“மருத்துவர்களின் அலட்சியமே ஐஸ்வர்யா மரணிக்கக் காரணம்”

“மருத்துவர்களின் அலட்சியமே ஐஸ்வர்யா மரணிக்கக் காரணம்” பெர்த் மருத்துவமனையில் மரணித்த ஐஸ்வர்யா அஸ்வத் என்ற சிறுமியின் பெற்றோர்கள் அறிக்கை அவர்களது ஏழு வயது மகளுக்கு மருத்துவ உதவி கோரிய பெற்றோர் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

Aishwarya Aswath's parents respond to the report into their daughter's death.

The parents say their daughter's death was due to 'medical negligence'. Source: Aaron Fernandes/SBS News

பெர்த் மருத்துவமனையில் கடமையில் ஈடுபட்டிருந்தோர் “மனிதநேயம்” இல்லாமல் செயல்பட்டதாகவும், அவர்களது குழந்தையின் மரணம் குறித்து நடந்த விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான கருத்துகள் சொல்லப்பட்டிருப்பதாகவும் கூறி, ஐஸ்வர்யாவின் மரணம் குறித்த முழு, சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

பெர்த் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு உடல்நலம் குன்றியிருந்த ஐஸ்வர்யாவை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளார்கள்.  ஒரு மருத்துவரைக் காண்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கும் அதிகம் அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.  சிறுமிக்கு ஏற்பட்டிருந்த பக்டீரியா தொற்று அவரது இரத்தத்தில் நச்சுத் தன்மையை ஏற்படுத்தி அவரது மரணிக்கக் காரணமாக இருந்தது.

சிறுமியின் மரணம் குறித்து, பெர்த் குழந்தைகள் மருத்துவமனையை இயக்கும் WA குழந்தை மற்றும் இளம் பருவ சுகாதார சேவைகள் (CAHS) ஒரு விசாரணையை நடத்தியது.  10 பேர் கொண்ட குழு ஆறு வாரங்கள் நடத்திய விசாரணை முடிவுகள் நேற்று முன்தினம், வெளியாகின. 

அவர்களது மகளின் மரணத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்த அறிக்கை அனைத்து விடயங்களையும் கருத்தில் கொள்ளவில்லை என்று, பெற்றோர்களான அஸ்வத் சாவித்துபாரா மற்றும் பிரசிதா சசிதரன், நேற்று (வியாழக்கிழமை) கூறினார்கள்.

"மருத்துவர்களின் அலட்சியமே எமது மகளின் மரணத்திற்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன்.  நாங்கள் தேடும் பதில்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை,” என்று அஸ்வத் சாவித்துபாரா செய்தியாளர்களிடம் கூறினார்.

“உள் விசாரணையில் அவர்கள் சில பகுதிகளை மட்டுமே ஆராய்வார்கள், மீதமுள்ளவற்றைப் புறக்கணிப்பார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அதனால்தான் நாங்கள் ஒரு சுயாதீன விசாரணை நடத்துமாறு அழைக்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த உள் விசாரணையில் கூறப்பட்ட 11 பரிந்துரைகளை அமல்படுத்த மேற்கு ஆஸ்திரேலிய மாநில அரசு உறுதியளித்துள்ளது, ஆனால் ஐஸ்வர்யாவின் மரணம் குறித்த சுயாதீன விசாரணை குறித்து எதுவும் கூறவில்லை..
Aishwarya Aswath died at Perth Children's Hospital.
Aishwarya Aswath died at Perth Children's Hospital. Source: Supplied by Suresh Rajan.

'ஏதோ பிழை நடக்கிறது'

வீட்டில் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை அவதானித்த ஐஸ்வர்யாவின் பெற்றோர், அவர்களது மகள் ஐஸ்வர்யாவுடன் ஏப்ரல் 3ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஐந்தரை மணியளவில் பெர்த் குழந்தைகள் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றனர்.

அந்த நேரத்தில், அவசர சிகிச்சைப் பிரிவில் 41 நோயாளிகள் இருந்தனர். அத்துடன், 19 மருத்துவர்கள் மற்றும் 14 செவிலியர்கள் பணியில் இருந்தனர்.

ஒரு நிமிடம் கழித்து,  ஐஸ்வர்யாவை ஒரு செவிலியர் மதிப்பீடு செய்தார். இந்த பரிசோதனையில் அவரது இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் உடல் வெப்பநிலை பற்றிய சோதனைகள் நடைபெற்றதாக அவளுடைய பெற்றோர் கூறுகிறார்கள், ஐஸ்வர்யாவின் கைகள் மிகவும் குளிராக இருந்தமையால் அந்த செவிலியரால் அவளது ஆக்ஸிஜன் அளவை சோதிக்க முடியவில்லை என்றும், இதயத் துடிப்பு சற்று அதிகமாக இருப்பதாகவும், காய்ச்சல் இருப்பதால், அவரது உடல் அதை எதிர்த்துப் போராட முயற்சிப்பதாகவும் அந்த செவிலியர் விளக்கியுள்ளார்.  இரத்த அழுத்தம் சற்றுக் குறைவாக இருந்தாலும் அது சாதாரணமானது என்று ஐஸ்வர்யாவின் தகப்பன் கூறினார்.
நோயாளிகளுக்கு வழங்கப்படும் முன்னுரிமை தரவரிசையில், இரண்டாவது மிகக் குறைந்த முன்னுரிமை ஐஸ்வர்யாவிற்கு வழங்கப்பட்டது.  அப்படியான நோயாளிகளை 60 நிமிடங்களுக்குள் ஒரு மருத்துவர் ஆராய்ந்து பார்ப்பார்.

தங்களது மகளை ஒரு மருத்துவர் உடனடியாக மதிப்பிட வேண்டும் என்று பெற்றோர் உணர்ந்தனர்.
Her parents are still grieving.
Aishwarya Aswath died at Perth Children's Hospital after waiting almost two hours to see a doctor. Source: Aaron Fernandes/SBS News
“நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம், ஏனென்றால் அவளுடைய நிலை மிகவும் விரைவாக மோசமடைந்தது. அதனால்தான் நாங்கள் மருத்துவ சேவை செய்பவர்களது கவனத்தை ஈர்க்க முயற்சித்தோம். நாங்கள் நினைத்தது போல், அவசர சிகிச்சைப் பிரிவில் நடக்கின்ற விதத்தில் அவர்கள் பதிலளிக்கவில்லை”என்று அஸ்வத் சாவித்துபாரா கூறினார்.

ஐந்து தடவைகள் அவர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் நேரடியாகப் பேசியதாகவும், தங்கள் மகளின் நிலை மோசமடைவதால் ஒரு மருத்துவரை அவசரமாகப் பார்க்க தீவிரமாக முயற்சி எடுத்ததாகவும் அவர்கள் கூறினார்கள்.

“தனது முகத்தை கழுவ வேண்டும் என்று ஐஸ்வர்யா புகார் கூறினாள்... தனது பார்வை மங்கலாகிறது என்றாள்.  ஆனால் அவளது முகத்தைப் பார்த்தால், அவள் முகம் சுத்தமாக இருப்பதை என்னால் காண முடிந்தது, ஆனால் ஏதோ சரியாக இல்லை என்பது புரிந்தது” என்று அவர் மேலும் கூறினார்.
Aishwarya Aswath died at Perth Children's Hospital.
Aishwarya succumbed to a fatal infection on Easter Saturday, 2021. Source: Supplied: Suresh Rajan
ஊழியர்களின் பற்றாக்குறை காரணம் அல்ல என்று கூறிய பெற்றோர், ஐஸ்வர்யாவின் மரணத்திற்கு ஊழியரின் கவனக்குறைவே காரணம் என்று குற்றம் சாட்டினர்.

“ஊழியர்கள் சிலர் எங்களைப் புறக்கணித்ததாக நான் நினைக்கிறேன், ஏனென்றால் அவர்கள் எங்களுடன் பேச விரும்பவில்லை. நாங்கள் ஊழியர்களை அணுகிய போது, மருத்துவர்கள் வந்து பார்க்கும் வரை பொறுமையாக இருக்கும்படி அவர்கள் சொன்னார்கள். அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை” என்று பெற்றோர் கூறினார்கள்.

“நாங்கள் யாரிடமும் எந்த இரக்கத்தையும் பார்த்ததில்லை. ஊழியர்கள் சற்று முரட்டுத்தனமாக இருப்பதை நாங்கள் கண்டோம், அவர்களிடம் இருந்த மனிதநேயத்தின் அளவு மிகக் குறைவாக இருப்பதை நாங்கள் கண்டோம்,” என்று ஐஸ்வர்யாவின் தாய் பிரசிதா சசிதரன் கூறினார்.

மருத்துவரைப் பார்த்த சில நிமிடங்களில் ஐஸ்வர்யா இறந்து விட்டார்.  சற்று விரைவாக மருத்துவர் தலையிட்டிருந்தால் ஐஸ்வர்யா இன்னும் உயிருடன் இருப்பார் என்று அவரது பெற்றோர் உறுதியாக நம்புகிறார்கள்.

'வரையறுக்கப்பட்ட மதிப்பீடு'

விசாரணையின் முழு அறிக்கையையும் மேற்கு ஆஸ்திரேலிய அரசு பகிரங்கமாக வெளியிடவில்லை என்றாலும், அதன் பரிந்துரைகளை சுகாதார அமைச்சர் Roger Cook நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.

ஐஸ்வர்யாவை முழுமையாக சோதிக்கவில்லை என்று மறுஆய்வுக் குழு கண்டறிந்ததை அந்த பரிந்துரைகள் வெளிப்படுத்துகின்றன.  அவரது நிலையின் தீவிரத்தை மருத்துவமனை அங்கீகரிக்கத் தவறிவிட்டது என்று கூறப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெர்த் குழந்தைகள் மருத்துவமனை, பல்கலாச்சாரப் பின்னணி மக்களை மையமாகக் கொண்ட விழிப்புணர்வு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
New lockdown restrictions will be imposed on the Perth and Peel regions for three days.
New lockdown restrictions will be imposed on the Perth and Peel regions for three days. Source: AAP
இந்தப் பரிந்துரை குறித்து, SBS செய்திப் பிரிவினர் மேற்கு ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் Roger Cook அவர்களிடம் கருத்துக் கேட்டது.  ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து கவலை வெளியிட்ட அவர், அதற்குக் கலாச்சாரம் மற்றும் மொழி தடையாக இருந்ததாகத் தான் நம்பவில்லை என்றும் இந்த அறிக்கை முடிவானது அல்ல என்றும் கூறினார்.
மேற்கு ஆஸ்திரேலிய அரசின் சார்பாக, குடும்பத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய அவர், தனது அமைச்சின் கட்டமைப்பிலுள்ள “தோல்வியை” ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.
ஐஸ்வர்யாவின் குடும்பத்தினருக்கு மேற்கு ஆஸ்திரேலிய Premier Mark McGowan தனது இரங்கலைத் தெரிவித்தார்.  இருந்தாலும், இதற்காக சுகாதார அமைச்சரைப் பதவி விலகுமாறு தான் கோர மாட்டேன் என்று கூறியுள்ளார்.

CAHS (Child and Adolescent Health Services) - குழந்தை மற்றும் இளம் பருவ சுகாதார சேவைகள் குழுவின் தலைவர் Debbie Karasinski பதவி விலகியுள்ளார்.  ஆனால், அதன் தலைமை நிர்வாகி Aresh Anwar இந்த விவகாரம் தொடர்பாகத் தான் பதவி விலகப் போவதாக அரசுக்கு அறிவித்தாலும், அதனை அரசு ஏற்கவில்லை என்று கூறியுள்ளார்.
Perth Children's Hospital
Source: Samuel Wiki / Public Domain
ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கு நிதி இழப்பீடு வழங்குமா என்பது குறித்து மேற்கு ஆஸ்திரேலிய Premier Mark McGowan கருத்து தெரிவிக்க வில்லை.  அதற்கு இது சரியான நேரம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில உண்மைகளை மட்டுமே அரசு வெளியிட்டுள்ளது என்று மேற்கு ஆஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் (WA) தலைவர் ட்வீட் (tweet) செய்துள்ளார்.

“ஐஸ்வர்யாவின் பராமரிப்பு” என்ற பெயரில் ஒரு புதிய முறையை நடைமுறைப்படுத்துமாறு ஐஸ்வர்யாவின் பெற்றோர் சுகாதார அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

பெற்றோரின் கவலைகளைக் கேட்டு சிகிச்சைக்கு முன்னுரிமை வழங்குவதற்கு ஆவன செய்வதற்கு அவசரகால துறையினரை ஊக்குவிக்கும் வழிமுறை என்று அவர்கள் கேட்டுள்ளார்கள்.

 

 


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


 


Share
Published 14 May 2021 2:43pm
Updated 12 August 2022 3:04pm
By Aaron Fernandes, Kulasegaram Sanchayan


Share this with family and friends