சர்வதேச விமானப் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்க தாம் திட்டமிடுவதாக Qantas விமான நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போடுவதிலும், வெளி நாடுகளின் நிலைமையிலும் அது தங்கியிருப்பதாக Qantas கூறுகிறது.
அதிகப்படியானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள வட அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற இடங்களுக்கு சேவைகளை முதலில் ஆரம்பிக்க கவனம் செலுத்தப்படுகிறது.
நாட்டு மக்களில் 80 சதவீதமானோர் இந்த வருட முடிவிற்குள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டு விடுவார்கள் என்றும் அதன் பின் சர்வதேச எல்லைகள் படிப்படியாகத் திறக்கப்படும் என்றும் National Cabinet தரவுகள் சொல்வதை அடிப்படையாக வைத்து இதனைக் கணித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 70 சதவீதத்தை நவம்பர் மாதத்தில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சர்வதேச விமானப் பயணங்கள் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தடையற்ற உள்நாட்டு விமானப் பயணம் ஆரம்பிக்கும் என்று Qantas நம்புகிறது.
தடுப்பூசி வீதங்கள்
நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை தான் எப்போது விமானப் பயணங்கள் ஆரம்பிக்கும் என்பதைத் தீர்மானிக்கும் என்று Qantas நிறுவனத்தின் தலைமை அதிகாரி Alan Joyce கூறியுள்ளார். மாநிலங்களுக்கிடையில் எல்லைகள் மூடப்படுவது விமானப் பயணத்திற்கு தடையாக அமையலாம் என்றும், மற்றைய மாநில பிராந்தியங்களிலிருந்து New South Wales மற்றும் Victoria மாநிலங்கள் வேறு படுத்திப் பார்க்கப்படும் என்றும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் முக்கியமான தடுப்பூசி இலக்குகள் எட்டப்படும் போது, மாநில எல்லைகள் மூடப்படாது என்ற நம்பிக்கை வரும் போது உள்நாட்டு விமானப் பயணத்தின் தேவை அதிகரித்து சர்வதேச விமானப் பயணங்கள் படிப்படியாக ஆரம்பிக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.
அதன் மிகப்பெரிய பயணிகள் விமானமான A380 விமானங்கள் ஐந்து அடுத்த ஆண்டின் நடுப் பகுதியிலிருந்து சிட்னி - Los Angeles சேவையிலும், அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து சிட்னி – இலண்டன் சேவையிலும் பறக்க மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

Qantas Chief Executive Officer Alan Joyce. Source: AAP
இடையில் நிறுத்தாமல், இங்கிருந்து இலண்டனுக்கு நேரடி சேவை மக்களிடம் பிரபலமாகும் என்று Qantas கணித்துள்ளது. பெருந்தொற்று காலத்தில் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் அதிக நாட்கள் முடக்க நிலை நடைமுறையில் இருந்தமையால், பெர்த் நகருக்கு மாற்றாக அல்லது அதற்கும் கூடுதலாக டார்வின் நகரிலிருந்து இலண்டனுக்குப் பறப்பது குறித்து விமான நிறுவனம் ஆய்கிறது.
இருப்பினும், Bali, Jakarta, Manila, Bangkok மற்றும் Johannesburg போன்ற ஆபத்தான இடங்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் பறப்பதற்கான எந்த உத்தேசமும் விமான நிறுவனத்திடம் இல்லை.
நிதி இழப்புகள்
கடந்த வருடம் 1.73 பில்லியன் டொலர் இழப்பை சந்தித்த Qantas நிறுவனம், கடந்த ஜூன் 30 வரையிலான கணக்காண்டில் 58.4 சதவீத வருவாயை இழந்துள்ளது.
COVID-19 காரணமாக இதுவரை மொத்தம் 16 பில்லியன் டொலர் வருவாயை இழந்துள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச பயணம் தடைப்பட்டமை மற்றும் உள்நாட்டு எல்லை கட்டுப்பாடுகள் விமானப் பயணத் தேவைகளைக் குறைத்திருக்கிறது என்று காரணம் கூறியுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.