சமூக வலைத்தளங்களில் சிறுவர்களைப் பாதுகாக்க G20 நாடுகளின் ஆதரவை நாடுகிறது ஆஸ்திரேலியா

சமூக வலைத்தளங்களில் முறைகேடான நடத்தைகளிலில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு உலகளாவிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா விரும்புகிறது. இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று G20 உச்சி மாநாட்டில் பிரதமர் உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

The Snapchat app on a mobile device.

The Snapchat app on a mobile device. Source: AP

உலகப் பொருளாதாரம், சுகாதாரம், காலநிலை மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய G20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் Scott Morrison நாளை வியாழக்கிழமை ரோம் நகருக்குச் செல்கிறார்.

பாதுகாப்பாகவும், நம்பிக்கையுடனும் சமூக வலைத்தளங்கள் செயல்பட வைக்க வேண்டும் என்பது பிரதமரின் முக்கிய செய்தியாக இருக்கும்.
இந்நாட்டில் இயங்கும் சமூக வலைத்தள சேவைகள், தரவுகளைப் பரிமாறுபவர்கள் மற்றும் பிற இணையத்தள சேவை வழங்குவோர் தனிப்பட்ட தரவுகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்ற சட்ட முன்வரைவை இந்த வாரம் அரசு வெளியிட்டது.

சிறுவர்களைப் பாதுகாக்க, வலுவான கடுமையான புதிய சட்டங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.

Facebook மற்றும் Tiktok போன்ற தளங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்க அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும், மேலும் சிறுவர்களின் தனிப்பட்ட தகவலைக் கையாளும் போது சிறுவர்களின் நலன்களை முதன்மையாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

16 வயதிற்குட்பட்ட பயனர்களுக்கு பெற்றோரின் ஒப்புதலையும் அவர்கள் பெற வேண்டும்.

மீறுவோருக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
இளைஞர்களின் மன ஆரோக்கியம் மோசமடைந்து வருவதற்கான காரணங்களின் பட்டியலில் சமூகவலைத் தளங்கள் முதலிடத்தில் உள்ளன என்று பல சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

சமூகவலைத் தளங்கள் சிறுவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இந்நாட்டு மக்களில் 84 சதவீதமானவர்கள் அக்கறை கொண்டுள்ளனர்.  அத்துடன், சமூகவலைத் தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு அந்தந்த நிறுவனங்கள் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கிட்டத்தட்ட அதே அளவு மக்கள் விரும்புவதாக அந்த ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 27 October 2021 9:46am
By Kulasegaram Sanchayan
Source: AAP, SBS


Share this with family and friends