வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய முப்பது வயதிற்கும் நாற்பது வயதிற்கும் இடைப்பட்ட வயதுடைய ஒருவர், தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் இரு வாரங்களுக்கு விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். அவருக்கு COVID-19 தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதன் பின்னர் அங்கிருந்து வெளியேறிய அனுமதிக்கப்பட்டார். விக்டோரிய மாநிலத்திலுள்ள Wollert என்ற இடத்திலுள்ள வீட்டிற்கு, மே மாதம் 4ஆம் தேதி திரும்பிய அவருக்கு, 8ஆம் தேதி COVID-19 நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தது.
கடந்த திங்கள், மே 10ஆம் தேதி அவர் பரிசோதிக்கப்பட்டார். அவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று செவ்வாய்க்கிழமை காலை அறிவிக்கப்பட்டது.
இது குறித்த முழு விசாரணையை மேற்கொண்டு வருவதாக விக்டோரிய மாநில சுகாதாரத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“நோயறிதலை உறுதிப்படுத்த மேலும் சோதனை அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுவரை, இவருக்குத் தொற்று இருக்கிறது என்று கருதி அதற்கேற்ப சுகாதாரத் துறை செயல் படுகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொற்றுள்ளவர் என அடையாளம் காணப்பட்டவர் எங்கெல்லாம் சென்றிருந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டதும் அவை வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும், அவருடன் நெருங்கிய தொடர்புகள் ஏற்படுத்தியவர்களும் சோதனைக்கு உட்படுத்தப் படுகிறார்கள் என்றும் சுகாதாரத்துறை மேலும் தெரிவித்துள்ளது.
இவருக்கு நோய்த்தொற்று எப்படி ஏற்பட்டது என்பதைத் தீர்மானிக்க, இரண்டு மாநில நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அறைக்கு அருகிலுள்ள மருத்துவ வசதியிலிருந்து இவருக்குத் தொற்று பரவியிருக்கலாம் என்று தெற்கு ஆஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
இவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் செய்யப்பட்ட மூன்று சோதனைகளிலும் எதிர்மறை முடிவுகளே கிடைத்தன. எனவே அவருக்குத் தொற்று தெற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டிருக்க வாய்ப்பு மிகக் குறைவு என்று தெற்கு ஆஸ்திரேலிய தலைமை மருத்துவ அதிகாரி Nicola Spurrier தெரிவித்தார்.
இவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த விடுதியின் கண்காணிப்புக் கமராக்களை (CCTV) மாநில சுகாதார ஊழியர்கள் மறுபரிசீலனை செய்வார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.