ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட விசாவுக்கு விண்ணப்பிக்கத் தகுதிபெறுபவர்களில் Temporary skill shortage (TSS) subclass 482 Medium-term streamஇல் இருப்பவர்களுக்கும் தற்போது வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவிலுள்ள முதலாளிகள், குறிப்பிட்ட துறையில் பணிபுரிவதற்கென வெளிநாட்டிலிருந்து பணியாளர்களை வரவழைப்பதற்கான விசாவே Temporary skill shortage (TSS) subclass 482 ஆகும்.
முன்பு நடைமுறையிலிருந்த Temporary Work (Skilled) Subclass 457 விசாவுக்கு மாற்றீடாக குறித்த விசா அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த விசாவின்கீழ் Short-term stream, Medium-term stream, Labour agreement stream ஆகிய மூன்று பிரிவுகளில் பணியாளர்கள் வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா வந்து பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2022 ஜூலை 1 முதல், Short-term stream விசா வைத்திருப்பவர்கள், ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமைபெற ஏதுவாக, Temporary Residence Transition (TRT) விசாவிற்கு விண்ணப்பிக்கக்கூடியதாக இருந்தது.
Temporary Residence Transition (TRT) விசாவிற்கு தகுதிபெறுபவர்கள் பெப்ரவரி 1 2020 க்கும் டிசம்பர் 14 2021 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், ஆகக்குறைந்தது ஒரு வருடம் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும் என்பது இதற்கான நிபந்தனையாகும்.
மேலும் ஜுலை 1 2022 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இந்நடைமுறை மூலம் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது Medium-term stream விசாவுடன் இருப்பவர்களும், Regional Occupation Listஇல் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்களில் இருந்தால், அவர்களும் Temporary Residence Transition (TRT) விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்விசாவில் உள்ளவர்களும், பெப்ரவரி 1 2020 க்கும் டிசம்பர் 14 2021 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆகக்குறைந்தது ஒரு வருடம் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும்.
இவர்களும் ஜுலை 1 2024 வரை மட்டுமே இந்நடைமுறை மூலம் விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்படுகிறது.
கொரோனா பரவல் காலத்தில் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து வேலை செய்த பலர் இதன்மூலம் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.