கருணைக்கொலை செய்துகொள்வதற்காக சுவிஸ் சென்ற 104 வயதான ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி David Goodall தனது வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார்.
கருணைக்கொலை செய்வதை சட்டப்படி அனுமதிக்கும் சுவிஸ் நாட்டின் Basel-இலுள்ள Life Circle மருத்துவமனையில் உரிய அனுமதிகளைப் பெற்று கடந்தவாரம் அங்கு சென்ற David Goodall, சுவிஸ் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல் நலனை பாதிக்கும் வகையில் இவருக்கு நோய் எதுவும் ஏற்படவில்லை என்றபோதிலும் தனது வாழ்க்கை முறை மாறிவிட்டதாகவும் தான் மகிழ்ச்சியாக இல்லை எனவும் தெரிவித்திருந்த David Goodall, தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்புவதாக கூறியிருந்தார்.
மரணமடைவதற்கு முன்னதாக நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் தான் ஆஸ்திரேலியாவிலேயே மரணமடைய விரும்பியதாகவும் எனினும் இங்குள்ள சட்டம் அதை அனுமதிக்காததால் தனக்கு வேறு வழியில்லை எனவும் தெரிவித்ததுடன் இனிமேலாவது இத்தகைய நடவடிக்கைக்கு அனுமதிப்பது குறித்து ஆஸ்திரேலியாவும், பிற நாடுகளும் பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இறந்தபின் தனது உடலை மருத்துவத்துறைக்கு கொடுத்துவிடுமாறு கேட்டுக்கொண்ட David Goodall, மரணமடையும் நேரத்தில் புன்னகையுடன் பீத்தோவனின் 9வது சிம்பொனியை ரசித்துக்கொண்டிருந்ததாக மருத்துவமனைதரப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்கொலை எண்ணங்களால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு 13 11 14 என்ற எண்ணை அழையுங்கள்.