Key Points
- சில சர்வதேச பயணிகள் எழுந்தமானமாக கோவிட்-19 சோதனைகளை எதிர்கொள்வார்கள் என்று இந்தியா அறிவித்துள்ளது.
- பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
- புதிய கொரோனா வைரஸ் வகைகளுக்கான கண்காணிப்பையும் இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.
சீனாவின் பல பகுதிகளில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதால், உலகம் முழுவதுமே கொரோனா குறித்த அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இந்திய விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளில் 2 சதவீதமானோரிடம் எழுந்தமானமாக -random கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என இந்திய சுகாதார அமைச்சர் Mansukh Mandaviya நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
"உலகளாவிய தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை ... வைரஸ் அவ்வப்போது அதன் முகத்தை மாற்றுகிறது" என்று Mansukh Mandaviya வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் கூறினார்.
நாடு புதிய கொரோனா வைரஸ் மாறுபாடுகளுக்கான கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
"வரவிருக்கும் பண்டிகை காலம் மற்றும் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, கை சுகாதாரம் மற்றும் முகக்கவசத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று Mansukh Mandaviya கூறினார்.
கடந்த பல மாதங்களாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முகக்கவசங்கள் கட்டாயமாக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 153 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகின்றன என்று இந்திய சுகாதார அமைச்சர் Mansukh Mandaviya கூறினார்.
இந்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, நாட்டில் தற்போது 3402 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் உள்ளனர்.
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகளைக் கண்காணிக்குமாறு இந்திய மாநிலங்கள் அனைத்தையும் அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மற்றும் சீனாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் கோவிட் தொற்றுகள் அதிகரிப்பதைக் காரணம் காட்டி, மக்கள் நெரிசலான பகுதிகளில் செல்லும்போது முகக்கவசங்களை அணியுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்றுவரை உலகிலே அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே அதிக கோவிட் தொற்றுகள் பதிவாகியிருந்தன(44 மில்லியனுக்கும் அதிகமான தொற்றாளர்கள்)
இருப்பினும், கடந்த சில மாதங்களில் உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இந்தியாவில் மிகவும் குறைந்துள்ளது.
இதுஇவ்வாறிருக்க கோவிட் தொற்றுநோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் குறைவான சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இந்தியா சென்றிருந்தனர்.
2019 இல் கிட்டத்தட்ட 370,000 ஆஸ்திரேலியர்கள் உட்பட 11 மில்லியன் மக்கள் இந்தியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்தியாவின் சின்னமான தாஜ்மஹாலைப் பார்வையிடச் செல்பவர்கள் இப்போது கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்