சமீபத்தியகுறியீட்டின்படி ஆஸ்திரேலியா எட்டாவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக பட்டியலிடப்பட்டுள்ளது அதேவேளை உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை ஜப்பான் கடவுச்சீட்டு பெறுகிறது. இதைப் பயன்படுத்தி 193 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்றுவரலாம்.
சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (IATA) தரவைப் பயன்படுத்தி உலகில் 227 இடங்களுக்கு வீசா இல்லாமல் பயணிக்கக்கூடிய 199 நாடுகளின் கடவுச்சீட்டுகளை லண்டனை தளமாகக் கொண்ட முதலீட்டு இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமான Henley & Partners இந்த குறியீட்டை தொகுத்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய கடவுச்சீட்டுகள் உலகில் இரண்டாவது மிகவும் சக்திவாய்ந்தவை என்றும் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் மூன்றாவது சக்திவாய்ந்தவை என தெரிவிக்கப்படுகிறது.

Japan topped the latest Henley Passport Index. Source: SBS

The Henley Passport Index ranks the Afghan passport as the least powerful. Source: SBS
ஆஸ்திரேலியர்கள் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய நாடுகள்
Henley Passport குறியீட்டின்படி, 185 நாடுகளுக்கு ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமலோ அல்லது அந்த நாட்டிற்கு சென்றடைந்தவுடன் வீசா, சுற்றுலா பயணிகள் அனுமதி அல்லது மின்னணு பயண அதிகாரம் (ETA) ஆகியவற்றைப் பெற முடியும்.
போர்ச்சுகல் முதல் போலந்து மற்றும் United Kingdom மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் வரை நாற்பத்தொன்பது ஐரோப்பிய நாடுகளுக்கு ஆஸ்திரேலியர்கள் வீசா இல்லாமல் பயணிக்கலாம்.
நியூசிலாந்து, ஃபிஜி மற்றும் பிரெஞ்சு பாலினேசியா உள்ளிட்ட பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பன்னிரண்டிற்கும் அதிகமான நாடுகள் மற்றும் Barbados, Cayman Islands, Jamaica உள்ளிட்ட கரீபியன் பகுதியில் உள்ள பல நாடுகளுக்கு ஆஸ்திரேலியர்கள் வீசா இல்லாமல் பயணிக்கமுடியும்.
போட்ஸ்வானா, மொராக்கோ மற்றும் துனிசியா உள்ளிட்ட பன்னிரண்டு ஆப்பிரிக்க நாடுகளுடன், அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் மெக்சிகோ போன்ற அமெரிக்காவில் உள்ள பத்தொன்பது நாடுகளுக்கு ஆஸ்திரேலியர்கள் நுழைவதற்கு விசா தேவையில்லை.
ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட 10 ஆசிய இடங்களுக்கும், இஸ்ரேல் மற்றும் கத்தார் உட்பட மத்திய கிழக்கில் உள்ள ஆறு இடங்களுக்கும் ஆஸ்திரேலியர்கள் விசா இல்லாமல் செல்லலாம்.
கம்போடியா, எகிப்து, லெபனான், பராகுவே மற்றும் சமோவா உட்பட உலகெங்கிலும் உள்ள 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்குள் ஆஸ்திரேலியர்கள் நுழையும்போது விசா அல்லது சுற்றுலா பயணிகள் அனுமதியைப் பெறலாம். அதே நேரத்தில் அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் நுழையும் போது மின்னணு பயண அதிகாரம் (ETA) பெற முடியும்.
ஆஸ்திரேலியர்களுக்கு வீசா தேவைப்படும் நாடுகள்
ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 42 நாடுகளுக்கு பயணிக்கும் முன் வீசா பெற வேண்டும் அல்லது முன் அனுமதி பெற வேண்டும்.
இதில் பாதிக்கு மேற்பட்டவை ஆப்பிரிக்காவில் உள்ள தெற்கு சூடான், கென்யா மற்றும் Ghana போன்ற நாடுகளாகும்.
ஆப்கானிஸ்தான், சீனா, இந்தியா மற்றும் வட கொரியா உட்பட ஆசிய நாடுகள், கரீபியனில் உள்ள கியூபா மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நவ்ரு ஆகிய நாடுகளுக்கு பயணிப்பதற்கு முன் ஆஸ்திரேலியர்கள் வீசா பெறவேண்டும்.
Azerbaijan, ரஷ்யா, துருக்கி, மத்திய கிழக்கில் உள்ள சிரியா மற்றும் யேமன், அமெரிக்காவின் Chile மற்றும் Suriname போன்ற நாடுகளுக்கும் விசா தேவைப்படும்.
ஆஸ்திரேலியர்களுக்கு மிகவும் பிரபலமான சர்வதேச பயண இடங்கள்
ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தோனேஷியா ஆஸ்திரேலியர்கள் பயணிக்கும் மிகவும் பிரபலமான நாடாகும்.
நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை ஆஸ்திரேலியர்களால் அதிகம் பயணிக்கப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது நாடுகளாகும், அதே நேரத்தில் இங்கிலாந்து, சிங்கப்பூர், இந்தியா, பிஜி, தாய்லாந்து, இத்தாலி மற்றும் வியட்நாம் ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
அந்த பட்டியலில் இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு மட்டுமே ஆஸ்திரேலியர்கள் பயணிப்பதற்கு முன்பு விசா பெற வேண்டும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.