குணப்படுத்த முடியாத நோய் காரணமாக சகிக்கமுடியாத வலி மற்றும் உபாதையால் துன்பப்படும் ஒருவர் தனது உயிரைப்போக்கிக்கொள்ள சட்டப்படி உதவிபெறமுடியும்.
இதற்கு விண்ணப்பம் செய்பவர் 18 வயது நிரம்பியவராக இருக்கவேண்டும்; இவர் 6மாதங்களுக்கு மேல் உயிர் வாழ மாட்டார்-neuro degenerative Disease என்ற நரம்புச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், 12 மாதங்களுக்கு மேல் உயிர் வாழமாட்டார் என்பதை இரண்டு வைத்தியர்கள் உறுதி செய்யவேண்டும் ; இவர் விக்டோரிய மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளை, விண்ணப்பதாரி பூர்த்திசெய்யவேண்டும்.
Lethal drug என்ற இந்த மரணத்தை ஏற்படுத்தும் மருந்தை Alfred hospital என்ற விக்டோரிய மாநில வைத்தியசாலை கொண்டுசென்று நோயாளிக்கு வழங்கும். பூட்டப்பட்ட பெட்டியில் இருந்து இதை அவர் எடுத்து, இரண்டு திரவங்களை ஒரு கோப்பையில் கலந்து அருந்தவேண்டும். முதலில் மயக்கநிலை ஏற்பட்டு பின்னர் ஓருமணித்தியாலத்தில் மரணம் நிகழும் என்று கூறப்படுகிறது.
கடந்த 17 மாதங்களுக்கு முன்னர் விக்டோரிய மாநில பாராளுமன்றத்தில் மிகக்குறைந்த வாக்குவித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த மசோதா, பல பரிசீலனைகள் மற்றும் பாதுகாப்பு உப பிரிவுகள் என்பன சேர்க்கப்பட்டு தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது.