ஆஸ்திரேலியாவிற்குள் உள்வாங்கப்படுவோரின் எண்ணிக்கையை Albanese அரசு ஏற்கனவே அதிகப்படுத்தியுள்ளது. ஆனால் அடுத்த வார நிதிநிலை அறிக்கையில் இன்னும் அதிகமான மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்று புலம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்வதற்குக் காத்திருப்போர் மத்தியில் நம்பிக்கை உள்ளது.
இதுவரை என்ன தெரியும்?
முந்தைய Morrison அரசு, உள்துறை அமைச்சுக்கான migration program நிதியை $875 மில்லியனால் குறைத்தது, அதே நேரத்தில் skilled மற்றும் family விசாக்களுக்கான இடங்களின் எண்ணிக்கையை 160,000 ஆக வைத்திருந்தது. இந்நிலையில் விசா பரிசீலனைக் காலப்பகுதி அதிகரித்துவிட்டதாகவும், ஆஸ்திரேலிய வணிகங்கள் சரியான திறன்களைக் கொண்ட போதுமான நபர்களை வேலைக்கு அமர்த்த முடியவில்லை எனவும் முறைப்பாடுகள் எழுந்தன.
இந்தப்பின்னணியில் கடந்த செப்டம்பரில் நடந்த Jobs and Skills உச்சி மாநாட்டில், Albanese அரசு விசா பரிசீலனைக் காலப்பகுதியை விரைவுபடுத்துவதாக உறுதியளித்தது. இதற்கு ஏதுவாக ஒன்பது மாதங்களுக்கு 500 பேரை வேலைக்கு அமர்த்தவென கூடுதல் $36.1 மில்லியன் நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்தது.
இம்மாநாட்டில் உரையாற்றிய குடிவரவு அமைச்சர் Andrew Giles, கடந்த தேர்தலில் வெற்றிபெற்று லேபர் கட்சி அரசமைத்தபோது, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் விசாக்கள் பரிசீலனைக்காக காத்திருந்ததாக தெரிவித்திருந்தார். Temporary skilled விசாவிற்கான சராசரி பரிசீலனைக்காலம், மே மாதத்தில் 53 நாட்களாக காணப்பட்டநிலையில், இது ஜூலையில் 42 நாட்களாக குறைந்தது.

Minister for Home Affairs Clare O’Neil and Minister for Immigration Andrew Giles during the Jobs and Skills Summit at Parliament House in Canberra, Friday, September 2, 2022 Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE
ஜூன் 1, 2022 இல் இருந்து கிட்டத்தட்ட 2.22 மில்லியன் புதிய விண்ணப்பங்களைப் பெற்றதாகவும், 2021 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட 495,000 விண்ணப்பங்களே தாக்கல்செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
விசா பரிசீலனையில் உதவுவதற்காக, உள்துறை அமைச்சு ஏற்கனவே 260 பணியாளர்களைச் சேர்த்துள்ளதாகவும், வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் இன்னும் அதிகமானவர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் Giles கூறினார்.
நிதிநிலை அறிக்கை, விசாக்களில் எவ்வாறு தாக்கம்செலுத்தக்கூடும்?
முந்தைய Morrison அரசின் கீழ் அறிவிக்கப்பட்ட உள்துறை அமைச்சுக்கான $875 மில்லியன் நிதிக்குறைப்பு திட்டத்தை, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் லேபர் அரசு மீளப்பெறுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers, 2022-23 நிதிநிலை அறிக்கையை அக்டோபர் 25 செவ்வாய் அன்று வெளியிடுவார்.
உற்பத்தித்திறன், ஸ்பான்சர்ஷிப் வாய்ப்புகள் மற்றும் சர்வதேச அளவில் போட்டித்தன்மை கொண்ட விசா செயல்முறை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், எதிர்கால சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டும் வகையில் migration systemஇன் விரிவான மதிப்பாய்வை Albanese அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி 2023 இறுதிக்குள் அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.
Temporary Skilled Migration வருமான வரம்பை அதிகரிப்பதற்கான திட்டங்களையும் அரசு கோடிகாட்டியுள்ளது.

Credit: Department of Home Affairs
மேலும் விசாக்கள் அறிமுகப்படுத்தப்படுமா?
அரசு ஏற்கனவே 2022-23ல் permanent migration திட்டத்தை 160,000 விசா இடங்களிலிருந்து 195,000 ஆக உயர்த்தியுள்ளது. skilled migrants மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான விசாக்கள் இதில் அடங்கும்.
இதற்கு மேலும் புதிதாக விசா இடங்கள் அறிமுகப்படுத்தப்படுவது சந்தேகத்திற்கிடமானது என பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, மனிதாபிமான திட்டத்தின் ஒரு பகுதியாக அகதிகளுக்கு எத்தனை விசாக்கள் வழங்கப்படுகின்றன என்பது குறித்த முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
லேபர் ஆட்சியில், தற்காலிக பாதுகாப்பு விசாக்களை ரத்து செய்து, உண்மையான அகதிகள் என்று கண்டறியப்பட்டவர்களுக்கு நிரந்தர விசா வழங்கப்படும் என, வாக்குறுதியளிக்கப்பட்டது.
இவ்வாறு வழங்கப்படும் நிரந்தரவிசாக்கள், ஆஸ்திரேலியாவின் மனிதாபிமான திட்டத்தின்கீழ் கணக்கிடப்படவேண்டும் என எதிர்பார்ப்பதாக பலதரப்பினரும் கூறியுள்ளனர். எனவே இம்முறை நிதிநிலை அறிக்கையில் மனிதாபிமான அடிப்படையில் உள்வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய மனிதாபிமான திட்டம் 2022-23 இல் 13,750 அகதிகளுக்கான இடங்களை அனுமதிக்கிறது. கூடுதலாக நான்கு ஆண்டுகளில் 16,500 இடங்கள் ஆப்கானிய அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மனிதாபிமான திட்டத்தின்கீழ் உள்வாங்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்பதுபற்றிய கூடுதல் விவரங்கள் நிதிநிலை அறிக்கை வெளியான பின்னரே தெரியவரும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.