விசா நிராகரிப்பு வீதம் அதிகரிப்பு- மந்தகதியில் செல்லும் மீளாய்வு விண்ணப்ப பரிசீலனை!

Administrative Appeals Tribunal

Source: SBS

ஆஸ்திரேலிய விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் அதற்கு எதிராக தாக்கல் செய்த மீளாய்வு விண்ணப்பங்கள் ஆயிரக்கணக்கில் தேங்கிக்கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு Migration tribunal-களில் மீளாய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ள பின்னணியில் இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

முன்னெப்போதும் இல்லாதவகையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதால், விண்ணப்பங்கள் அனைத்தும்  கடுமையான பாதுகாப்பு விதிகளின் கீழ் பரிசீலிக்கப்படுவதாலும், நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும் இத்தேக்கநிலை எழுந்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு இதனை நியாயப்படுத்தியுள்ளது.

The Australian வெளியிட்டுள்ள தரவுகளின்படி- கடந்த 2016 ஜுலைக்கும் 2019 ஆகஸ்டுக்கும் இடையில் Administrative Appeals Tribunal-ஆல் மீளாய்வுசெய்யப்பட்ட குடிவரவு மற்றும் அகதிதஞ்ச விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் 257 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று 2017-18 காலப்பகுதியில் நிராகரிக்கப்பட்ட நிரந்தர குடியேற்றத்திற்கான விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையில்-அதற்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது- 46 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதுதொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோல்மன் - முன்னைய லேபர் ஆட்சியைப் போலில்லாமல் கடுமையான விதிமுறைகளின் கீழ் விசா விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதால், பெருமளவு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று எனவும் அதற்காக தாம் வருந்தவில்லை எனவும் கூறியுள்ளார்.




Share

Published

Updated


Share this with family and friends