பூர்வீக குடி மக்களுக்கும் மற்றவர்களுக்குமிடையிலான இடைவெளி குறையுமா?

Close the Gap

Close the Gap Source: SBS Tamil

பூர்வீக குடி மக்களுக்கும் மற்றவர்களுக்குமிடையிலான இடைவெளியைக் குறைப்பதென்று அப்போதைய அரசு உறுதியளித்திருந்தாலும் அது முற்றாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. “Close the Gap Day” ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை அவதானிக்கப்படுகிறது. இது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.


ஏற்றத் தாழ்வுகள் இல்லாத இடம் உலகில் எங்காவது இருக்கிறதா என்பது கேள்வி தான்.  பூர்வீக குடி மக்களுக்கும் மற்றவர்களுக்குமிடையிலான இடைவெளியை நீக்க வேண்டுமென்ற கோரிக்கை 2006ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டிருந்தாலும், 2008ஆம் ஆண்டு Kevin Rudd தலைமையிலான அப்போதைய Labor அரசாங்கம் திருடப்பட்ட தலைமுறையினருக்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரிய பின்னர் தான் செயல்வடிவம் காண ஆரம்பித்தது. 

2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், 2008ஆம் ஆண்டு மார்ச் வரையான காலப்பகுதியில், பூர்வீக மக்களின் நல்வாழ்வை மேம்படுத்த அரச அமைப்புகள் ஆறு இலக்குகளை ஏற்றுக் கொண்டன.

  • மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கும் பூர்வீக மக்களின் ஆயுட்காலத்தை 2031ஆம் ஆண்டிற்குள் நீட்டிப்பது;
  • 2018ஆம் ஆண்டு முடிவதற்கு முன், பூர்வீக குடிமக்களின் குழந்தைகள் இறக்கும் வீதத்தைப் பாதியாகக் குறைப்பது;
  • நான்கு வயதுக்குட்பட்ட பூர்வீக குடி சிறுவர்களில் 95 சதவீதமான சிறுவர்கள் 2025ஆம் ஆண்டுக்கு முன் கல்வியில் சேர்வதை உறுதிப்படுத்துதல்;
  • 2018ஆம் ஆண்டு முடிய முன்னர் வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத்தில் பூர்வீக குடி மாணவர்களில் பாதிப் பேரையாவது மற்றைய மாணவர்களின் தரத்திற்கு உயர்த்துவது;
  • 2020ஆம் ஆண்டிற்கு முன் பூர்வீக குடி மாணவர்களில் பாதிப் பேரையாவது 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்க செய்வது;
  • அப்பொழுது இருந்த வேலை வாய்ப்புடன் ஒப்பிடுகையில், 2018ஆம் ஆண்டிற்குள் பூர்வீக குடிமக்களின் வேலை வாய்ப்பை அதிகரித்து, அந்த இடைவெளியை பாதியாக குறைப்பது;
  • மற்றும் இறுதியாக சேர்க்கப்பட்ட ஒரு இலக்கான, 2018ஆம் ஆண்டிற்குள் பூர்வீக குடி மாணவர்கள் பாடசாலை செல்லும் நாட்கள் மற்றைய மாணவர்கள் செல்லும் நாட்கள் போல் உயர்த்துவது –
என்பவையாகும்.

தற்போதைய Liberal-National Coalition அரசு, அதற்கான ஒரு செயல் முறையை, 2017 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது.  பூர்வீக குடிமக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் முக்கிய தலைவர்களுடன் கலந்தாலோசித்து அதற்கான வழிமுறைகளை வகுத்தது.  இதில் அதிக முன்னேற்றத்தைக் காண வேண்டுமென்றால் அரசின் அனைத்துக் கட்டமைப்புகளும் பங்கேற்க வேண்டும் என்று கூறிய பிரதமர் Scott Morrison, ஆஸ்திரேலிய மாநில பிராந்திய அரசுகளின் கூட்டமைப்பான COAG இன் பங்களிப்பையும் உறுதி செய்தார்.  அரசின் அனைத்து மட்டங்களும் பூர்வீக குடிமக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் முக்கிய தலைவர்களும் உண்மையான கூட்டாண்மையுடன் செயல்படுவதற்கானதொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள்.

ஆனால், ஏழு இலக்குகளில் இரண்டு இலக்குகளில் மட்டுமே அரசு பூரணமாக செயல்பட்டிருக்கிறது என்று அண்மையில் வெளியான அறிக்கையின் முடிவுகள் சொல்கின்றன.

பூர்வீக குடி மக்களின் வாழ்வில் பாரிய முன்னேற்றம் ஏற்படாததற்குக் காரணம், அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வதற்கு உதவுவதில்லை என்றும் பொறுப்பற்ற தன்மையுடன் அவர்கள் இருக்கிறார்கள் என்றும் One Nation கட்சித் தலைவர் செனட்டர் Pauline Hanson பேசியதை எதிர்க்கட்சிப் பேச்சாளர்கள் மட்டுமல்ல, பிரதமரும் நிராகரித்தார்.

அணுகு முறையில் பிழை இருப்பது தான் அதற்குக் காரணம் என்று அந்த அறிக்கையை சமர்ப்பிக்கும் போது பிரதமர் Scott Morrison கூறினார்.

“This is a stark and sobering report that I have tabled. I welcome the gains. I honour the hard work across every front, and we must be careful not to speak of our first Australians as a broken people, because they are not. So many of our first Australians are out there, making their way, despite the disadvantages that they have faced.”

அணுகு முறையில் தவறு இருக்கிறது என்று பிரதமர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முன், எதை அணுகுகிறார்கள் என்று பின் நோக்கிப் பார்ப்பது அவசியம்.

இதுவரை 12 வருடாந்த அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அனைத்து அறிக்கைகளும் நாம் முன்னர் குறிப்பிட்ட இலக்குகளை முற்றாக எட்டவில்லை என்பதையே மீண்டும் மீண்டும் சொல்லி வந்தன.  ஏழு இலக்குகளில் இரண்டு இலக்குகளில் மட்டுமே அரசு பூரணமாக செயல்பட்டிருக்கிறது என்று அண்மையில் வெளியான அறிக்கையின் முடிவுகள் சொல்கின்றன.   பூர்த்தி செய்யப்பட்ட இரண்டு இலக்குகளில் ஒன்று ஆரம்பக் கல்வி, மற்றையது, கற்க ஆரம்பித்தவர்கள் 12ஆம் ஆண்டு வரை படித்து முடித்தல்.

பூர்வீகப் பின்னணி அல்லாத ஆஸ்திரேலியர்களுடன் ஒப்பிடும் போது, மற்றவர்களில் 75 சதவீதமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் அதே வேளை, 49 சதவீதமான பூர்வீக மக்களுக்குத் தான்  வேலைவாய்ப்பு உள்ளது.

மற்றைய ஆஸ்திரேலியர்களுடன் ஒப்பிடுகையில், இரண்டு மடங்கான பூர்வீக பின்னணி கொண்ட குழந்தைகள் இறப்பை தழுவுகிறார்கள்.

ஆயுட்காலம் குறித்த இடைவெளி 2031ஆம் ஆண்டுக்கு முன் நீக்கப்பட வேண்டும் என்ற இலக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை, பூர்வீக பின்னணி ஆண்களும் பெண்களும் 9 முதல் 7 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பின்வரும் விடயங்களில் அதிக கவனம் எடுக்க வேண்டும் என்று, ஆஸ்திரேலிய மாநில பிராந்திய அரசுகளின் கூட்டமைப்பான COAG, 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முடிவெடுத்தது.

  • குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள்;
  • ஆரோக்கியம்; கல்வி;
  • பொருளாதார வளர்ச்சி;
  • வீட்டு வசதி;
  • இளைஞர் நீதி உட்பட, பூர்வீக குடி மக்களுக்கான நீதி
இவற்றில் பாரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை பிரதமர் Scott Morrison அண்மையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

“The targets that were set for Indigenous Australians, not by Indigenous Australians, do not celebrate the strengths, achievements and aspirations of Indigenous people. They don't tell you what is happening on the ground or stirring under it. They don't tell you how realistic or achievable these targets were in the first place. They reinforce the language of failing and falling short. And they also mask the real progress that has been made.”

கடந்த வருடம் மே மாதத்தில் அமைச்சரவையில் மாற்றங்களை அறிமுகப்படுத்திய பிரதமர் Scott Morrison, முதல்முறையாக பூர்வீக குடி மக்கள் விவகாரங்களுக்கான அமைச்சராக பூர்வீக பின்னணி கொண்ட Ken Wyatt அவர்களை நியமித்தார்.

பூர்வீக மக்களின் தினசரி வாழ்வைப் பாதிக்கும் விடயங்களில் மாற்றங்களை உருவாக்குவதே தனது முதல் கடமை என்கிறார் Ken Wyatt.

“Our election policy commitment was to constitutional recognition. It is in my charter letter. But the focus I want to have, and continue to do on a daily basis, are the things that are within the Closing the Gap report, plus family violence, and economic development and wealth creation, utilising the assets that Aboriginal people have in the way of land. And looking at how we realise incomes against that land.”

ஆனால், பூர்வீக குடி மக்களின் வாழ்க்கையில் ஒரு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த, அவர்களின் குரல்கள் நாடாளுமன்றத்திலும் கேட்க வேண்டியது அவசியம்.

அரசியலமைப்பை மறுசீரமைப்பு செய்வதென்று அரசு முடிவெடுத்திருந்தாலும் அதற்கான செயல்பாடு மிக மெதுவாகவே நகர்கிறது. 

பூர்வீக குடி மக்களின் விருப்பங்களை நிவர்த்தி செய்யும் ஒரு திறந்த மற்றும் பரந்த ஆலோசனை செயல்முறை அவசியம் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

உலகில் எங்கும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன.  ஆனால், பூர்வீக குடி மக்களுக்கும் மற்றைய ஆஸ்திரேலியர்களுக்குமிடையிலான இடைவெளி தொடர்ந்தும் அதிகமாகவே இருக்கிறது.  அதனைக் குறைப்பதற்கு ஆஸ்திரேலியர்களாக நாம் என்ன செய்யலாம் என்று சிந்திப்பது மட்டுமல்ல, அதனை செயலிலும் காட்ட வேண்டும்.  அதனை முதன்மைப்படுத்த உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு நாள் “Close the Gap Day” ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை அவதானிக்கப்படுகிறது.  இந்த வருடம் - மார்ச் 19ஆம் நாள்.


Share