Highlights
- சிட்னி பெருநகரில்திங்கட்கிழமைமுதல் ஆஸ்திரேலிய இராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
- இந்நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை உண்டுபண்ணும் என விமர்சிக்கப்பட்டுள்ளது.
- மிக ஆபத்தான திரிபடைந்த Delta வகை கொரோனா வைரஸ் தொற்று மாநிலத்தில் பரவிவருகின்றது.
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவிட் தொற்று கட்டுக்கடங்காமல் பரவிவரும் பின்னணியில் சிட்னி பெருநகரில் வாழ்பவர்கள் வீடுகளில் தங்கியிருப்பதை உறுதிசெய்யும்வகையில் ஆஸ்திரேலிய இராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
குறிப்பாக சிட்னியின் Fairfield, Canterbury-Bankstown, Liverpool, Blacktown, Cumberland, Parramatta, Campbelltown மற்றும் Georges River உள்ளூராட்சி பகுதிகளில் கோவிட் தொற்று காண்போரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதையடுத்து கோவிட் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பணியில் சுமார் 300 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்கான அனுமதியை பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் வழங்கியுள்ளார்.
இதன்கீழ் சிட்னி பெருநகரில் வாழ்பவர்கள் stay-at-home உத்தரவை சரிவர கடைப்பிடிக்கிறார்களா என்பதையும், அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே வீடுகளைவிட்டு வெளியேறுகிறார்களா என்பதையும் இராணுவத்தினர் கண்காணிக்கவுள்ளனர்.
இவ்வார இறுதியில் தேவையான பயிற்சிகளை மேற்கொள்ளும் சுமார் 300 இராணுவவீரர்கள், எதிர்வரும் ஆகஸ்ட் 2ம் திகதி திங்கட்கிழமை முதல் சிட்னிபெருநகரில் கோவிட் கட்டுப்பாட்டு பணிகளுக்கென களமிறக்கப்படுவார்கள் என பாதுகாப்புதுறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்தார்.
இந்தப்பின்னணியில் கோவிட் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றமையானது பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் என Cumberland City Council major Steve Christou கூறியுள்ளார்.
ஏற்கனவே முடக்கநிலை காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்கள் இராணுவத்தினரின் நடமாட்டத்தால் மேலும் சஞ்சலங்களுக்கு உள்ளாவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் கோவிட் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பணியில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவது சற்றே பாரதூரமான அம்சம் எனவும் இவர்களது பணி எவ்வாறு அமையவுள்ளது என்பது தொடர்பில் அரசு விளக்கமளிக்க வேண்டுமெனவும் ஆஸ்திரேலிய சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் கோவிட் கட்டுப்பாட்டு பணிகளில் ஏற்கனவே பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பலர் ஈடுபட்டுள்ளதாகவும் நாடுமுழுவதும் சுமார் 1300 இராணுவத்தினருக்கும் மேற்பட்டோர் இப்பணியில் உள்ளதாகவும் அமைச்சர் டட்டன் குறிப்பிட்டுள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்றையதினம் சுமார் 170 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளநிலையில், பொதுமக்கள் வீடுகளில் தங்கியிருப்பதன்மூலம் மட்டுமே இப்பரவலைக் கட்டுப்படுத்தமுடியும் என தெரிவித்துள்ள Premier Gladys Berejiklian, அநாவசியமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்திப்பதை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.