Key Points
- ஆஸ்திரேலியர்களுக்கு சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பல சீர்திருத்தங்களை செனட் குழு முன்மொழிந்துள்ளது.
- அரசின் ஆதரவுடன், வாரத்தில் நான்கு நாள் வேலை என்பது, இச்செனட் குழுவின் முன்மொழிவுகளில் ஒன்றாகும்.
- ஊதியத்துடனான பெற்றோர் விடுப்பை 52 வாரங்களாக அதிகரிப்பது மற்றும் கணிக்கக்கூடிய, நிலையான roster ஆகியவை பிற பரிந்துரைகளில் அடங்கும்.
Four-day working week- நான்கு நாள் வேலை வாரத்தை ஆஸ்திரேலியாவில் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்துமாறு, நாடாளுமன்ற செனட் குழு ஒன்று, அரசிடம் பரிந்துரைத்துள்ளது.
இதன்மூலம் ஒரு பணியாளரின் வேலை மற்றும் வாழ்க்கையை இது எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை கண்டறிய முடியுமென அரசிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி "100:80:100" மாதிரியின் அடிப்படையில், வாரத்தில் 80% வேலை செய்தாலும், தொழிலாளர்கள் தங்கள் முழு சம்பளத்தையும் பெற்றுக்கொள்ளும் அதேநேரம், தமது வேலைத்திறனை உரியமுறையில் பேணும்வகையில், இந்த பரீட்சார்த்த முயற்சியை ஆஸ்திரேலிய அரசின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தொழிற்துறைகளுக்கான இப்பரீட்சார்த்த முயற்சியை, ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாள் வேலை என்ற திட்டமானது, ஆஸ்திரேலியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சில நிறுவனங்களில் ஏற்கனவே வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
இப்பரீட்சார்த்த திட்டத்தில் பங்கேற்ற பணியாளர்கள், மேம்பட்ட உற்பத்தித்திறன், வேலை-வாழ்க்கை சமநிலை, உடல்நலம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில் அதிகரிப்பைக் கண்டதாக தெரிவித்துள்ளனர்.
இலாப நோக்கற்ற அமைப்பான Momentum Mental Health, 100:80:100 மாதிரியை நேர்மறையான முடிவுகளுடன் சோதித்து வருகிறது.
சுருக்கப்பட்ட வேலை வாரமானது, நிறுவனத்தின் உற்பத்தித்திறன் மற்றும் அதன் ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்தியுள்ளது என, குறித்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, Deborah Bailey தெரிவித்தார்.
நான்கு நாட்கள் வேலை என்பது தவிர, paid parental விடுப்பை 52 வாரங்களாக அதிகரிக்கும் பரிந்துரையையும் செனட் குழுவின் அறிக்கை உள்ளடக்கியுள்ளது.
குழந்தை பராமரிப்பு, ஊனமுற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்புப் பணியாளர்களுக்கு அதிக ஊதியம் மற்றும் நிலையான rosterக்கான உரிமை ஆகியவற்றையும் இக் குழு பரிந்துரைத்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்