வெளி நாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் இனி மேல் தங்கள் சொந்த வீடுகளில் வசதியாக தனிமைப் படுத்தப்படலாம். ஆனால், அதற்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கும் செயலி, சிலரை தவறாக அடையாளம் காணக்கூடும் என்ற கவலைகள் பலரிடம் இருக்கிறது.
தனிமைப்படுத்தல் விடுதிகளில் தங்குவதற்கு செலுத்த வேண்டிய பணம் சேமிக்கப்பட்டாலும், இதற்காகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் சிலருக்குப் பாதகமாக அமையலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
GPS தொழில் நுட்பத்தின் மூலம் தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் ஒருவர் எந்த நேரத்திலும் எங்கே இருக்கிறார் என்பது கண்காணிக்கப்படும். அது தவிர, ஒரு நாளில் மூன்று தடவைகள் அவர் செயலி ஊடாக தனது முகத்தை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். அதை எப்போது செய்ய வேண்டுமென்பது முன்கூட்டியே அவருக்கு அறிவிக்கப்படாது. இந்த திட்டத்தை தெற்கு ஆஸ்திரேலியா முதலில் அறிமுகம் செய்கிறது.

Output of an Artificial Intelligence system from Google Vision, performing Facial Recognition on a photograph of a man, with facial features identified. Source: Smith Collection/Gado/Sipa USA
முகங்களை அடையாளம் காணும் மென்பொருட்கள் பக்கச் சார்பாக இயங்குகின்றன என்று பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இனம், நிறம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொறுத்து தொழில்நுட்பத்தின் செயல்திறன் மாறுபடும்.
இது தவிர, இந்த தொழில்நுட்பம் காவல்துறையால் பயன்படுத்தப்படுவதையும், முக்கிய வழக்குகளில் சாட்சியமாகப் பயன்படுத்தப்படுவதையும் தடை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த மே மாதத்தில் குரல் கொடுத்திருந்தது.
மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை மேற்கொண்ட 50 பேர் இந்த பரிசோதனைத் திட்டத்தில் ஏற்கனவே பங்குபற்றியுள்ளார்கள், அவர்களில் சிலர் இன்னமும் வீடுகளில் தனிமைப்படுத்தலில் உள்ளனர். ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையின் 90 அதிகாரிகள் வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்து இந்த சோதனையில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
மேற்கு ஆஸ்திரேலியா ஏற்கனவே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. Northern Territory தற்போது இந்த தொழில்நுட்பத்தைக் கொள்வனவு செய்துள்ளது.
தரவு எப்படி பயன்படுத்தப்படும்? எங்கே சேமிக்கப்படும்? எப்படி பாதுகாப்பாக நீக்கப்படும்?
இந்தத் திட்டத்தில் தொழில் நுட்பம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், அதில் பெறப்படும் தரவுகளின் பயன்பாடு, அவை எங்கே சேமிக்கப்படும் எப்படி பாதுகாப்பாக நீக்கப்படும் என்பவற்றை நிர்வகிக்க, திடமான மற்றும் வலுவான சட்டப் இயற்றப்பட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.
ஆனால், வெளிநாடுகளில் சிக்கியுள்ள பலர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் திட்டம் மூலம் தாம் விரைவாக நாடு திரும்பலாம் என்றால் வேறு விடயங்கள் குறித்து தாம் பெரிதாக கவலை கொள்ளவில்லை என்கிறார்கள்.
இந்தத் திட்டத்தில், தொழில்நுட்பத்தின் பயன்பாட்டின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் உடனடியாக குறியாக்கம் (encrypted) செய்யப்பட்டு பாதுகாப்பான secure server என்ற சேவையகங்களில் சேமிக்கப்படும் என்று தெற்கு ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.