கிழக்கு நியூ சவுத் வேல்ஸின் பெரும்பாலான பகுதிகளில் கடும்மழை பெய்துவரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் பல இடங்களுக்கு வெள்ள எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இப்படியான வெள்ள அபாய நிலையின்போது என்ன செய்யலாம் மற்றும் இதனை எதிர்கொள்ளத் தயாராவது எப்படி என்று பார்ப்போம்.

Source: Getty Images/Colin Anderson Productions
முன்கூட்டியே திட்டமிடுங்கள், அவசரநிலைக்கு தயாராக இருங்கள்
அவசர நிலையின்போது என்ன செய்யலாம் என்பது தொடர்பில், உங்கள் அண்டை வீட்டாருடனும் உள்ளூர் அவசர உதவி நிறுவனங்களுடனும் கலந்துரையாடுங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் உங்கள் காப்புறுதித் திட்டத்தைச் சரிபார்ப்பதுடன் அவசர நிலைமைக்கேதுவான திட்டமொன்றை உருவாக்கி அதை உங்கள் குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முதலுதவி பெட்டி, தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மற்றும் portable charger அடங்கியதாக emergency pack ஒன்றை உருவாக்கவும்.
உங்கள் வீடு வெள்ளத்தில் மூழ்கும் வாய்ப்பு உள்ளது என்று உங்களுக்குத் தெரிந்தால், உங்கள் பெறுமதியான பொருட்கள் அனைத்தையும் உயரமான இடத்தில் வைக்கக்கூடியவகையில் ஏற்பாடுசெய்யுங்கள்.
ஒரு பேரழிவிற்கு உங்கள் வீட்டை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றிய தகவலை உங்கள் உள்ளூர் SES இணையதளத்தில் காணலாம்.
வெள்ளம் ஏற்படும் போது உங்கள் கழிவறை மற்றும் வடிகால் வழியாக கழிவுநீர் வருவதைத் தடுக்க, உங்கள் கழிவுநீர் மற்றும் வடிகால்களை மணல்மூட்டைகள் மூலம் தடுக்கலாம்.

Source: Getty Images/Charles Briscoe-Knight
நீங்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தால், புறப்படுவதற்கு முன் பாதைகளைத் திட்டமிடுங்கள் மற்றும் மாற்று வழிகளைக் கண்டறியுங்கள். இதன்மூலம் உங்கள் இலக்கை எவ்வாறு பாதுகாப்பாகச் சென்றடைவது என்பது உங்களுக்குப் புரியும்.
வெள்ளப்பெருக்கின்போது முடிந்தவரை சீக்கிரம் வெளியேறுவது எப்போதும் பாதுகாப்பானது.
வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் வாகனம் ஓட்ட வேண்டாம்
திடீர் வெள்ளப்பெருக்கு விரைவில் ஏற்படக்கூடும் என்பதால், கனமழை பெய்யும்போது ஆழமற்ற நீர் வழியாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். வெள்ளத்திற்குள் வாகனம் ஓட்டியமை பலர் உயிரிழப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது
நீங்கள் கடுமையான மழைவீழ்ச்சிக்குள் சிக்கினால், பாதுகாப்பான இடமொன்றில் வாகனத்தை நிறுத்துங்கள். அல்லது உயரமான இடத்திற்குச் செல்வது நல்லது.
சில கார்கள் வெள்ளத்தில் மிதந்துசெல்ல 15 செ.மீ. அளவான வெள்ளநீர் போதுமானது.
உங்களால் வாகனத்தை விட்டு வெளியேற முடியாவிட்டால், உடனடி உதவிக்காக மூன்று பூஜ்ஜியத்தை (000) அழைக்கலாம்.
பாதசாரிகள் எந்த சூழ்நிலையிலும் வெள்ள நீரில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

Source: Getty Images/Tobias Titz
வீட்டைவிட்டு வெளியேற முடியாத போது
நீங்கள் பெருகிவரும் வெள்ளத்தில் சிக்கி, வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் போனால், இது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையாக மாறும். எனவே நீங்கள் இருக்குமிடத்திலேயே முடிந்தவரை பாதுகாப்பான மற்றும் மிக உயர்ந்த இடத்தில் தங்க வேண்டும் மற்றும் 000-ஐ அழைக்கலாம்.
பெருகிவரும் வெள்ள நீர் மின்சாரம் தடைபடுவதற்கும், கழிவுநீர் மற்றும் பிற வசதிகளுக்கு இடையூறு ஏற்படுவதற்கும் வழிவகுக்கும். எனவே சுத்தமான நீர் கிடைக்கும்பட்சத்தில் அவற்றை நிரப்பி வைக்கவும்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் பெரும்பாலான உணவுகள் உண்பதற்குப் பாதுகாப்பற்றதாகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நீங்கள் வெள்ளத்தில் சிக்கினால்
- நீரோட்டத்தின் திசையில் செல்லவும்
- உங்களுக்கு உதவி தேவை என்பதைக் குறிக்க உங்கள் கையை உயர்த்திக் காண்பிக்கவும்
- உங்கள் தலையை தண்ணீருக்கு வெளியே வைக்கும்வகையில் உங்கள் முதுகுப்பக்கமாக மிதக்கவும்
- ஒரு esky, boogie board அல்லது பந்து போன்ற மிதக்கும் ஏதாவது ஒன்றைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

Source: Getty Images/Rafael Ben-Ari
அவசர சேவைகளை அழைப்பதன்மூலம் அவருக்கு உதவலாம். அத்துடன் அந்த நபரை தண்ணீருக்கு மேலே வைத்திருக்க உதவும்வகையில் மிதக்கும் பொருட்கள் ஏதேனும் ஒன்றை எறிந்து நீங்கள் உதவலாம்.
வெளியேற்ற உத்தரவுகளால் பாதிக்கப்பட்ட சிட்னி புறநகர் பகுதிகளின் விவரங்களடங்கிய புதுப்பிக்கப்பட்ட வரைபடம் கிடைக்கிறது
நீங்கள் உயிருக்கு ஆபத்தான அவசர சூழ்நிலையில் இருந்தால் 000 ஐ அழைக்கவும். புயல், காற்று, hail அல்லது மரங்கள் வீழ்ந்ததால் சேதம் ஏற்பட்டால் மற்றும் மரக்கிளை உங்கள் வீடு அல்லது ஆட்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், NSW SES-ஐ 132 500 என்ற எண்ணில் அழைக்கவும்.

Source: SBS
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.