நான்கு வயதான Cleo Smith மேற்கு ஆஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள விடுமுறைத் தளம் ஒன்றிலிருந்து காணாமல் போன இரண்டு வாரங்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
“இன்று அதிகாலையில் மேற்கு ஆஸ்திரேலியா காவல்துறை Cleo Smithஐ மீட்டதாக அறிவிப்பது எனது பாக்கியம். Cleo உயிருடன் இருக்கிறார்” என்று காவல்துறையின் துணை ஆணையர் Col Blanch ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதன் கிழமை அதிகாலை 1 மணியளவில் Carnarvon பகுதியில் உள்ள ஒரு பூட்டிய வீட்டிற்குள் காவல்துறையினர் நுழைந்து, ஒரு அறையில் Cleo Smithஐக் கண்டுபிடித்ததாக Col Blanch கூறினார்.
அதிகாரிகளில் ஒருவர் அவளைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு, “உன் பெயர் என்ன?” என்று கேட்டதற்கு, அவள், “என் பெயர் Cleo” என்றாள்.
“சிறிது நேரத்திற்குப் பின்னர் Cleo Smith அவளது பெற்றோருடன் மீண்டும் சேர்க்கப்பட்டாள்.”
“எங்கள் குடும்பம் மீண்டும் முழுமை பெற்றது❤️” என்று உணர்ச்சி ததும்ப, Cleoவின் தாயார் Ellie Smith, Instagramஇல் பதிந்துள்ளார்.

Cleo's mother had woken to find the tent open and Cleo missing, along with her sleeping bag. Source: Instagram/Ellie Smith
Carnarvon பகுதியைச் சேர்ந்த ஒருவர் காவலில் வைக்கப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
Blowholes in Macleod என்ற இடத்திலுள்ள விடுமுறை தளத்திலிருந்து இந்த சிறுமி இரண்டு வாரங்களுக்கும் மேலாக காணாமல் போயிருந்தார்.
அந்த சிறுமியும், அவள் உறங்குகின்ற பையும் (sleeping bag) குடும்பத்தின் கூடாரத்திலிருந்து காணாமல் போயிருந்தது. Cleo தனியாக வெளியே சென்று, அலைந்து திரிந்து தொலைந்து விட்டாரா என்ற அச்சம் முதலில் இருந்தது.
நாட்கள் செல்லச் செல்ல, அவரது பாதுகாப்பு குறித்து தாங்கள் “கடுமையான கவலை” கொண்டுள்ளதாகக் கூறிய காவல்துறை, Cleo குடும்பம் மற்றும் அவர்கள் தங்கியிருந்த விடுதலை முகாமில் தங்கியிருந்த சுமார் 110ற்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் விசாரித்தனர்.
Cleoவைத் தேடும் பணியில், சாலையோர குப்பைத் தொட்டிகளையும் விட்டுவைக்கவில்லை. வடக்கே Minilya என்ற இடத்திலிருந்து, தெற்கே Geraldton என்ற இடம் வரை பல குப்பைத் தொட்டிகளிலும் தடையங்கள் கிடைக்குமா என்று தேடினார்கள்.
குற்றங்கள் குறித்து பொது மக்கள் எச்சரிக்கும் Crime Stoppers என்ற தொலைபேசி எண்ணுக்கு வந்த ஆயிரக்கணக்கான அழைப்புகளையும் அவர்கள் ஆராய்ந்தார்கள்.
அத்துடன், அந்த விடுமுறைத் தளத்திலிருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒரு வாகனத்தின் ஓட்டுனரையும் தேடினார்கள்.
Cleoவின் தாயார் Ellie Smith மற்றும் அவரது துணைவர் Jake Gliddon, மற்றும் Cleoவின் தந்தை இவர்கள் எவர் மீதும் தமக்கு சந்தேகம் இல்லை என்பதை காவல்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
“எமது பிரார்த்தனைகள் பலனளித்துள்ளன” என்று பிரதமர் Scott Morrison ஒரு tweet செய்துள்ளார்.
“மனச்சுமையைப் போக்கிய மிக நல்ல செய்தி” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
“Cleo Smith பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
இவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட அனைத்து காவல்துறையினருக்கும் நன்றிகள்.”
எதிர்க்கட்சியான Labor கட்சித் தலைவர் Anthony Albanese அவர்களும் “மிக மகிழ்ச்சிகரமான செய்தி” என்றும் “முயற்சியைக் கைவிடாது அயராது தேடிய அனைவருக்கும் நன்றிகள்” என்று பதிந்துள்ளார்.
மேற்கு ஆஸ்திரேலிய காவல்துறை ஆணையர் Chris Dawson உடன் தான் இன்று காலை தொலைபேசியில் பேசியதாக NSW காவல்துறை ஆணையர் Mick Fuller கூறினார்.
“அவரை இன்று காலை நான் அழைத்த போது, அவர் குலுங்கிக் குலுங்கி அழுதார். அவரது கடமை உணர்வைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது” என்று 2GB வானொலிக்கு வழங்கிய நேர்காணலில் Mick Fuller கூறினார்.
Cleoவை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் ‘மிகக் குறைவு’ என்று தான் நினைத்ததாக Mick Fuller கூறினார்.
“‘மேற்கு ஆஸ்திரேலிய காவல்துறை Cleoவை ஒருபோதும் கைவிட வில்லை’ என்று Chris Dawson என்னிடம் கூறினார். காவல்துறையினரின் கடுமையான உழைப்புத்தான் அவளை உயிருடன் கண்டுபிடிக்க வழிவகுத்தது,” என்று அவர் கூறினார்.
[node_list title="மேலும் அறிய" uuid="e633a9ba-614c-4005-81c8-539942716a5b"]
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.