ஆஸ்திரேலிய பெடரல் தேர்தல் மே இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதில் வாக்களிப்பதென்பது ஆஸ்திரேலிய அரசைத் தேர்ந்தெடுப்பதில் உங்கள் கருத்தைக் கூறுவதற்கான ஒரு வாய்ப்பாகும்.
18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு ஆஸ்திரேலிய குடிமகனும் இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்பது கட்டாயமாகும்.
இதற்கேற்ப நாடுமுழுவதும் வாழும் வாக்களிக்கத் தகுதியான அனைவரும் தேர்தல்கள் ஆணையகத்தில் தம்மைப் பதிவுசெய்திருக்க வேண்டும்.
பொதுவாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் நீங்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்வரை இதில் இணைவதற்காக காத்திருக்கவேண்டியதில்லை.
வாக்காளர் பட்டியலில் இணைவதற்கான படிவத்தை நிரப்புவதற்கு உங்களது ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு அல்லது லைசன்ஸ் அல்லது குடியுரிமைச் சான்றிதழ் போன்ற அடையாள ஆவணம் தேவைப்படும்.

Voting Centre Source: AEC
இணையவழியில் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்கும் முன், அடையாள ஆவணம் ஒன்றை தயார் நிலையில் வைத்திருங்கள்.
உங்களிடம் எந்தவொரு அடையாள ஆவணமும் இல்லை என்றால், அல்லது அதில் பிழையான தகவல் இருந்தால் அல்லது தொலைத்துவிட்டிருந்தால், அதை நீங்கள் மீளப்பெறுவதற்கு விண்ணப்பித்திருப்பது அவசியம்.
அடையாள ஆவணத்தை மீளப்பெறுவதற்கான காத்திருப்பு காலம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்பதால், முன்கூட்டியே இதை மீளப்பெறுவதற்கு விண்ணப்பித்திருப்பது அவசியமாகும்.
நீங்கள் வாக்காளர் பட்டியலில் இணைந்தபின்னர் எந்தவொரு பெடரல், மாநில அல்லது உள்ளாட்சித் தேர்தலிலும் வாக்களிக்கலாம். இதனால்தான் உங்கள் விவரங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது இன்றியமையாதது.

Source: AEC
உங்கள் விவரங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் உங்களுக்கு உதவும். உதாரணமாக, நீங்கள் வீடு மாறிவிட்டீர்கள் என்பதற்கான தரவு கிடைத்தால், உங்கள் முகவரியை மாற்றுவதற்கான நினைவூட்டல்கள் அனுப்பப்படும்.
நீங்கள் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இணைந்துவிட்டீர்களா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், aec.gov.au/check என்ற இணைய முகவரிக்குச் சென்றோ, அல்லது 13 23 26 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ தெரிந்துகொள்ளலாம்.
இணையவழியாக வாக்காளர் பட்டியலில் இணையமுடியாதவர்கள் எந்தவொரு தேர்தல் அலுவலகத்திலிருந்தும் காகித பதிவு படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். அல்லது 13 23 26 என்ற எண்ணை அழைத்தால் அவர்கள் அதை மின்னஞ்சலில் அனுப்புவார்கள்.
வாக்காளர் பட்டியலில் இணைந்துகொள்வதற்கான தகுதி மற்றும் நிபந்தனைகள் குறித்த வழிகாட்டுதல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உங்கள் மொழியில் உள்ளன. அவர்கள் தொலைபேசி ஊடாக மொழிபெயர்த்துரைப்பு சேவையையும் வழங்குகிறார்கள்.

Source: AEC
கூடுதலாக, தேர்தல் ஆணைய இணையதளம் எளிய ஆங்கிலம் மற்றும் விளக்கப்படங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட 'எளிதான வாசிப்பு வழிகாட்டியையும் கொண்டிருக்கிறது.
தகுதிவாய்ந்த வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தவறினால் தண்டப்பணம் செலுத்த நேரிடும்.
தண்டப்பணம் செலுத்த வேண்டும் என்பதைத்தாண்டி வாக்காளர் பட்டியலில் இணைந்துகொள்ளாமல்விடுவதன்மூலம் ஆஸ்திரேலியாவை வடிவமைப்பது தொடர்பில் உங்கள் பங்கைச் செய்வதற்கான சந்தர்ப்பத்தை நீங்கள் தவறவிட நேரிடும்.
தேர்தல் மற்றும் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு: www.aec.gov.au
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.