இன்று (புதன்கிழமை) காலை சுமார் 9:15 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையப்பகுதி, மெல்பன் நகரிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மான்ஸ்ஃபீல்ட் (Mansfield) என்ற இடத்தில் அமைந்திருந்தது என்று Geoscience Australia கூறியது.
நில நடுக்கம் ஏற்பட்ட பின்னர் ஏற்படும் aftershock என்ற இரண்டாவது நடுக்கம் 4.0 அளவில் என்று தாம் பதிவு செய்துள்ளதாக Geoscience Australia மேலும் கூறியது.
சிட்னி, கன்பரா மற்றும் விக்டோரிய மாநிலத்தின் பல பிராந்திய இடங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கங்களை மக்கள் அனுபவித்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
20 வருடங்களாக மான்ஸ்ஃபீல்ட் நகரில் வாழும் அந் நகர மேயர், Mark Holcombe, தான் இதுவரை இப்படியான ஒரு நிலநடுக்கத்தை அனுபவித்ததில்லை என்றார்.
நான் வெளியே ஓட வேண்டியிருந்தது
“நான் என் வேலை செய்வதற்காக அமர்ந்திருந்தேன், என்ன நடக்கிறது என்பதை உணர எனக்கு சிறிது நேரம் எடுத்தது, நான் வெளியே ஓட வேண்டியிருந்தது.” என்று அவர் ABCயிடம் கூறினார்.
“நான் இதற்கு முன் வெளிநாடுகளில் நிகழ்ந்த நில நடுக்கங்களை அனுபவித்திருக்கிறேன், நான் முன்பு அனுபவித்ததை விட இந்த நடுக்கம் நீண்ட நேரம் நீடித்ததாகத் தோன்றியது. என்னை ஆச்சரியப்படுத்திய இன்னொரு விடயம் என்னவென்றால், அது ஏற்படுத்திய மிகப் பெரிய சத்தம். ஒரு கனரக வாகனம் என்னைக் கடந்து செல்வது போன்ற சத்தம்.”
நம் நாட்டில் நடந்த நில நடுக்கங்களில் மிக வலிமையான நில நடுக்கங்களில் இது என்று கூறப்படுகிறது.
New South Wales மாநிலத்தின் Newcastle நகரில் 1989ஆம் ஆண்டு நிகழ்ந்த 5.6 அளவிலான நில நடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
இன்று நிகழ்ந்த நில நடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்படும் அச்சுறுத்தல் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் Scott Morrison நிலநடுக்கம் குறித்த செய்தி கேட்டதும், “பாதுகாப்புப் படை அல்லது தேவைப்படும் மற்றவர்களின் உதவியை வழங்குவதற்கு அரசு துணை நிற்கிறது” என்றார்.
கடுமையான காயங்கள் யாருக்கும் ஏற்பட்டதாக தனக்கு எந்த அறிக்கையும் வரவில்லை என்று அவர் கூறினார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.