சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து குவன்ஷொ (Guangzhou) நகருக்குப் பயணிக்க விமானத்தில் ஏறும் முன்னர், விமான இயந்திரம் மீது நாணயங்களை எறிந்துள்ளார் 80 வயதான பெண்மணி ஒருவர். 150 பயணிகளுடன் பயணிக்கவிருந்த CZ380, ஷாங்காய் நகரின் புடொய்ங் (Pudoing) விமான நிலையத்தில் பல மணி நேரம் தாமதமாகக் கிளம்புவதற்கு, இந்தப் பெண்மணி எறிந்த நாணயங்கள் காரணமாகின.
நேற்று நடந்த இந்த சம்பவத்தின் கதாநாயகியான 80 வயதுப் பெண்மணி, தன்னால் நடக்க முடியாது என்ற காரணத்தால், சக்கர நாற்காலி வேண்டும் என்று கோரியுள்ளார். அவரது குடும்ப அங்கத்தினர்களுடன் இவரை சக்கர நாற்காலியில் வைத்து விமான சேவை தொழிலாளர்கள் விமானத்தின் படிக்கட்டுகளை நோக்கி நடந்துகொண்டிருந்த வேளை, விமான இயந்திரத்தை நோக்கி நாணயங்களை இவர் வீசி எறிந்துள்ளார்.
விமான இயந்திரத்தை அதிகாரிகள் பரிசோதித்து முடிக்கும் வரை, விமானத்திலிருந்த 150 பயணிகளும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். விமானம் ஐந்து மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டது.
8 நாணயங்கள் நிலத்திலும், ஒரு நாணயம் விமான இயந்திரத்தினுள்ளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அந்த ஒற்றை நாணயம், இயந்திரத்தினுள் இருக்கும்போதே விமானம் கிளம்பியிருந்தால், விபரீதத்தில் முடிந்திருக்கும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
80 வயதான பெண்மணியைக் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள் என்றும் அவர் பௌத்த மதத்தில் நம்பிக்கை கொண்டவர் என்றும் தெரியவருகிறது.
நன்றி: Peoples’ Daily, China.