ஆர்ஷ்தீப் சிங் என்ற 21 வயது இந்திய மாணவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அடிலெய்ட் தெற்கிலுள்ள Old Noarlunga-இல் சுவர் ஒன்றின்மீது மோதி விபத்திற்குள்ளானார்.
விபத்து இடம்பெற்றசமயம் இவரது காரினுள் 14-26 வயதுடைய 5 பேர் இருந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஆர்ஷ்தீப் சிங் மதுபோதையில் இருந்ததாலேயே விபத்து இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து கடந்த ஓராண்டுக்கு மேல் இடம்பெற்ற வழக்குவிசாரணைகளின் முடிவில், ஆர்ஷ்தீப் சிங் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, ஐந்து பிரிவுகளின்கீழ் இவருக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கி கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஷ்தீப் சிங்கின் இரத்தப்பரிசோதனையில் 0.08g அல்லது அதற்கு மேல் மதுவின் அளவு காணப்பட்டதாகவும், குறிப்பிட்ட வேகக்கட்டுப்பாட்டைவிடவும் 45km/h வேகத்தில் இவர் காரை ஓட்டிவந்ததாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிடவும் அதிகளவானோரை காரில் ஏற்றிச்சென்றமையும் சட்டவிரோதம் என நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை தவிர ஆர்ஷ்தீப் சிங் 14 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவர் ஆகக்குறைந்தது இரண்டரை ஆண்டுகளுக்கு பரோலில் வெளியேவருவதற்கு விண்ணப்பிக்க முடியாது. தண்டனைக்காலம் முடிவடைந்த பின்னர் ஆர்ஷ்தீப் சிங் இந்தியாவிற்கு நாடுகடத்தப்படுவார்.
இந்தியாவிலிருந்து மாணவர் விசாவில் கடந்த 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்த ஆர்ஷ்தீப் சிங், பகுதிநேரமாக டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்ததாகவும், விபத்து இடம்பெற்ற அன்று அவர் கடமையில் இருந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தில் இருந்த அனைவரும் காயங்களுடன் உயிர்தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.