Foot and Mouth நோய்ப்பரவலைத் தடுப்பதற்கென கடுமையான சட்டங்களை ஆஸ்திரேலியா நடைமுறைப்படுத்தியுள்ள பின்னணியில், 6 கிலோ இறைச்சியுடன் வந்த பயணி ஒருவரது விசா ரத்துச் செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் பெர்த் விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபரின் பயணப்பைகளை ஆஸ்திரேலிய biosecurity அதிகாரிகள் சோதனையிட்டபோது, 3.1 கிலோ வாத்து இறைச்சி, 1.4 கிலோ மாட்டிறைச்சி rendang, 500 கிராமுக்கு மேல் frozen மாட்டிறைச்சி மற்றும் கிட்டத்தட்ட 900 கிராம் கோழி இறைச்சி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த நபர் தனது incoming passenger அட்டையில் இறைச்சி அல்லது பிற உணவு எதையும் ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வரவில்லை என குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரிகள் அந்த நபரின் விசாவை ரத்து செய்ததாக உள்துறை அமைச்சர் Clare O'Neil தெரிவித்தார். மேலும் அவருக்கு $2,664 அபராதம் விதிக்கப்பட்டு அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் விவசாயத் துறைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய foot and mouth நோய்ப்பரவலைத் தடுக்கும்வகையில், ஆஸ்திரேலியாவிற்குள் இறைச்சி உள்ளிட்ட பல பொருட்களைக் கொண்டுவருவதற்கான தடை அண்மையில் விதிக்கப்பட்டது.
குறித்த பயணியிடம் காணப்பட்ட இறைச்சி வகைகள், foot and mouth நோய் அபாயத்தையும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலையும் கொண்டுவரும் அபாயத்தை உட்படுத்தியது என குறிப்பிடப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.