Facebook Inc என்ற நிறுவனத்தின் பெயர் Meta என மாற்றப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. கணினி தொழில்நுட்பம் அதி வேகமாக வளர்ந்து வரும் வேளையில், மெய் நிகர் (virtual) உலகம் ஒன்றை உருவாக்கும் அடுத்த கட்டத்திற்குத் தமது நிறுவனம் தயாராகி வருகிறது என்று அதன் தலைமை நிர்வாகி Mark Zuckerberg அறிவித்தார்.
கற்பனைக் கதைகளில் சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாகப் பேசப்பட்ட ஒரு விடயம் – metaverse – பல்வேறு சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் ஒன்று கூடி பகிரக்கூடிய மெய் நிகர் சூழல், தற்போது தொழில் நுட்ப நிறுவனங்களிடையே பெரும் சலசலப்பை ஈர்த்து வருகிறது.
இயல்பாக நேரடியாக காண்பவற்றுடன் மேலதிக வரைபட, ஒலி, உணர்வு தகவல்களை முப்பரிணாமத்தில், நிகழ் நேரத்தில் இணைக்கும் நுட்ப அமைப்பான augmented reality மற்றும் கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை மெய்யுருவம் போல் காட்டும் virtual reality தொழில் நுட்பங்களில் Facebook நிறுவனம் அதிக முதலீடு செய்துள்ளமையால், ஒரு புதிய அடையாளத்தின் கீழ் அனைத்தையும் ஒன்றிணைக்க எடுக்கப்படும் முயற்சி இது என்று Mark Zuckerberg மேலும் கூறினார்.
தற்போது ஒரு மாதத்தில் சுமார் 2.9 பில்லியன் பயனர்கள் இந்த நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய அளவில் பல விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது நாம் அறிந்த செய்தி.
சமீபத்திய சர்ச்சையில், முன்னாள் ஊழியரான Frances Haugen என்பவர், பயனர் பாதுகாப்பை விட Facebook நிறுவனம் இலாபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை வெளிக்கொணரும் ஆவணங்களைப் பகிரங்கப் படுத்தினார். ஆனால் அந்த ஆவணங்கள், தம்மைத் தவறு செய்பவர்கள் என்ற விம்பத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படுவதாக Mark Zuckerberg கூறினார்.

Facebook CEO Mark Zuckerberg. Source: AP
AR மற்றும் VR முயற்சிகளுக்குப் பொறுப்பான அதன் Hardware பிரிவு Facebook Reality Labs என்ற தனி பிரிவாக மாறும் என்றும், அதில் தாம் முதலீடு செய்தமையால் நிறுவனத்தின் மொத்த இலாபத்தை சுமார் 14 பில்லியன் டொலர்கள் இந்த ஆண்டு குறைக்கும் என்றும் Facebook நிறுவனம் இந்த வாரம் அறிவித்தது.
தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதைத் தான் கருத்தில் கொள்ளவில்லை என்று Mark Zuckerberg கூறியுள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.