ஒரு ஜோடி காலணிகளோ, அல்லது விலையுயர்ந்த காரோ, நீங்கள் எதை வாங்கினாலும் உங்களது கொள்முதல் ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
விற்பனையாளர் அல்லது உற்பத்தியாளரின் எந்தவொரு தன்னார்வ அல்லது நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும்தாண்டி, ஆஸ்திரேலியாவில் விற்கப்படும் எந்தவொரு பொருள் அல்லது சேவைக்கும் நுகர்வோர் உத்தரவாதங்கள் பொருந்தும்.
ஆஸ்திரேலியாவில் உங்கள் தனிப்பட்ட அல்லது வீட்டு உபயோகத்திற்காக நீங்கள் வாங்கும் அனைத்து பொருட்களும் நுகர்வோர் உத்தரவாதத்துடன் வருகின்றன.
அதாவது அவை செய்ய வேண்டிய வேலையைச் செய்யாவிட்டால், அப்பொருளுக்குரிய விளக்கத்துடன் பொருந்தவில்லை என்றால், அல்லது அவை பாதுகாப்பற்றவை எனில் அதற்கான பணத்தை திரும்பப்பெற, மாற்றீடு பெற அல்லது பழுதுபார்த்துத் தருமாறுகோர உங்களுக்கு உரிமை உண்டு.
அதேபோல் தனிப்பட்ட மற்றும் வீட்டு உபயோகத்திற்காக நீங்கள் பெறும் சேவைகளும், நுகர்வோர் உத்தரவாதங்களுடன் வருகின்றன. இதன்கீழ் குறித்த சில விடயங்களை சரிசெய்யும்படி கேட்கவோ, ஒரு சேவையை ரத்து செய்யவோ மற்றும் சில நேரங்களில் பாரதூரமான தவறு ஏதேனும் நடந்துவிட்டால் இழப்பீடு கோரவோ உங்களுக்கு உரிமை இருக்கிறது.

Consumer guarantees protect buyers against faulty or substandard goods and services under the Australian Consumer Law. Source: Getty Images
இணையவழி விற்பனையாளர்கள் உட்பட ஆஸ்திரேலியாவில் உள்ள வணிகங்கள் அனைத்தும் சட்டத்தை பின்பற்ற வேண்டும்.
நீங்கள் வாங்கிய பொருட்களில் ஏதேனும் சிக்கல் இருந்தால் முதலில் அதை எங்கே வாங்கினீர்களோ அவரிடம் திரும்பிச் செல்லவேண்டும்.
நீங்கள் அதை வாங்கிய கடை அல்லது இணையவழி நிறுவனத்திடம் சிக்கலை விளக்கி, பழுதுபார்த்து தருமாறு அல்லது மாற்றீடு தருமாறு அல்லது பணத்தைத் திரும்பத்தருமாறு கேளுங்கள்.
ஒரு சிறிய பிரச்சனையாக இருந்தால், உதாரணமாக நீங்கள் ஒரு புதிய கோட் வாங்கினீர்கள் அதில் ஒரு பொத்தானைக் காணவில்லை என்றால், அதைச் சரிசெய்து புதிய பொத்தானை வைத்துத் தருவதா அல்லது வேறு கோட் ஒன்றைத் தருவதா அல்லது பணத்தைத் திருப்பித் தருவதா என்பது விற்பனையாளரின் விருப்பம். இது ஒரு பெரிய சிக்கலாக இருந்தால் உதாரணமாக,

Under the consumer guarantees, the seller is required to provide the buyer with a remedy if the goods or services are faulty or substandard. Source: Getty Images
நீங்கள் ஒரு காரை வாங்குகிறீர்கள் அதில் பிரேக் இயங்கவில்லை, அது சரியாக ஓடவில்லை என்றால், அதற்கான மாற்றீடு பெறல், பழுதுபார்த்தல் அல்லது பணத்தை திரும்பப்பெறல் போன்ற தெரிவுகள் உங்களுக்கு உண்டு.
சட்டத்தை மீறுபவர்கள் அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் புலம்பெயர்ந்த மற்றும் அகதி பின்னணியைச் சேர்ந்த நுகர்வோர் மொழிப்பிரச்சினை காரணமாக ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
மக்கள் புத்தம்புதிய சூழல்களில் அல்லது சூழ்நிலைகளில் இருக்கலாம். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வந்திருக்கலாம். உதாரணமாக பயன்படுத்தப்பட்ட கார்களை கொள்வனவு செய்யும் இடங்களுக்கு சென்றிருக்க மாட்டார்கள் அல்லது ஆஸ்திரேலியாவில் தொலைபேசிகளை வாங்குவதற்கு இருக்கும் திட்டங்கள் பற்றி அனுபவமற்றவர்களாக இருப்பார்கள். இது அறியாமையால் ஏற்படும் தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும். அதேநேரம் ஏமாற்றப்படக்கூடிய சந்தர்ப்பங்களுக்கும் வழிவகுக்கும்.
நுகர்வோர் முறைப்பாடு தொடர்பில் பேச்சு நடத்துவது உட்பட இலவச சட்ட சேவைகளை சமூக சட்ட மையங்கள் வழங்குகின்றன.

The threshold amount for consumer guarantees is rising to $100,000 from 1 July 2021. Source: Getty Images
சில்லறை விற்பனையாளர் அல்லது பொருளை விற்ற நபருக்கு விரிவாக கடிதமொன்றை எழுதி, அதில் நிலைமை ஏன் திருப்திகரமாக இல்லை என்பதை விளக்குவதுடன் அந்தச் சிக்கலை சரிசெய்வதற்கு இருக்கும் தெரிவுகளையும் நாம் மிகத் தெளிவாக குறிப்பிடுவோம்.
ஒரு சட்டத்தரணி உங்களுக்காக அதைச் செய்ய முடியும். என்றபோதிலும் மற்றொரு நபரும் அதை முயற்சிக்க முடியும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.