சமூக வலைத்தளத்தில் பெண்ணுக்கு தொந்தரவு: விக்டோரிய இளைஞருக்கு 10 மாத சிறை!

AAP

Source: AAP

சமூக வலைத்தளத்தின் ஊடாக தொடர்ச்சியாக தகவல்களை அனுப்பி பெண்ணொருவருக்கு தொந்தரவு கொடுத்த விக்டோரிய இளைஞருக்கு 10 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மதுபானசாலையில் தற்செயலாக சந்தித்தபோது அங்கு பணிபுரிந்த இந்த இளைஞரை சந்தித்த பெண் அவருடன் சகஜமாக பேசி தொடர்புகளை பேணியிருக்கிறார். ஆனால், குறிப்பிட்ட இளைஞர் அந்தப்பெண்ணுடன் மேலதிக உறவை பேணும் வகையிலான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். அதற்கு அந்தப்பெண் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

எனினும் தன் முயற்சியில் மனம் தளராது தொடர்ச்சியாக Instagram எனப்படும் சமூக வலைத்தள செயலியின் ஊடாக தகவல்களை அனுப்பி, எப்படியாவது அந்தப்பெண்ணை இணங்கவைப்பதற்கு குறிப்பிட்ட இளைஞர் முயற்சி செய்திருக்கிறார்.

அந்தப்பெண் பணிபுரியும் வேலைத்தளத்துக்கு சென்று தன்னோடு வெளியில் வருமாறு அழைத்தும் ஆபாச படங்களை அனுப்புமாறு கோரியும்  அணுகுமுறைகளை தொடர்ந்திருக்கிறார். இதைவிடவும் போலி சமூகவலைத்தள கணக்குகளிலிருந்தும் சில காணொளிகளை அனுப்பி மிரட்டியிருக்கிறார்.

இதனால், அந்தப்பெண் தனது வசிப்பிடத்தை மாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது. இறுதியில், பொலீஸிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர் நீதிபதியின் முன்பாக நிறுத்தப்பட்டார்.

சூதாட்டத்தில் அதீத ஈடுபாடு கொண்ட இவர் வேறு சில குற்றச்செயல்களிலும் முன்பு ஈடுபட்டிருந்ததால் இவருக்கு பிணையில் வெளிவரமுடியாத பத்து மாத சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.


Share
Published 1 February 2019 10:55am
Updated 1 February 2019 11:02am
Presented by Renuka

Share this with family and friends