திங்கட்கிழமை 04/01/2021 முதல் நடைமுறைக்கு வந்துள்ள, புதிய முகக்கவச விதிகளை மீறும் Greater சிட்னிவாசிகள் பொது சுகாதார ஒழுங்கு நடைமுறைகளின்கீழ் அபராதம் செலுத்த நேரிடும்.
நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் சுமார் 200 டாலர் அபராதம் செலுத்த வேண்டும்.
எனினும் புதிதாக நடைமுறைக்கு வரும் இந்த விதிகளை புறக்கணிப்பவர்களுக்கு அபராதம் வழங்குவதில் விவேகத்துடன் செயல்படுமாறு சுகாதார அமைச்சர் Brad Hazzard போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Shopping மையங்கள், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது, வழிபாட்டுத் தலங்கள், சிகையலங்கார மற்றும் அழகு நிலையங்கள், சினிமாக்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்கள், தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகள் போன்ற பிற உட்புற அரங்குகளில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
விருந்தோம்பல்துறை பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும்.
இதேவேளை நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் நேற்று இரவு 8 மணிவரை புதிதாக எவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் இரவு 8 மணிக்குப் பின்னர் இருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 20,000 அல்லது 30,000 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை இலக்காகக் கொண்டு NSW அரசாங்கம் செயற்பட்டுவருகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை Northern Beaches பகுதியில் ஏற்பட்ட பரவல் மூலம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம் Northern Beaches-இன் வடக்கு பகுதி மக்கள் தொடர்ந்தும் வீடுகளில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் இக்கட்டுப்பாடு ஆகக்குறைந்தது சனிக்கிழமை வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
உங்களுக்கு இலேசான அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக COVID-19 க்கு பரிசோதனை செய்யுங்கள்.
NSW முழுவதும் 300 க்கும் மேற்பட்ட COVID-19 சோதனை இடங்கள் உள்ளன. அவற்றில் பல வாரத்தில் ஏழு நாட்கள் திறந்திருக்கும். மேலதிக விபரங்களுக்கு:
NSW health தற்போது COVID-19 தொற்றுக்குள்ளான 125 பேருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அவர்களில் யாரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.