முக்கிய விடயங்கள்
- Modernaவின் BA.4/5 இருமுனைத் (bivalent) தடுப்பூசியை ஏப்ரல் மாதத்திலிருந்து மக்கள் போட்டுக் கொள்ளலாம்.
- ஒமிக்ரோனின் முதல் திரிபு மற்றும் BA.1 திரிபிற்கான பூஸ்டர் தடுப்பூசிகள் மக்களுக்குத் தற்போது கிடைக்கின்றன
விக்டோரிய மாநிலத்தில் வாழ்பவர்களில் பலர் பூஸ்டர் தடுப்பூசி கடைசியாகப் போட்டு ஆறு மாதங்கள் ஆகின்றபடியால், 2023ஆம் ஆண்டு வழங்கப்படும் பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளுமாறு அந்த மாநில தலைமை சுகாதார அதிகாரி பேராசிரியர் Brett Sutton வலியுறுத்தினார்.
உங்கள் தொலைபேசியை ‘ரீசார்ஜ்’ செய்வது போல, பூஸ்டர் தடுப்பூசி போடுவதால் நோயெதிர்ப்பு சக்தி மீண்டும் அதிகரிக்கும்பேராசிரியர் Brett Sutton
“குளிர் காலத்திற்குத் தயாராகுவதற்கு பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை ‘ரீசார்ஜ்’ செய்ய இது ஒரு நல்ல நேரம்” என்று பேராசிரியர் Brett Sutton கூறினார்.
வயது வந்தவர்களில், கடந்த ஆறு மாதங்களில் கோவிட் தொற்று ஏற்படாதவர்கள் மற்றும் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளாத அனைவருக்கும் 2023 பூஸ்டர் டோஸ் கிடைக்கும்.
ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதிற்கும் 17 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்குக் கோவிட்-19 தொற்று ஏற்பட்டால் அதனால் ஏற்படும் ஆபத்து அதிகம் என்பதால், இந்த பூஸ்டர் தடுப்பூசி அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
ஆனால், நான்கு இருமுனைத் (bivalent) தடுப்பூசிகள் வழங்கப்படுவதால், எந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது என்ற முடிவை ஒருவர் எப்படித் தீர்மானிப்பது?
சரியான இருமுனைத் (bivalent) தடுப்பூசி
எந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது என்ற முடிவில் ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் முதியோர் பராமரிப்பு துறை தலையிடாது என்று கூறியுள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட தடுப்பூசியையும் அது ஊக்குவிக்கப் போவதில்லை.
எந்தத் தடுப்பூசியைத் தேர்ந்தெடுப்பது என்பது, ஒருவரின் தனிப்பட்ட முடிவு அல்லது அவருக்குத் தடுப்பூசி வழங்குபவரின் முடிவு.சுகாதாரம் மற்றும் முதியோர் பராமரிப்பு துறை
இருந்தாலும், சில வழிமுறைகளை சுகாதாரம் மற்றும் முதியோர் பராமரிப்பு துறை பகிர்ந்துள்ளது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் Pfizer BA.1, Moderna BA.1, Pfizer BA.4/5, மற்றும் Moderna BA.4/5 ஆகிய நான்கு இருமுனைத் (bivalent) தடுப்பூசிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும், 12 முதல் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் BA.4/5 இருமுனைத் தடுப்பூசிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைக்கிறது.
வழங்கப்படுகின்ற தடுப்பூசிகளும், தற்போது புழக்கத்தில் இருக்கும் அனைத்து Covid-19 வைரஸ்களுக்கும் எதிராக antibody எனப்படும் நஞ்சொடுக்கியை அதிகரித்துப் பாதுகாப்பு வழங்கும் என்று நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் Kirby Instituteஐச் சேர்ந்த இணைப் பேராசிரியர் Stuart Turville கூறினார்.
“தற்போது புழக்கத்தில் உள்ள ஒமிக்ரோனின் திரிபுகளை எதிர்க்கும் சக்தியை ஒருவர் பெறுவதற்கு, குறைந்தது இரண்டு சுற்று தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பது பல ஆய்வுகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது” என்று Stuart Turville கூறினார்.
ATAGI என்ற நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவினதும் சுகாதாரம் மற்றும் முதியோர் பராமரிப்பு துறையினதும் தரவுகளின்படி, BA.4/5 இருமுனைத் தடுப்பூசிகள் உடலில் நஞ்சொடுக்கியை உருவாக்குகின்றன.
நஞ்சொடுக்கிகள் (Antibodies)
Pfizerரின் ஆரம்பகால தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்களை விட, அதன் BA.4/5 தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், ஒமிக்ரோன் BA.4/5 திரிபிற்கு எதிராக 2.9 மடங்கு அதிகமாக நஞ்சொடுக்கிகளைத் தமது உடலில் உருவாக்கியதாக, 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று சுகாதாரத் துறை கூறியது.
“புதிய BQ.1.1 மற்றும் XBB.1 போன்ற சிறிய திரிபுகளை நடுநிலைப்படுத்தவும் புதிய தடுப்பூசிகள் திறம்பட செயலாற்றியதாக சுகாதாரத் துறை மேலும் கூறியது.
இதே போல, Moderna நிறுவனம் 18 வயது மற்றும் அதற்கு மேற் பட்டவர்களுடன் நடத்திய ஆய்வில், BA.4/5 இருமுனைத் தடுப்பூசிகள், ஒமிக்ரோன் BA.4/5, BQ.1 மற்றும் XBB திரிபுகளுக்கு எதிராக 5.1 முதல் 6.3 மடங்கு அதிகமாக நஞ்சொடுக்கிகளை உருவாக்கியதாகக் கண்டறிந்துள்ளது என்று சுகாதாரத் துறை கூறியது.
சிட்னியின் UTS பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் Jane Frawley, “முன்னர் கொடுக்கப்பட்டு வந்த பூஸ்டர்களை விட BA.4/5 தடுப்பூசிகளை மக்கள் போட்டுக் கொள்ள விரும்பலாம்” என்றார்.
“புதிய இருமுனைத் தடுப்பூசிகள் தற்போதைய புழக்கத்தில் உள்ள துணை திரிபு வகை வைரஸ்களுடன் சிறப்பாக செயல்படுகின்றன, மற்றும் கோவிட்-19ற்கு எதிராக நம்மைப் பாதுகாப்பதில் சிறந்தவை” என்று அவர் மேலும் கூறினார்.
மருத்துவமனை அனுமதி, இறப்பு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்
முன்னர் கொடுக்கப்பட்டு வந்த பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் தொற்றினால் இறப்பதையும் 25 சதவீதத்தால் குறைத்தது என்றும், BA.4/5 தடுப்பூசியின் செயல்திறன் அதனை 62 சதவீதத்தால் குறைத்துள்ளது என்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது என்று சுகாதாரத் துறை அறிவித்தது.
“பூஸ்டர் தடுப்பூசியாக Pfizer மற்றும் Moderna BA.4/5 இருமுனைத் தடுப்பூசிகள் இரண்டுமே அவற்றின் முந்தைய தடுப்பூசிகளைப் போன்ற பாதுகாப்பு கொண்டிருந்தன” என்று அது கூறியது.
“புதிய அல்லது எதிர்பாராத அச்சங்கள் எதுவும் தெரியவில்லை” என்று அது கூறியது.
Modernaவின் இருமுனை BA.4/5 குருதி உறைவு ஏற்படுவதால் வரும் (மூளைக்கு இரத்தத்தை வழங்கும் நாடிகளில் இரத்தக் கட்டிகள் தோன்றுவதால் ஏற்படும்) பக்கவாதத்திற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, கூறியது.
“Modernaவின் இருமுனை BA.4/5 தடுப்பூசி போட்டதைத் தொடர்ந்து, myocarditis என்ற இதய அழற்சி அல்லது pericarditis என்ற இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வு அழற்சி போன்ற ஆபத்து மிகச் சிறியளவில் இருந்தாலும், Modernaவின் முன்னைய பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் ஆபத்தை விடவோ 12 வயதுடையவர்களுக்கு Pfizer இருமுனை BA.4/5 தடுப்பூசி வழங்குவதால் ஏற்படும் ஆபத்தை விடவோ அதிகமாக இருப்பதாகத் தெரியவில்லை” என்று ATAGI ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரு பூஸ்டர் தடுப்பூசியாக Pfizerரின் இருமுனை BA.4/5 தடுப்பூசி பயன்படுத்தப்படும் போது ஏற்படும் ஆபத்தின் அளவு, அது முதன் முதலில் வெளியிட்ட மற்றும் அதன் BA.1 தடுப்பூசிகளை வழங்கும் போதும் இருக்கின்றது என்று பிப்ரவரி 8ஆம் தேதி ATAGI வெளியிட்ட இன்னொரு தனி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொண்ட இடத்தில் வலி (68.5%), சோர்வு (56.4%), தலைவலி (41.4%), தசை வலி (25.8%), உடல் குளிர்தல் (16.9%) மூட்டு வலி (13.4%), காய்ச்சல் (7.3%), தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கம் (5.4%), தடுப்பூசி போட்ட இடம் சிவத்தல் (4.8%) மற்றும் நிணநீர் அழற்சி (0.3%) ஆகிய பக்க விழைவுகளை Pfizer இருமுனை BA.4/5 தடுப்பூசி ஏற்படுத்தலாம்.ATAGI
தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
Pfizerரின் BA.4/5 இருமுனைத் தடுப்பூசியின் 10 மில்லியன் டோஸ்களை அரசு கொள்வனவு செய்துள்ளது. 2023 பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்குத் தகுதியானவர்களுக்குக் குடும்ப மருத்துவர் மூலம் தற்போது கிடைக்கிறது.
Modernaவின் BA.4/5 இருமுனைத் தடுப்பூசியின் மூன்று மில்லியன் டோஸ்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூஸ்டர் தடுப்பூசியை இப்போது பெற விரும்புபவர்களுக்கும் மற்றைய Moderna மற்றும் Pfizer தடுப்பூசிகள் கிடைக்கின்றன.சுகாதாரம் மற்றும் முதியோர் பராமரிப்பு துறை
BA.4/5 இருமுனைத் தடுப்பூசி
அமெரிக்கா உட்பட சில நாடுகள் BA.4/5 இருமுனைத் தடுப்பூசிகளை மக்கள் போட்டிருக்க வேண்டிய முதற் சுற்றுத் தடுப்பூசியாகக் கருதுகின்றன.
அனைத்து நாடுகளும், கோவிட்-19 தடுப்பூசிகள் குறித்து, ஒரே மாதிரியான பரிந்துரைகளை முன்வைக்க வில்லை என்றும், பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரும் தங்கள் தீர்மானங்களை எடுக்கிறார்கள் என்றும் சுகாதாரத் துறை கூறியது.
“இருமுனைத் தடுப்பூசிகளுக்கான மக்களின் ஆர்வம், அதனை பூஸ்டர் டோஸாக பயன்படுத்துவதை ஆதரிக்கிறது” என்று அது கூறியது.
அடுத்த திரிபு எந்த வடிவில் வரும், தற்போதைய திரிபிலிருந்து எவ்வாறு வேறுபடும் என்பதைக் கணிப்பது கடினம் என்று பேராசிரியர் Stuart Turville கூறினார்.
“இருப்பினும், முதலில் கண்டுபிடிக்கப்பட்ட Covid-19 வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்து நீண்ட காலமாக விட்டது அதனால் இருமுனைத் தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்படுவது அனைவருக்கும் நன்மை பயக்கும்” என்று அவர் கூறினார்.
Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.