இந் நாட்டின் மிகவும் பிரபல கலைஞர்களில் ஒருவரான Bert Newton காலமானார்

விருது பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் கலைஞருமான Bert Newton நேற்று, சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 83.

Bert Newton at the 2018 Logie Awards.

Bert Newton at the 2018 Logie Awards. Source: AAP

தொலைக்காட்சி தொகுப்பாளராகப் பல விருதுகளைப் பெற்ற Bert Newton, சில வருடங்களாக உடல் நலம் குன்றியிருந்தார்.  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு 2012ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டதால் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  அதிலிருந்து மீண்டவருக்கு, கடந்த மே மாதத்தில் ஒரு அவசர அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.  உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று காரணமாக ஒரு கால் (முழங்காலின் கீழ்) துண்டிக்கப்பட்டது.

Bert Newton இறப்பை உறுதி செய்த அவரது குடும்ப நண்பரும் பொழுதுபோக்கு நிருபருமான Peter Ford, “அவர் எனக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் நண்பராகவும் இருந்தார்” என்றும் “அவரது இறுதி நாட்களில் அவர் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்” என்றும் Twitterஇல் பதிவிட்டுள்ளார்.
தொலைக்காட்சியில் மூத்த தொகுப்பாளராகப் பணியாற்றிய Bert Newton ஒரு வாரத்திற்கு முன்னர் கூட தனது பேரக்குழந்தைகளுடன் சிரித்து விளையாடியுள்ளார் என்று Peter Ford மேலும் கூறினார்.
மனைவி Patti, பிள்ளைகள் Lauren, Matthew மற்றும் ஆறு பேரக்குழந்தைகளை விட்டுப் பிரிந்திருக்கிறார் Bert Newton.

நம் நாட்டில் வியாபார நோக்குடன் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பித்த 1957ஆம் ஆண்டு, Channel 7 தொலைக்காட்சி நிலையத்துடன் Bert Newton தனது தொலைக்காட்சி வாழ்க்கையைத் தொடங்கினார்.

பல தசாப்தங்களாக, அவர் வானொலி, மேடை நாடகம் மற்றும் தொலைக்காட்சி அனைத்திலும் ஒரு புகழ்பெற்ற ஆளுமை என்ற பெயரையும், தொகுப்பாளராக அடையாளத்தையும் தனதாக்கிக் கொண்டார்.

ஆஸ்திரேலிய ஊடகத்துறையில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படும் Logie Awards என்ற விருதைப் பல முறை வென்றுள்ள இவருக்கு ஆஸ்திரேலிய அரசு வழங்கும் அதி உயர் விருதுகளான Order of Australia, Member of the British Empire, மற்றும் Centenary Medal ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

மெல்பன் புறநகர் North Fitzroy என்ற இடத்தில் 1938ஆம் ஆண்டு இவரது பெற்றோருக்கு ஆறாவது (மற்றும் கடைசி) குழந்தையாக இவர் பிறந்தார்.

15 வயதில் வானொலி அறிவிப்பாளராகத் தொழில் புரிய ஆரம்பித்த இவர், Radio 3XY, 3AK, 3UZ மற்றும் 3DB ஆகிய வானொலி நிலையங்களில் ஒலிபரப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.
The Late Show என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 1957ஆம் ஆண்டு முதலில் பங்கேற்ற இவர், Graham Kennedy என்ற கலைஞருடன் இணைந்து Melbourne Tonight என்ற நிகழ்ச்சியில் 1959 முதல் தோன்றி மக்கள் மனதில் இடம் பிடித்துக் கொண்டார்.

இவரது இழப்பிற்கு வருத்தம் தெரிவித்து சக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

By Kulasegaram Sanchayan
Source: SBS News


Share this with family and friends