென இறந்தார்.
- சௌஜன்யாவின் கணவர் கல்யாண், ஆஸ்திரேலியாவில் உள்ள மற்றவர்களுக்கு உதவுவதற்காக மனைவியின் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.
- ஆஸ்திரேலியாவில் 7 பேர் சௌஜன்யாவின் உடல் உறுப்புகளை தானமாகப் பெற்றனர்.
பெர்த்தில் வசித்துவந்த இந்தியப் பெண்ணான சௌஜன்யா கனிகந்தா திடீர் மரணம் அடைந்தது அவரது கணவர் மற்றும் குடும்பத்தை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
இரண்டரை வயது மகனின் தாயான 29 வயது சௌஜன்யா, arteriovenous malformation என்ற அரிதான மூளை தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டநிலையில், கடந்த ஏப்ரல் மாதம் காலமானார்.
தனது அன்பு மனைவியை இழந்த பெரும் துயரத்தின் மத்தியிலும், அவரது கணவர் கல்யாண் கங்கினேனி, ஆஸ்திரேலியாவில் உள்ள மக்களுக்கு உதவும்நோக்கில், மனைவியின் எட்டு உறுப்புகளை தானம் செய்வது என்ற கடினமான முடிவை எடுத்திருந்தார்.
சௌஜன்யாவுக்கு என்ன ஆனது?
பெர்த் புறநகர் பகுதியான Thornlieயில் வசித்து வந்த சௌஜன்யா, ஏப்ரல் 12ஆம் தேதி நள்ளிரவில் திடீரென வாந்தி எடுத்ததுடன் கடும் உடல்நலக்குறைவுக்கு உள்ளானதையடுத்து, அவரது கணவர் அவரை Royal Perth மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார்.
மறுநாள் காலையில் சௌஜன்யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரை வென்டிலேட்டரில் வைக்க மருத்துவக் குழு முடிவு செய்ததாகவும் திரு கல்யாண் கூறுகிறார்.
சௌஜன்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், இதயத்திலிருந்து மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளின் சிக்கலால் ஏற்படும் அரிதான நிலையான arteriovenous malformationஆல் சௌஜன்யா பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்ததாக அவர் கூறுகிறார்.
சௌஜன்யா ஏப்ரல் 14 அன்று சிகிச்சை பலனின்றி திடீரென காலமானார்.

கடினமான முடிவை எடுத்தல்
கடும் துயரத்தின் மத்தியிலும், தனது கடினமான முடிவைப் பற்றி SBS குஜராத்தியிடம் பேசிய திரு கல்யாண் "நான் என் மனைவியை மிகவும் நேசிக்கிறேன்; அவளுடைய திடீர் மரணம் என்னையும் என் குடும்ப உறுப்பினர்களையும் உடைத்து விட்டது." என்றார்.
மனைவியின் மரணத்திற்குப் பின் உடல் உறுப்பு தானம் பற்றி இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினரின் ஆலோசனையைப் பெற முடிவு செய்ததாக அவர் கூறினார்.
சௌஜன்யா நம்மிடம் திரும்ப வரமாட்டார், ஆனால் அவரது உறுப்புக்களைத் தானம் செய்தால் அவை ஆஸ்திரேலியாவில் தொடர்ந்தும் எங்களுடன் இருக்கும்.கல்யாண் கங்கினேனி
"எனவே, இந்தியாவில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பிறகு, அவரது கண்கள், இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்கள், குடல், கணையம் மற்றும் பித்தப்பை ஆகியவற்றை தானம் செய்ய முடிவு செய்தேன்," என்று அவர் மேலும் கூறினார்.
அவரது முக்கிய உறுப்புகளை நான் தானம் செய்ய முடியும், ஏனென்றால் என் மனைவி arteriovenous malformation காரணமாக காலமானார்கல்யாண் கங்கினேனி
அவரது மனைவியின் எலும்புகள் மற்றும் பிற உறுப்புகளை தானம் செய்யும் விருப்பத்தை எதிர்கொண்டபோது, தன்னால் தொடர முடியவில்லை என்று திரு கல்யாண் தெரிவித்தார்.
"இந்து சமய முறைப்படி, இறுதி சடங்குகளை செய்வதற்கு முன், இறந்த உடலை நாம் குளிப்பாட்ட வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
ஆஸ்திரேலியாவில் உறுப்பு மற்றும் திசு தானம்
ஆஸ்திரேலிய அரசின் உறுப்பு மற்றும் திசு ஆணையத்தின்படி, உறுப்பு, கண் மற்றும் திசு தானம் உயிர்களைக் காப்பாற்றுகிறது, ஆரோக்கியத்தை மீட்டெடுக்கிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
உடல் உறுப்பு தானம் செய்யும் ஒருவர், கண் மற்றும் திசு தானம் மூலம், ஏழு பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதுடன் மேலும் பலருக்கு உதவ முடியும் என்று ஆணையம் கூறுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.