விக்டோரிய மாநிலத்தில் கருணைக்கொலையை அனுமதிக்கும் சட்டம் கடந்த ஜூன் மாதம் 19 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது முதல் இதுவரை 140 பேர் தங்களை கருணைக்கொலை செய்யுமாறு விண்ணப்பித்திருக்கிறார்கள்.
சட்டம் அறிமுகமாகி முதல் ஆறு மாதத்தில் வாரத்துக்கு ஐந்து பேர் என்ற விகிதத்தில் இந்த விண்ணப்பங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மேற்படி தரவுகளை பெற்றுக்கொண்ட The Age ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டம் அறிமுகமாகி 11 நாட்களுக்குள் விண்ணப்பித்தவர்களில் 11 பேர் கருணைக்கொலை செய்யப்படுவதற்கு தகுதியுடையவர்கள் என்று மருத்துவ அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், மொத்தம் எத்தனை பேர் இந்தச் சட்டத்தின் கீழ் கருணைக்கொலை செய்யப்பட தகுதியற்றவர்கள் என்று நிராகரிக்கப்பட்டார்கள் என்ற விவரம் தெரியாது என்றும் அதேவேளை, அங்கீகரிக்கப்பட்டவர்களில் எத்தனைபேர் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் வெளிவரவுள்ள இது குறித்த அறிக்கையில் முழுமையான விவரம் தெரியவரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருணைக்கொலை செய்யப்படுவதற்கு தகுதியானவர்களை தெரிவுசெய்வதற்கு நாடெங்கிலும் பயிற்றப்பட்ட 360 வைத்தியநிபுணர்கள் இது குறித்த விண்ணப்பங்களை பரிசீலிப்பதிலும், தொடர்புடைய விடயங்களை கையாளுவதிலும் செயற்பட்டுவருகிறார்கள்.
கருணைக்கொலைக்கு முற்றிலும் தகுதியானவர்களுக்கு 100 மில்லி லீற்றர் திரவ மருந்துடன் செயற்கை மரணம் எய்துவதற்கான தூள் சேர்க்கப்பட்டு அருந்தக்கொடுப்பது தற்போதுள்ள நடைமுறையாகும். இதனை குறிப்பிட்ட நோயாளிகள் வீட்டில் தமக்கு விருப்பமான நேரத்தில் அருந்திக்கொள்ளலாம் என்ற வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.