Diamond Princess உல்லாசக் கப்பலில் பயணித்த 78 வயதான பயணி ஒருவர் பேர்த் நகரில் இறந்துள்ளார். COVID-19 வைரஸிற்குப் பலியான முதல் ஆஸ்திரேலியர் இவர்.
கடந்த மாதம் டார்வின் அருகேயுள்ள Howard Springsஸில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், இவருக்கு COVID-19 வைரஸ் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் Sir Charles Gairdner மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டது.
இவரது மரணத்தை, மேற்கு ஆஸ்திரேலிய தலைமை சுகாதார அதிகாரி ஆண்ட்ரூ ராபர்ட்சன் (Andrew Robertson) இன்று [ஞாயிற்றுக்கிழமை] காலை உறுதிப்படுத்தினார்.
“இவரது இறப்பு மிகவும் துன்பகரமானது. Diamond Princess உல்லாசக் கப்பலில் பயணக் கப்பலில் இவர் பயணித்த போது தான் அவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது” என்று கூறிய ஆண்ட்ரூ ராபர்ட்சன், “ஆஸ்திரேலிய சமூகத்தில் இந்த வைரஸ் பெரிதாகப் பரவவில்லை என்பதை நாங்கள் தெளிவு படுத்த வேண்டும்,” என்றும் “பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை” என்றும் கூறினார்.
இறப்பதற்கு முன்பு அவரது குடும்பத்தினர் கண்ணாடி அறையிலிருந்து தொலைபேசி ஊடாக அவருடன் பேச முடிந்தது என்று ஆண்ட்ரூ ராபர்ட்சன் கூறினார்.
இறந்தவரின் 79 வயதான மனைவிக்கும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார் என்பதை மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பேர்த் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர், ஒரு நிலையான நிலையில் இருக்கிறார் என்று தெரிய வருகிறது.
பிப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் Diamond Princess உல்லாசக் கப்பலில் பயணித்தவர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டின் (Yokohama) யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டது. அதில் பயணித்த 3,711 பயணிகளில் இறந்தவரும் அவரது மனைவியும் அடங்குவர்.
ஒன்பது ஆஸ்திரேலியர்கள் உட்பட 600 ற்கும் மேற்பட்ட பயணிகளுக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக செய்திகள் கிடைக்கும் போது, நாம் பகிர்ந்து கொள்வோம்.