நவுறு மற்றும் பப்புவா நியூகினியிலிருந்து மருத்துவ தேவைக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்ட அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் பலருக்கு வழங்கப்பட்ட அரச உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மருத்துவ தேவைக்காக ஆஸ்திரேலியா வந்து சமூக தடுப்புக்காவலில்(community detention) வைக்கப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் இவ்வாறு கடும் சிரமங்களுக்குள்ளாகியிருப்பதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு வழங்கப்பட்ட அரச உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், சமூக தடுப்புக்காவலிலிருந்து வெளியேறி தமது வாழ்க்கைச்செலவு மற்றும் தங்குமிடம் போன்றவற்றுக்கான செலவுகளை தாமே வேலைசெய்து சம்பாதித்துக்கொள்ளுமாறு உத்தவிடப்பட்டுள்ளது.
சமூக தடுப்புக்காவலிலிருந்து வெளியேறுவதற்கு 3-6 வார காலக்கெடுவும் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.
இப்படியாக 3 வார காலக்கெடு வழங்கப்பட்டுள்ளவர்களில் புகலிடக்கோரிக்கையாளர்களான அமீரும் மற்றும் அவரது மனைவியும் அடங்குகின்றனர்.
ஈரானைச் சேர்ந்த அமீரும் அவரது மனைவியும் ஏற்கனவே 6 வருடங்கள் நவுறு முகாமில் வாழ்ந்த பின்னர், கடந்த 2018ம் ஆண்டு மருத்துவதேவைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்டு குடிவரவு தடுப்புக்காவலில்(immigration detention) வைக்கப்பட்ட பின்னர் கடந்த 2019ம் ஆண்டு சமூக தடுப்புக்காவலுக்கு மாற்றப்பட்டார்கள்.
தற்போது 3 வார அவகாசத்தில் அங்கிருந்து வெளியேறி வேறிடம் செல்வதுடன் வேலையொன்றையும் தேடிக்கொள்வது எப்படியென்று தமக்குப் புரியவில்லை எனவும், கொரோனா பரவல் ஏற்கனவே வேலைவாய்ப்புக்களை இல்லாமல் ஆக்கிவிட்ட பின்னணியில் தமது நிலை இன்னமும் சிக்கலாகியுள்ளதாக அமீர் தெரிவித்தார்.
நவுறு மற்றும் பப்புவா நியூகினியிலிருந்து மருத்துவதேவைக்காக அழைத்துவரப்பட்டவர்கள் ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேறும்வரையில் இங்கு வாழ்வதற்கு ஏதுவாக Final Departure Bridging E விசா இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் சமூக தடுப்புக்காவலில் வாழ்ந்த சுமார் 515 பேர் கடந்த ஆகஸ்ட் செப்டம்பர் காலப்பகுதியில் இந்த விசாவுக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
இதன்கீழ் மெடிகெயார் வசதி உண்டு என்றபோதிலும் வேறு எந்த அரச உதவிகளும் வழங்கப்படாது என்பதால், தற்போதைய கொரோனா பரவல் காலத்தில் அவர்கள் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் தத்தளித்துவருவதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுதவிர மருத்துவ தேவைகளுக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்ட இன்னும் பல அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் குடிவரவு தடுப்புக்காவலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.