ஆஸ்திரேலிய துணையை திருமணம் செய்துகொள்வதற்காக விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு வெளிநாடுகளில் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்குகளாக அதிகரித்துள்ளதாகவும், கொரோனா காலப்பகுதிக்கு முன்னர் மாதம் ஒன்றுக்கு 180 பேருக்கு வழங்கப்பட்ட இந்தப்பிரிவு (Subclass 300 Prospective Marriage visa) விசா, கடந்த வருடம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் மாதமொன்றுக்கு சராசரியாக 15 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று உள்துறை அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பிரச்சினைகளுக்கு பின்னரான பயணக்கட்டுப்பாடுகளில் ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகுந்த இறுக்கத்தை கடைப்பிடிப்பதால், திருமணம் செய்துகொள்ளவென ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு விசா வழங்குவதில் நீண்ட இழுத்தடிப்புக்களை செய்துவருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக இந்த விசா மீதான பரிசீலினைக்காலத்தை குறைக்கும்படி பலர் அரசிடம் வேண்டுகோள்களையும் முன்வைத்திருக்கிறார்கள்.
இந்த விசாவுக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் சட்டபூர்வமாக இன்னமும் திருமணம் செய்துகொள்ளாதவர்கள் என்ற காரணத்தினால், கணவன் - மனைவி என்ற அடிப்படையிலும் விசா விண்ணப்பங்களை துரிதப்படுத்துவதற்கு வேண்டுகோள்களை முன்வைக்கமுடியாதுள்ளதாக இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் பேசவல்லவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மறுபுறுத்தில், சட்டபூர்வமாக திருமணம் செய்தவர்களின் கதி இதைவிட மோசம் என்றும் சுமார் ஐம்பதினாயிரம் பேர் ஆஸ்திரேலியாவிலுள்ள தங்களது துணைகளுடன் சேர்ந்துகொள்வதற்கு விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கிறார்கள் என்றும் இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சு தெரிவிக்கையில், ஆஸ்திரேலிய துணைகளை திருமணம் செய்துகொள்வதற்கு விண்ணப்பிக்கப்படும் விசாக்களில் 75 சதவீதமானவற்றுக்கு 18 மாதங்களில் நடவடிக்கையெடுத்துவிடுவதாகவும், 90 சதவீதமான விசா விண்ணப்பங்களுக்கு 29 மாதங்களுக்குள் பதில் கொடுக்கப்பட்டுவிடுவதாகவும் கூறியுள்ளது.
திருமணம் செய்தவர்களையும் செய்வதற்காக காத்திருப்பவர்களையும் இவ்வளவு நீண்டதொரு காலப்பகுதிக்கு இழுத்தடிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று லேபர் கட்சி MP Julian Hill தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் செய்வதற்காகஆஸ்திரேலியா வருபவர்களுக்கு, கொரோனா காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடையிலிருந்து விதிவிலக்கு வழங்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பில் கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் ஒருவர் - ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை மனித உரிமை மீறல் என்று குறிப்பிட்டுள்ளார்.