தலிபானும் ஆப்கானிஸ்தானும்

“தலிபான்களின் வாகனங்கள், 2021 ஆகஸ்ட் 16ஆம் தேதி திங்களன்று, காபூல் தெருக்களில் ரோந்து வந்தன. திடீரென நாடாளுமன்றத்திலும், அதிபர் மாளிகைக்குள்ளும் நுழைந்தனர். இப்படி திடுதிப்பென்று நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏதாவதொரு அமைதித் தீர்வு அல்லது அரசியல் ஒப்பந்தம் மூலமாகத்தான் நடக்கும் என்று நினைத்தேன். ” என்று ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் ஒரு சில பெண் உறுப்பினர்களில் ஒருவரான Farzana Kochai தெரிவித்தார்.

Taliban fighters

Taliban fighters display their flag on patrol in Kabul, Afghanistan, August 19, 2021 Source: AP

Image

அப்படி என்ன தான் நடந்தது?

சோவியத் குடியரசு 1980களில் என்ன செய்தது? தலிபான்கள் எப்படி உருவானார்கள்? அமெரிக்கப் படை 2001இல் ஏன் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தது? இருபது வருடப் போரில் என்ன நடந்தது? ஆப்கானிஸ்தான் அதிபர் ஓட்டமும் அமெரிக்கப் படை வெளியேற்றமும் ஏன் நடந்தது? ஆஸ்திரேலியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்குமான உறவு என்ன? ஈரான், சீனா மற்றும் ரஷ்யாவின் நிலைப்பாடு என்ன? தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு இப்பொழுது என்ன நடக்கிறது? என்னென்ன சவால்கள் முன் நிற்கின்றன? எல்லாவற்றையும் அலசுகிறது இக்கட்டுரை.

தலிபான்களும் ஆப்கானிஸ்தானும்

தலிபான் என்றால் ஆப்கானிஸ்தானின் இரண்டு அலுவல் மொழிகளில் ஒன்றான Pashtun மொழியில் ‘மாணவன்’ அல்லது ‘தேடுபவன்’ (Seeker) என்று பொருள்.  தலிபான்கள், 47% உள்ள Pashtun இனக் குழுவைச் சார்ந்தவர்கள்.
Taliban fighters in Afghanistan
Taliban fighters in Afghanistan Source: SBS
மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் மையமாக ஆப்கானிஸ்தான் இருக்கிறது.  கிழக்கே பாகிஸ்தானும், மேற்கே ஈரானும், வடக்கே உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகளும், வட கிழக்கே சீனாவும் உள்ளன.  எங்கு பார்த்தாலும் உயர்ந்த மலைகளும் காய்ந்த பாலைவனமும் இருக்கும் நாட்டில் நிலக்கரி, தங்கம் போன்ற உலோகங்களை வெட்டி எடுக்கும் கிட்டத்தட்ட 1400 சுரங்கங்கள் உள்ளன.  அமைதியாகப் போய்க் கொண்டிருந்த ஆப்கானிஸ்தானியர்களின் வாழ்க்கையில் திடிரென ஓர் இடி விழுந்தது.
சோவியத் குடியரசின் படை உள்ளே புகுந்தது

சோவியத் குடியரசும் கொரில்லா படையும் - நடந்தது என்ன?

சோவியத் குடியரசு, 1979இல் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்ததன் காரணம் கம்யூனிஸ்ட் அரசை உருவாக்கத் தான்.  கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் நிலங்களைப் பிரித்து மக்களிடம் கொடுத்தனர்.  நவீன மயமாக்கலிலும் ஈடுபட்டனர்.  ஆனால் ஆப்கானியர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.  எதிர்ப்பு கிளம்பியது.
Termez, southern border of the USSR. Soviet combat vehicles seen crossing Soviet-Afghan border as Soviet troops return home from Afghanistan. (AP-Photo/Tass) 18.5.1988
Termez, southern border of the USSR. Soviet combat vehicles seen crossing Soviet-Afghan border as Soviet troops return home from Afghanistan. Source: AP
சோவியத் குடியரசின் படையினரோடு சண்டையிட்டு சுதந்திரம் பெற முஜகையிதீன் போராட்டக் குழு என்ற பெயரில் மக்கள் திரண்டார்கள்.  எதிரியின் எதிரி நண்பன் என்கிற அடிப்படையில், பனிப்போரில் எதிரியாக இருந்த அமெரிக்காவிற்கு கண் உறுத்தியது.  அமெரிக்காவின் உளவுப்பிரிவான CIA, முஜகையிதீன் போராட்டக் குழுவுக்கு உதவத் துவங்கினர்.

தேவையான நிதியும், போர்த்தளவாடங்களும் வழங்கப்பட்டன.  பாகிஸ்தான், சௌதி அரேபியா, சீனா, இங்கிலாந்து போன்று நாடுகளும் முஜகையிதீன் கொரில்லா படைக்கு ஆதரவுக் கொடுத்தார்கள்.  சோவியத் குடியரசிற்கும் முஜகையிதீன் போராட்டக் குழுவினருக்கும் இடையேயான சண்டை தீவிரமானது.

ஐக்கிய நாடுகள் சபையில்,  சோவியத் குடியரசின் அப்போதைய ஆதரவு நாடுகளான கிழக்கு ஜெர்மனி, வியட்நாம், இந்தியா போன்ற நாடுகளைத் தவிர, மற்ற பெரும்பான்மையான நாடுகள் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்தன.  1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளை அமெரிக்காவும், 1984 ஆம் ஆண்டு லோஸ் ஏன்ஜலஸ்ஸில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளை சோவியத் ஒன்றியமும் புறக்கணித்தன.

கிட்டத்தட்ட 9 வருடங்களாக சண்டை நீடித்தது.  ஆப்கானிஸ்தான் மக்கள் 6 இலட்சத்திலிருந்து 20 இலட்சம் வரையில் கொல்லப்பட்டார்கள்.  அது கிட்டத்தட்ட 6 சதவீதத்திலிருந்து 12 சதவீத மக்கள் தொகையினர் ஆகும்.  சோவியத் படையிலும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இறக்க, போரின் செலவுத் தொகையும் அதிகமாகிப் போக, 1987 ஆம் ஆண்டின் நடுவில் சோவியத் அதிபர் Mikhail Gorbachev ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகள் வெளியேறும் என்று அறிவித்தார்.  சோவியத்தின் கடைசிப் படை 1988 மே மாதம் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது.
Young cadets hold portraits of Soviet military servicemen killed in the war in Afghanistan, during memorial ceremonies in Minsk,  15 February 2000. on the 11th anniversary of the Soviet Army's departure from Afghanistan.
11 Years after the Soviets left Afghanistan (15 Feb 2000), Young cadets hold portraits of Soviet military servicemen killed. Source: EPA
அடுத்த மூன்று வருடங்களுக்கு, சோவியத் அமைத்த அரசு, ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தது.  ஆனால் 1992 ஜனவரியில் சொந்த நாட்டிலேயே ஏற்பட்ட சோவியத் அரசின் சரிவிற்குப் பிறகு, அவர்களின் நிதி உதவியில்லாததால் ஆப்கானிஸ்தான் அரசும் சரிந்தது.
அதனைத் தொடர்ந்து எங்கும் குழப்பம் நிலவியது.

தலிபான்கள் அரசும் இஸ்லாமிய சட்டமும்

இந்த குழப்பத்தில், ஆப்கானிஸ்தானில் உள்ள வெவ்வேறு சமூக குடித்தலைவர்கள், 1992 வாக்கில் அதிகாரத்திற்காக தங்களுக்குள் சண்டை போட்டார்கள்.  இரண்டு வருடங்கள் கழித்து 1994இல், ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் உள்ள கந்தகார் பகுதியில், தலிபான்கள் என்கிற போராட்டக் குழு, எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது.
The Taliban had very strict rules for women in Afghanistan, including the wearing of a head-to-toe burqa.
The Taliban had very strict rules for women in Afghanistan, including the wearing of a head-to-toe burqa. (Getty) Source: Getty Images
அதில் பங்கேற்ற உறுப்பினர்கள், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தான் எல்லையோரங்களிலும் உள்ள பாரம்பரிய இஸ்லாமியப் பள்ளிகளில் பயின்றவர்கள்.  சிலர் முஜகையிதீன் போராட்டக் குழுவிலும் இருந்து போராடியவர்கள்.  தங்கள் நாடு எப்படி இருக்கவேண்டும் என்று அவர்களுக்கென்று ஒரு திட்டம் இருந்தது.  ஆப்கானிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடு என்றும், அதை தலைநகர் காபூல் சென்று அறிவிக்கவேண்டும் என்றும் அவர்கள் காத்திருந்தனர்.

தலிபான்கள் காந்தகார் நகரத்திலிருந்து, ஒவ்வொரு நகரமாகக் கைப்பற்றி முன்னேறி வந்தனர்.  “மக்களே! கவலைப்படாதீர்கள்.  உங்கள் நகரங்களை பாதுகாப்பான நகரங்களாக மாற்றுவதே எங்கள் நோக்கம்.  ஊழலை ஒழிப்போம்.  சமூகத் தலைவர்கள் தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்த வேண்டும்.  இஸ்லாமிய முறைப்படி நல்லாட்சி கொடுப்போம்” என்று அறைகூவல் விடுத்த வண்ணம் முன்னேறி வந்தனர்.  மக்களின் ஆதரவு அவர்களுக்குப் படிப்படியாக உயர்ந்தது.

அவர்கள் 1996இல் காபூல் நகரைக் கைப்பற்றினர்.  ஆப்கானிஸ்தான் இனி ‘Islamic Emirate of Afghanistan’ என அழைக்கப்படும் என்றும், அது தாங்கள் புரிந்துக்கொண்ட அளவில், இஸ்லாமிய மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் உள்ள சட்டங்களுக்கு உட்பட்டு ஆட்சி புரியும் என்றும் அறிவித்தார்கள்.  அதன் பிரகாரம், ‘யாரும் சினிமா பார்க்கக்கூடாது, இசை கேட்கக் கூடாது, பெண்கள் கல்வி கற்க பள்ளிகளுக்குப் போகக்கூடாது, மருத்துவர்கள் தவிர மற்றப் பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது.  பெண்கள் முழு உடலையும் மறைக்கும் ஆடையைத் தான் அணிய வேண்டும்.  ஆண்களின் துணையின்றி பெண்கள் பயணிக்கக் கூடாது.  ஆண்கள் ஒருவிதமான தாடியை வளர்க்கவேண்டும்.  ’ போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்தார்கள்.

மீறியவர்களுக்கு கசையடி கொடுப்பது, கை கால்களை வெட்டுவது, பொதுவில் மரண தண்டனை விதிப்பது என வழக்கப்படுத்தினார்கள்.  இஸ்லாமிய நம்பிக்கையைத் தவிர, மற்ற நம்பிக்கைகளுக்கு இடம் இல்லை என்பதைக் காண்பிக்க, உலகமே வியந்து பார்த்த பாமியன் புத்த சிலையைத் தகர்த்தெறிந்தனர்.

ஆப்கானிஸ்தான் அரசை தலிபான்கள் நிறுவினாலும், முஜகையிதீன் தளபதிகளில் சிலர், வட ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டியிருந்தனர்.  இந்த நிலையில் சௌதி அரேபியாவில் பிறந்து, முஜகையிதீன் போராளியாக இருந்த, ஒசாமா பின் லாடன், அல்-காய்தா என்ற அமைப்பை உருவாக்கினார்.
Generic scheme of the War of Afghanistan (1992–2001) in four maps, showing the major armed militias fighting for control of the country throughout the years until the October 2001 U.S.-led intervention in favour of the Northern Alliance.
Generic scheme of the War of Afghanistan (1992–2001) in four maps, showing the major armed militias fighting for control of the country throughout the years unt Source: Nederlandse Leeuw, Nicolas Eynaud

இரட்டைக் கோபுரமும் ஒசாமா பின்லாடனும்

அச் சமயத்தில் தான், 2001 செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில், உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டது.  அமெரிக்க இராணுவத் தளத்தின் மையமான பென்டகனும் தாக்கப்பட்டது.  ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
At 8:46 a.m on September the 11th 2001, American Airlines Flight 11 crashed into New York's World Trade Centre's North Tower.
At 8:46 a.m on September the 11th 2001, American Airlines Flight 11 crashed into New York's World Trade Centre's North Tower. (Getty) Source: Getty Images
அல்-காய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடனை, அந்த இடிப்புக்குக் காரணம் காட்டி, அமெரிக்கா அவரைத் தேடியது.  தலிபான்களின் உதவியுடன் ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லாடன் ஒளிந்திருப்பதாக, அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் குற்றம் சாட்டினார்.  ஒசாமா பின்லாடன் தான் இடிப்புக்குக் காரணம் என்பதற்கு என்ன அத்தாட்சி எனத் தலிபான்கள் பதிலுக்குக் கேட்டார்கள்.  அவரை அமெரிக்கா வசம் ஒப்படைக்க தலிபான்கள் மறுத்தார்கள்.
அமெரிக்காவிற்கு கோபம் வந்தது.

அமெரிக்கப் படையின் ஆக்கிரமிப்பும் இடைக்கால அரசும்

செப்டம்பர் 11ஆம் தேதி இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டது.  செப்டம்பர் 18ஆம் தேதியே அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் தன் படையை இறக்கியது.  “இரட்டைக் கோபுர இடிப்புக்கு தலிபான்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.  அதற்கு ஒரு விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும்.  ” என அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அறைகூவல் விடுத்தார்.
US President George W Bush
US President George W Bush Source: AAP
அதன்படி, ஒரு சில மாதங்களில், அதிகாரத்தில் இருந்த தலிபான்களை அமெரிக்கா விரட்டியடித்து விட்டு, இடைக்கால அரசை நிறுவியது.  மூன்று வருடத்தில், ஆப்கானிஸ்தான், தனக்கென ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியது.  Hamid Karzai, 2004லிலும், 2009லிலும் ஆப்கானிஸ்தானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  2014 மற்றும் 2019ல் Ashraf Ghani அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் அமைதியும் நிலைத்தன்மையும் உருவாக, அந்த அரசுகளுக்கு உதவிட NATO நாடுகள் முன்னெடுத்த ஐக்கிய நாடுகளின் சபையின் International Security Assitance Force (ISAF) உதவியது.  ஆஸ்திரேலியாவும் தன் பங்குக்கு படைவீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது.

இருபது வருட சண்டையும் தலிபான்களின் முன்னேற்றமும்

தலிபான்கள் பாகிஸ்தான் போன்ற பக்கத்து நாடுகளுக்கு ஓடிப் போயினர்.  ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை அமைக்க அமெரிக்கா உதவிய போதும்,  அல்-காய்தாவை தவிடு பொடியாக்க, தலிபான்களுக்கும் நிதி உதவியளித்தது அமெரிக்கா.
FILE - In this 1998 file photo made available on March 19, 2004, Osama bin Laden is seen at a news conference in Khost, Afghanistan.
FILE - In this 1998 file photo made available on March 19, 2004, Osama bin Laden is seen at a news conference in Khost, Afghanistan. (AP Photo/Mazhar Ali Khan) Source: AP
அந்த நேரத்தில், ஆப்கானிஸ்தானில் மேலை நாட்டு முறையிலான ஜனநாயக அரசு, நல்லாட்சி நடத்த உதவினோம் என்று கூறிய அமெரிக்கா, ஈராக்குடனான தன் போரைத் துவங்கியது.

ஈராக்கில் தீவிரமாக போர் நடந்துகொண்டிருந்த போது, ஆப்கானிஸ்தானில் மக்களின் எண்ண ஓட்டம் வேறுவிதமாக இருந்தது.  வெளிநாட்டவர்கள், ஊழல் நிறைந்த தலைவர்களைக் கொண்டு தங்கள் வளங்களைத் திருடுகிறார்கள் என்று அவர்கள் நினைக்கத் துவங்கினர்.

கரைச்சல் துவங்கியது.

அமெரிக்காவின் கவனம் ஈராக் பக்கம் இருந்த சூழலிலும், மக்கள் எண்ணம் மாறிக்கொண்டிருந்தச் சூழலிலும், அங்கங்கே இருந்த தலிபான்கள் ஒன்றிணையத் துவங்கினர்.  வெளிநாட்டு சக்திகளை விரட்டியடித்து மறுபடியும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்று மக்களிடம் பிரச்சாரம் செய்தனர்.
அந்த உத்தி வேலை செய்தது.
கிராமத்தினரிடையே அவர்களுக்கு ஆதரவு பெருகியது.  மறைந்திருந்து தாக்குதலில் வல்லுனர்களாகிய தலிபான்கள் விடவில்லை.  தங்கள் குறிக்கோளிலிலுருந்து சிறிதும் பிறழாமல் சண்டையிட்டுக்கொண்டே இருந்தனர்.  இந்த சண்டைகளில், ஆப்கானிஸ்தானின் பொதுமக்கள், கிட்டத்தட்ட 40,000ம் பேரும், ஆப்கானிஸ்தானின் படைவீரர்கள் மற்றும் காவலர்கள் கிட்டத்தட்ட 64,000ம் பேரும், சர்வதேச படைவீரர்கள் 3,500 பேரும் இறந்ததாகக் கூறப்படுகிறது.

ஈராக் போர் முடிவடைந்ததும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 2010 வாக்கில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் அமெரிக்க வீரர்களை ஆப்கானிஸ்தானில் இறக்கி விட்டார்.  இருந்தாலும், தலிபான்கள் விடுவதாக இல்லை.
A US Marine soldier sits alert in a tank before going to combat, at camp Dwyer in the south of Helmand Province, southwest of Kabul, Afghanistan. (Getty)
A US Marine soldier sits alert in a tank before going to combat, at camp Dwyer in the south of Helmand Province, southwest of Kabul, Afghanistan. (Getty) Source: Getty Images
‘வெளிநாட்டவர் வெளியேற வேண்டும்.  உள்நாட்டில் அமைந்துள்ள ஜனநாயகமற்ற அரசை நீக்க வேண்டும்.  இஸ்லாமிய அரசை நிறுவ வேண்டும்’ என்ற பிரச்சாரத்தை துரிதப்படுத்தினர்.  சில வருடங்களுக்குப் பிறகு அமெரிக்கப் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறத் துவங்கிய போது, தலிபான்கள் தங்கள் படையை பெருக்கிக்கொண்டே இருந்தனர்.

இன்றைக்கு 2021ல், 85,000 முழு நேரப் படைவீரர்களைக் கொண்டதாக தலிபான்கள் அமைப்பு உருவாகி நிற்கிறது.  ஆப்கானிஸ்தான் முழுக்கப் பயிற்சிப் பாசறைகள் உள்ளன.  அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி அதிகமாகிக் கொண்டே இருந்தன.  முதலில், ஆப்கானிஸ்தானில் உள்ள சாலைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.  எங்கு சென்றாலும் அவர்களின் இருப்பை உதாசீனப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்து வந்தனர்.
In this undated photo, the new leader of Taliban fighters, Mullah Haibatullah Akhundzada poses for a portrait.
In this undated photo, the new leader of Taliban fighters, Mullah Haibatullah Akhundzada poses for a portrait. Source: AP
Haibatullah Akhumdzada வின் தலைமையில் தலிபான்களின் அமைப்பு ஒரு வரையறைக்கு உட்பட்ட அமைப்பாக உருவானது.  நிதி, நலவாழ்வு, கல்வி போன்ற பத்து பனிரெண்டு கழகங்களை உருவாக்கி, முறைப்படி அவைகளுக்கு தலைவர்களை அமைத்து, அவர்களின் கீழ் பகுதி பணியாளர்கள் பொறுப்பாக இயங்க வழிவகை செய்யப்பட்டது.  கிட்டத்தட்ட இணையான அரசை உருவாக்கி நடத்தி வந்தது.  ஷரியா நீதி மன்றங்களைக் கூட நிறுவினார்கள்.  எங்கெல்லாம் அரசின் நீதிமன்றங்களில் நீதி வழுவியதோ, அங்கெல்லாம் ஷரியா முறைப்படி தலிபான்கள் நீதி வழங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இப்படி ஓர் இணையான அரசை நிறுவி நடத்தி வருவதால், தலிபான்களுக்கு செல்வச் செழிப்பும் பெருகி வந்தது.  ஐக்கிய நாடுகளின் குழு ஒன்றின் அறிக்கைப் படி ஒரு வருடத்திற்கு 1.  5 பில்லியன் டாலர் (கிட்டத்தட்ட 10,000 கோடி இந்திய மதிப்பிலான ரூபாய்களைச்) சம்பாதித்தனர்.

சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்ட உலோகங்களை வணிகம் செய்வதின் மூலமாகவும், போதைப்பொருட்கள் வியாபாரம் மூலமாகவும், வரி வசூலிப்பின் மூலமாகவும், வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதன் மூலமாகவும் சம்பாதித்தனர் என்று சொல்லப்படுகிறது.

பல வருடங்களாக, சர்வதேச சமூகம், தலிபான்களையும், ஆப்கானிஸ்தான் அரசையும் பேச்சுவார்த்தையில் அமர்ந்து பேச எவ்வளவோ முயற்சித்தது.  ஒரு தடவை மாலத் தீவுகளில் கூட  அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  2018ல் ஈத் கொண்டாட்டங்களுக்காக சண்டை நிறுத்தப்பட்டிருந்த நேரத்தில், தலிபான் படை வீரர்களும், ஆப்கானிஸ்தான் அரசின் படைவீரர்களும் ஒன்றாய் கலந்து, ஒன்றாய் இறைவனிடம் செபிக்கும் காட்சிகளைப் பார்க்க முடிந்தது.

என்ன இருந்தாலும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை.  Ashraf Ghani தலைமையிலான அரசு தலிபான்களை முற்றும் முதலுமான எதிரியாகவேப் பார்த்தது.  தலிபான்களை அழித்து ஒழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டியது.

ஆனால் தலிபான்கள் வெளிநாட்டினரால் அமைக்கப்பட்ட அரசை அகற்றியே தீரவேண்டும் என்று போராடினர்.  அரசு ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் தாக்கப்பட்டனர்.  இந்த தாக்குதல்கள் மூலம் ‘இந்த அரசு உங்களை பாதுகாக்காது’ என்கிற செய்தியைத் திரும்பத் திரும்ப ஆப்கானிஸ்தான் மக்களுக்குத் தெரிவித்து வந்தனர்.  சில இடங்களில் தலிபான்கள், பெண்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவும் செய்தனர்.  அதோடு கூட, அமெரிக்காவின் ஆதிக்கம் காபூல் தலைநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் தான் இருந்தது.  மலைப்பிரதேசங்களிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் தலிபான்களுக்கு பெரும் ஆதரவு இருந்து வந்தது.  இருபது வருட சண்டை ஓய்ந்தபாடில்லை.
அப்பொழுது தான் திடீர் திருப்பம் நடந்தது.

அமெரிக்கப்படை வெளியேற்றமும் Ashraf Ghani ஒட்டமும்

அமெரிக்கப்படையினர் 2400 பேர் இறந்த பிறகு, கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர்கள் செலவழித்தப் பிறகு, அமெரிக்க அதிபராக இருந்து டொனால்ட் டிரம்ப், தலிபான்களோடு கத்தார் நாட்டில் உள்ள தோகா நகரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அந்தப் பேச்சுவார்த்தையில், தீவிரவாதம் தழைத்தோங்க விடக்கூடாது  என்ற உறுதிமொழியை வாங்கிக்கொண்டு, அவர்களோடு ஓர் ஒப்பந்தம் போட்டு 2021ம் வருட மத்தியில், மொத்த அமெரிக்கப் படையையும் விலக்கிக்கொள்வதாக அறிவித்தார்.
Afghan President Ashraf Ghani is seated before speaking during a media availability after his meeting with President Joe Biden in Washington, Friday, June 25, 2021. (AP Photo/Alex Brandon)
Afghan President Ashraf Ghani is seated before speaking during a media availability in Washington, Friday, June 25, 2021 Source: AP
இந்த அறிவிப்பை ஒத்துக்கொண்டு, இன்றைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனும்,  கிட்டத்தட்ட 10,000 பேர் உள்ள அமெரிக்க மற்றும் ஐக்கிய நாட்டு சபைகளின் படைவீரர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற உத்தவிட்டார்.  படைவீரர்கள் தவிர அலுவலகப் பணியாளர்களும் வெளியேறத் துவங்கினர்.

“நமது ஒரே நோக்கம் அமெரிக்கர்களைத் தாக்கிய, எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்கவேண்டும் என்பதாகவே இருந்தது.  அதற்குக் காரணமான ஒசாமா பின்லேடனை பிடித்துவிட்டோம்.  ” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் விவரிப்பில் கூறினார்.

அவர் மேலும் கூறியபோது, “ஆப்கானிஸ்தானில், இந்த சண்டைக்காகவும், மறுசீரமைப்பு திட்டங்களுக்காகவும்,  ஒரு டிரில்லியன் டாலர்களை (அதாவது 65 லட்சம் கோடி இந்திய மதிப்பிலான ரூபாய்களை) செலவு செய்திருக்கிறோம்.  ஆப்கானிஸ்தான் படைவீரர்களின் சம்பளத்தைக் கொடுத்திருக்கிறோம்.  தலிபான்களிடம் இல்லாத வான்வழி தாக்கும் நிலையத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம்.  அவர்கள் சண்டையிடுவதற்கு தேவையான எல்லாத் தளவாடங்களையும் கொடுத்திருக்கிறோம்.  ஆனால், தங்கள் நாட்டிற்காக போராடும் குணத்தை மட்டும் நம்மால் கொடுக்க முடியவில்லை.  ஆப்கானிஸ்தான் நாட்டு தலைவர்கள் நாட்டை விட்டு ஓடிப்போனார்கள்.  ” என்று வருத்தப்பட்டார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் Ashraf Ghani யுனைட்டெட் அராப் எமிரட்ஸ்க்கு தப்பி ஒடினார்.  “ எனது செருப்புகளைக்கூட என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.  அப்படி அவசரப்படுத்தி என்னை அப்புறப்படுத்தினார்கள்.  தற்போது தலிபான்கள், முந்தைய அரசு அலுவலர்களோடு பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருப்பது நல்ல செய்தி.  நான் சீக்கிரம் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்புவேன்” என்று ஆப்கானிஸ்தான் அதிபர் Ashraf Ghani முகநூலில் ஒரு காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தாலும், அவசரப்பட்டு ஜோ பைடன் முடிவெடுத்துவிட்டதாகவும், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் படைக்கு கொடுத்த போர்த்தளவாடங்களைக் கொண்டு தலிபான்கள் என்றைக்கும் இல்லாத அளவுக்கு பலமுள்ளவர்களாக ஆகிவிட்டார்கள் எனவும் Republican national chair Ronna McDaniel தெரிவித்தார்.  அமெரிக்கா வழங்கிய M4, M18, M24 துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு, அமெரிக்கப்படையினரின் சீருடையில் US Humvees  வாகனங்களில் தலிபான்கள் சுற்றி வரும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றன.

ஆனால், UK வெளியுறவுத் துறை செயலாளர் Dominic Raab, ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவுக்கு, தங்கள் நாட்டின் ஆதரவு இருக்கும் என்று கூறினார்.

இந்த அரிய வாய்ப்பை தலிபான்கள் நழுவ விடவில்லை. திடீரென காபூலுக்குள் புகுந்தனர்.

காபூல் கைப்பற்றலும் கலவர பூமியும்

காபூலைக் கைப்பற்றினர்.  புதிய அரசை உருவாக்குவதாக அறிவித்தனர்.  செய்தியாளர்களைச் சந்தித்தனர்.  இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் தலைவர் Haibatullah Akhumdazada, ஜனாதிபதிக்கு இணையான பொறுப்பில் இருந்து செயல்படுவார் என்றும், தலிபான் கவுன்சில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தும் என்றும் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் Wahedullah Hasimi கூறியதாக Emma Graham-Harrison தி கார்டியன் பத்திரிக்கையில் எழுதுகிறார்.
Taliban spokesperson Zabihullah Mujahid (L) attends the first press conference in Kabul on August 17, 2021, following their stunning takeover of Afghanistan. (Photo by Hoshang HASHIMI / AFP) (Photo by HOSHANG HASHIMI/AFP via Getty Images)
Taliban spokesperson Zabihullah Mujahid (L) attends the first press conference in Kabul following their stunning takeover of Afghanistan Source: AFP
அது 1996லிருந்து 2001வரை அவர்கள் நடத்திய ஆட்சி போலவே இருக்கும்.  அப்பொழுது எப்படி இயக்கத் தலைவர் Mullah Omar பின்புலத்திலிருந்து நாட்டின் அன்றாட நடவடிக்கைகளைக் கவனித்தாரோ அப்படித்தான் இந்த தடவையும் நடக்கும்.  இந்த வாரக்கடைசியில் தலிபான் கவுன்சில் சந்தித்து  முடிவெடுத்தாலும், ஜனநாயகப் பூர்வமான ஆட்சி முறை வரும் என்று எதிர்பார்க்க முடியாது.  ஏனென்றால் ஷரியா சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் தங்கள் ஆட்சி முறை இருக்கும் என்று அவர்கள் தெளிவாக அறிவித்துவிட்டார்கள், என்றும் அவர் மேலும் எழுதுகிறார்.

ஆட்சியைப் பிடித்த பிறகு என்னென்ன நடக்கிறது?

  • காபூல் விமான நிலையத்தில் கலவரம் மட்டுமே மிச்சமாக இருக்கிறது.  உயிருக்குப் பயந்து அங்கும் இங்கும் ஓடும் மக்களை தலிபான்கள் அடிப்பதும் சுடுவதும் தொடர்கிறது என எழுதி அதை உறுதிப்படுத்துவது போல ஒரு வீடியோவையும் Pannell வெளியிட்டிருப்பதை தி கார்டியன் பிரசரித்திருக்கிறது.
  • ஓர் அழகு நிலையத்தில் இருந்த பெண்களின் விளம்பரப்படங்களை கருப்பு நிறத்தில் அழித்திருக்கிறார்கள்.
  • கிட்டத்தட்ட 100,000 நபர்கள், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விருப்பம் தெரிவித்து காத்திருக்கின்றனர் என்றும், அமெரிக்கர்களோடு மொழிபெயர்ப்பாளர்களாக வேலை செய்த ஐந்து பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் உள்ள சர்வ தேச அகதிகள் ஆதரவுத் திட்டத்தின் தலைவர் Rebecca Heller கூறுகிறார்.
  • அமெரிக்கர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானியர்கள் விமானநிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கும் சோதனைச் சாவடிகளில் உள்ள சிக்கல்கள் பற்றியும், ஊரடங்கு உத்தரவு பற்றியும் தலிபான் தலைவர்களுடன் பேசி வருவதாக அமெரிக்க மூத்த ராணுவ அதிகாரி Peter Vasely கூறுகிறார்.
  • தலிபான்கள் திருந்திவிட்டார்கள்.  நல்லாட்சி தருவார்கள் என ஒரு சாராரும், அவர்கள் மாறமாட்டார்கள்.  மக்களை கொடுமைப்படுத்தப்போகிறார்கள் என மறு சாராரும் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் உள்ள வரலாறையும், உறவையும் தெரிந்துக்கொள்வது நல்லது.
PM Kevin Rudd and wife Theresa Rein (pic) have visited Australia's troops in Afghanistan.
PM Kevin Rudd and wife Theresa Rein (pic) have visited Australia's troops in Afghanistan. Source: AAP

ஆப்கானிஸ்தானும் ஆஸ்திரேலியாவும்

கிட்டத்தட்ட 65,710 ஆஸ்திரேலியர்கள் ஆப்கானிஸ்தானில் பிறந்தவர்கள்.  அதில் 28 சதவீதத்தினர் NSWல் வாழ்கின்றனர்.

இரண்டு நாடுகளுக்கும் நீண்ட கால நட்பு இருந்து வந்திருக்கிறது.  பத்தொன்பதாம் நூற்றாண்டில், 1860களில், ஆப்கான் ஒட்டக ஓட்டுனர்கள் நிறைய பேர் ஆஸ்திரேலியா வந்தனர்.  ஓர் இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல அவர்கள் உதவினார்கள்.  ஆஸ்திரேலியாவின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார்கள்.

சோவியத் குடியரசு ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த போது, நிறைய ஆப்கானிஸ்தானியர்கள், தங்கள் தாயகத்தை விட்டு ஆஸ்திரேலியாவிற்குள் குடியேறினார்கள்.  ஆப்கானிஸ்தானுக்கான முதல் ஆஸ்திரேலியத் தூதர் 2006ல் நியமிக்கப்பட்டார்.

அதிபர் அஷ்ரப் கானி 2017ம் வருடம் ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு வருகை புரிந்தார்.  அப்பொழுது 2017-20 க்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்பட்டது.  ஆப்கானிஸ்தான் சுரங்க மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தோடு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.  வெளியுறவு அமைச்சரும் மகளிர் மேம்பாட்டிற்கான அமைச்சருமான செனட்டர் Maris Payne 2021 மே மாதம் ஆப்கானிஸ்தான் சென்றார்.

2001ம் வருடம் முதல், ஆஸ்திரேலியா 150 கோடி ஆஸ்திரேலிய டாலர்களுக்கான வளர்ச்சி நிதியை ஆப்கானிஸ்தானுக்கு கொடுத்திருக்கிறது.  பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டில் கவனம் செலுத்தியது.  இப்படியாக உறவும் நட்பும் இருந்து வந்திருக்கிறது.

ஆகவே, ஆஸ்திரேலியாவில் வாழும் ஆப்கானிஸ்தானியர்களிடமிருந்து சில கோரிக்கைகள் வந்திருக்கின்றன.
“ஆப்கானிஸ்தானின் பொதுமக்களையும், அகதிகளையும், சமூக செயற்பாட்டாளர்களையும் புதிய தலிபான் அரசிடமிருந்து காப்பாற்றுங்கள்.  ஜக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலில், மனித உரிமைகள் கண்டறியும் தீர்மானத்திற்கு ஆதரியுங்கள்.  ” என Human Rights Watch ஆஸ்திரேலிய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

“புதன்கிழமை 26 நபர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிக்கொண்டு வந்திருக்கிறோம்.  வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்” என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறினார்.  மனிதநேயத் திட்டத்தின் படி, கிட்டத்தட்ட 3000 ஆப்கானிஸ்தான் குடிமக்களை மீள்குடியேற்றம் செய்யும் வாய்ப்பு இருக்கலாம் எனவும் பிரதமர் சமிக்ஞை செய்தார்.  ஆனால் ஆஸ்திரேலிய வாழ் ஆப்கானிஸ்தானியர்கள் கிட்டத்தட்ட 20,000 வரை அந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கேட்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் சென்று போரிட்ட ஆஸ்திரேலிய வீரர்களிடம், “ உங்கள் சேவையை நினைத்து பெருமைப்படுங்கள்.  இப்பொழுது நடக்கிற நிகழ்வுகள் உங்களது தனிப்பட்ட முயற்சியையும், பங்களிப்பையும் குறைத்து மதிப்பிட வைத்துவிட வேண்டாம்.  உங்கள் நாடு கேட்டபோது நீங்கள் செய்தீர்கள்.  கடினமான சூழ்நிலையிலும் விடாமுயற்சியுடன் பணியாற்றினீர்கள்.  உறுதியாக இருங்கள்.  ” என ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரல் டேவிட் ஹர்லி தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Mohammad Nabi
Afghani allrounder Mohammad Nabi will join the BBL's Melbourne Renegades. (AAP) Source: AAP


 

அமெரிக்கா விலகிய நிலையில், தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், சில நாடுகள் தலிபான்களை முறையாக ஆதரிக்கின்றனர்.  ஏன் அந்த நாடுகள் ஆதரிக்கின்றன?

ஈரான், சீனா மற்றும் ரஷ்யாவின் நிலைப்பாடு

“ஆப்கானிஸ்தானில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஏற்பட நாங்கள் உதவுவோம்”
என்று ஈரானிய அதிபர் Ebrahim Raisi, ரஷ்ய மற்றும் சீன சகாக்களிடம் அறிவித்தார்.

மூன்று வாரங்களுக்கு முன்பு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தலிபான் தலைவர் முல்லா அப்துல் கானி பரதரை விருந்தாளியாக வரவழைத்திருந்தார்.  சீனா தலிபான்களை பகைத்துக்கொள்ளாது.  மாறாக ஆதரவு கொடுக்கும்.  அதற்கான காரணங்கள் என்ன?

  • சீன நாட்டில், முஸ்லீம்கள் அதிகம் வாழக்கூடிய ஜின் ஜியாங் மாநிலத்தில், முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டால் அதை தலிபான்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
  • இந்தச் சூழ்நிலையில், அந்தப் பிரதேசத்தில் உயிகூர் போராளிகளிடமிருந்து வருகிற அச்சுறுத்தலை தடுத்த நிறுத்த வேண்டும் என்பதில் சீனா கவனம் செலுத்தும்.  அதற்கு தலிபான்களின் ஆதரவு தேவை.
  • அடுத்து, சீனா முன்னிறுத்தும் ‘Belt and Road Initiative’ மூலமாக எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள சுரங்க வளங்கள் மேல் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது.
  • அதை விட, அமெரிக்கா தன் படையை திரும்ப பெற்றதை, ஆசியாவில் தன் ஆதிக்கத்தை அதிகரிக்க சீனா பயன்படுத்திக்கொள்ளும்.  குறிப்பாக தைவான் போன்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்க, இதை  உதாரணமாக்கும்
  • பாகிஸ்தானில் தாங்கள் செய்திருக்கிற அதீத முதலீடுகளுக்கு குந்தகம் வரக்கூடாது.
Chinese and Afghani leaders at G20 summit
Chinese and Afghani leaders at G20 summit Source: AAP


மேற்கண்ட காரணங்களுக்காக, தலிபான்களோடு நட்புறவு கொண்டாடா விட்டாலும், எதிர்த்துக்கொள்ளக்கூடாது என்று சீனா எச்சரிக்கையாய் இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் எண்ணுகிறார்கள்.
சரி. ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். அவர்களுக்கு முன்னே என்ன சவால்கள் இருக்கின்றன?

எதிர்கால சவால்கள்

பல சவால்கள் இருக்கின்றன.  ஆனால் கீழ்க்கண்டவை முக்கியமானவைகள்.

  • பொருளாதாரம்: வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி 75% நிறுத்தப்படுமோ என்ற அச்சத்திலும், வெளிநாட்டு நாணய இருப்பை அணுக முடியாத சூழ்நிலையிலும், பெரிய நிதி நெருக்கடியை ஆப்கானிஸ்தானின் புதிய தலிபான் ஆட்சியாளர்கள் வெகு சீக்கிரமே சந்திக்கக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகிறார்கள்.
  • அரசியல்: தாங்கள் மிகவும் மாறிவிட்டோம்.  முன்பு ஆட்சி செய்தது போல் செய்ய மாட்டோம்.  மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.  முந்தைய அரசுக்கோ, அமெரிக்காவிற்கோ பணி செய்தார்கள் என்பதனால் யாரையும் துன்புறுத்த மாட்டோம்.  எல்லோருக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்படும்.  என்று அறிவிக்கும் தலிபான்களுக்கு  உலக நாடுகளின் அங்கீகாரம் அவசரத் தேவையாக இருக்கிறது.
  • சமூகம்: “எனக்குப் பயமாக இருக்கிறது.  என்ன நடக்கப்போகிறது, என்ன செய்வார்கள் என்று தெரியாது.  இருந்தாலும் அவர்களைக் கண்டால் சிரித்து வைக்கிறேன்.  உள்ளுக்குள் வருத்தமாகத்தான் இருக்கிறது” என்று கூறும் மக்களின் நலம் காக்கப்படுமா? என்று உலகமே உற்று நோக்கிக்கொண்டேயிருக்கிறது.
  • •கலாச்சாரம்: ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று சொல்லியிருக்கிற தலிபான்கள், எல்லா நிலையிலும் பெண்களின் பங்கெடுப்புக்கு எந்தவிதமான வாய்ப்புகளை அளிப்பார்கள் என்று காலம் தான் பதில் சொல்லும்.
இந்தச் சவால்களை எதிர்கொண்டு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நல்லாட்சி கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கையை அவர்கள் காப்பாற்றுவார்களா? எனத் தெரிந்துக்கொள்ள உலகமே காத்திருக்கிறது.
Afghans hold National flag during the Independence Day in Kabul, Afghanistan, Thursday, Aug. 19, 2020. (AP Photo/Rahmat Gul)
Afghans hold National flag during the Independence Day in Kabul, Afghanistan, Thursday, Aug. 19, 2020. (AP Photo/Rahmat Gul) Source: AP

 

  1. Shelton, Tracey.  (2021 August 17).  The Afghan Taliban have changed drastically since they were last in power 20 years ago, experts say.  ABC News.  Retrieved from https://www.  abc.  net.  au/news/2021-08-17/afghan-taliban-evolved-since-20-years-ago/100379358 as on 17.  08.  2021
  2. https://www.  theguardian.  com/world/live/2021/aug/19/afghanistan-live-news-taliban-kabul-us-troops-joe-biden-afghan-crisis-latest-updates?page=with:block-611d91d68f08e83ac7bdf053#block-611d91d68f08e83ac7bdf053 as on 19.  08.  2021
  3. https://en.  wikipedia.  org/wiki/Soviet%E2%80%93Afghan_War as on 19.  08.  2021
  4. https://www.  nbcnews.  com/news/world/gorbachev-leader-who-pulled-soviets-afghanistan-says-u-s-campaign-n1276954 as on 19.  08.  2021
  5. Nagourney, Eric.  (2021, Aug 19).  Who are the Taliban, and what do they want? .  New York Times.  Retrieved from https://www.  nytimes.  com/article/who-are-the-taliban.  html as on 19.  08.  2021
  6. https://inews.  co.  uk/news/world/taliban-meaning-what-mean-english-name-how-started-afghanistan-explained-1156589 as on 19.  08.  2021
  7. https://www.  brookings.  edu/blog/order-from-chaos/2021/08/18/how-will-china-seek-to-profit-from-the-talibans-takeover-in-afghanistan/ as on 19.  08.  2021
  8. https://www.  homeaffairs.  gov.  au/news-subsite/Pages/2021-Aug/afghanistan-statement.  aspx as on 20.  08.  2021
  9. https://www.  abc.  net.  au/news/2021-08-19/sydney-afghans-say-australia-has-moral-obligation-to-act/100388972 as on 20.  08.  2021

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 21 August 2021 5:22pm
By John B Parisuththam

Share this with family and friends