முடக்க நிலையில் உடலும் உள்ளமும் நலமாயிருக்க ஆறு வழிகள்

மெல்பன் மற்றும் சிட்னியில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப் பட்டுள்ளதால், உடற் பயிற்சிக் கூடங்கள் மற்றும் பல உடற்பயிற்சி இடங்களுக்கு மக்கள் செல்ல முடியாதிருக்கிறது. அதற்கும் மேல், நண்பர்கள் உறவினர்கள் என்று மற்றவர்களுடன் மகிழ்வாகப் பொழுதைப் போக்கவும் தடை செய்யப் பட்டிருக்கிறது. இவையெல்லாம் ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன நலத்தையும் பாதிக்கிறது.

melbourne lockdown

People are seen exercising at Albert Park Lake on September 01, 2021 in Melbourne. Source: Daniel Pockett/Getty Images

நீண்டகாலமாக முடக்கநிலை கட்டுப்பாடுகள் தொடர்வதால், பெரும்பாலானவர்கள் அத்தியாவசிய காரணங்கள் தவிர வெளியில் செல்ல முடியாமல் அவரவர் வீடுகளில் ‘அடைத்து’ வைக்கப்பட்டுள்ளனர்.  தினசரி வழக்கத்தில் ஏற்படும் இந்த இடையூறு பலருக்கு மோசமான உடல் மற்றும் உளவியல் விளைவுகளை ஏற்படுத்தலாம்.

“தொற்று நோய் குறித்த பயம், தொற்று நோய் குடும்பத்தில் தாக்கம் ஏற்படுத்துமா என்ற பயம், சுகாதார கட்டமைப்பு பற்றிய கவலைகள் மற்றும் தொற்றை சிறப்பாக நிர்வகிக்கும் திறன் இருக்கிறதா என்ற சந்தேகம் என்று மக்களின் ஆதங்கங்கள் பலவற்றை நாங்கள் கேள்விப்படுகிறோம்" என்று ஆஸ்திரேலிய உளவியல் சங்கத்தின் தலைவர் Tamara Cavenett கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர், அல்லது தொற்றுநோய் குறித்து கவலை கொண்டுள்ளனர் என்று அவர் கூறுகிறார்.
Melbourne lockdown
Police speak to people enjoying the unusually warm spring weather at St Kilda Beach in Melbourne on September 2, 2021, as the city remains in lockdown. Source: WILLIAM WEST/AFP via Getty Images

உங்கள் மன ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ள

Beyond Blue என்ற அமைப்பின் தன்னார்வ பேச்சாளர்களில் ஒருவர் Cecile Sly.  கடந்த காலத்தில் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்த அவர், உளவியல் சிகிச்சை (psychotherapy) மூலம் குணமடைந்துள்ளார்.  இதன் விளைவாக, மற்றவர்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சிகளை அவர் நன்கு அறிந்திருக்கிறார்.

சிட்னியில் அதிகளவு எண்ணிக்கையில் தொற்றாளர்கள் வாழும் Parramatta உள்ளூராட்சிப் பகுதியில் வாழும் இவர், கடுமையான முடக்கநிலை கட்டுப்பாடுகளை அனுபவிக்கிறார்.
சில சமயங்களில் தான் மிகவும் கவலையாக இருப்பதாகவும், ஒரு கட்டத்தில் தொற்று தனக்கும் வந்துவிடும் என்று அஞ்சி, வெளியில் செல்வதை முற்றாகவே நிறுத்தி விட்டதாகவும் அவர் கூறுகிறார்.
நான் வெளியே எங்கும் செல்லவில்லை. கடைகளுக்குச் செல்லவும் நான் விரும்பவில்லை. தொற்று குறித்த பயம் அதிகரித்தது. சித்தப்பிரமை பிடித்தவர் போல் ஆனேன்.
வெளியே சென்று, தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஒரு உளவியலாளர் அவரை ஊக்குவித்தார்.  அத்துடன், ஓய்வு நேரத்தில் அவர் ஓவியம் வரையவும் தொடங்கினார்.

சமூக ஊடகங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல்

செய்திகளையும் புதினங்களையும் அறிந்து கொள்ள பலர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள்.  ஆனால் இவை மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறதா என்பதை அவர்கள் அவதானிக்க வேண்டும் என்கிறார் Dr Tamara Cavenett.

சமூக ஊடகங்கள் உங்களை மேலும் கவலையடையச் செய்கிறதா அல்லது உங்கள் மன நிலையைக் குலைக்கிறதா என்பதையும் அதில் நீங்கள் எத்தனை மணிநேரம் செலவிடுகிறீர்கள் என்பதையும் அவதானிக்கும்படி அவர் கூறுகிறார்.

“அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக இருந்தால், அல்லது உங்கள் மன நிலையைப் பாரதூரமாகப் பாதிக்கிறது என்றால், சமூக ஊடகங்களிலிருந்தும் அவற்றைப் பயன்படுத்த நீங்கள் உபயோகிக்கும் கருவிகளிலிருந்தும் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்வதைக் கருத்தில் கொள்ளுங்கள், உங்களுக்குக் கொஞ்சம் நிம்மதி கிடைக்கலாம்”

என்று Dr Tamara Cavenett கூறுகிறார்.

Grant Blashki என்பவர் Beyond Blue என்ற அமைப்பில் முன்னணி மருத்துவ ஆலோசகராக கடமையாற்றுகிறார்.

உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருப்பவை எவை, உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை எவை என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம் என்று அவர் கூறுகிறார்.
உங்கள் வாழ்க்கையில், நீங்கள் உண்மையில் கட்டுப்படுத்தக் கூடிய விடயங்கள் எவை?

தினமும் சில செயற்பாடுகளை வழக்கமாகக் கொண்டிருத்தல்

எமது உடலை நாம் எப்படி கவனித்துக் கொள்கிறோம் என்பதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  போதுமான தூக்கம், நல்ல உணவு சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது என்பவை சில அடிப்படை விடயங்கள்.
cyclying
Exercising outdoors is allowed during lockdown. Source: Roman Pohoreki/Pexels
ஒரு கட்டமைப்பு மிகவும் முக்கியமானது என்று Dr Grant Blashki நம்புகிறார்.  உதாரணமாக, ‘காலை 11:00 மணிக்கு நான் நடைப்பயணம் செய்யப் போகிறேன்' என்று அல்லது ‘மதிய நேரம் எனது அம்மாவுடன் தொலைபேசியில் பேசுவேன்’ என்று காலையில் எழும்பும் போதே உங்கள் நாள் எவ்வாறு அமையப் போகிறது என்பதை முடிவெடுத்து அதன்படி நடப்பது முக்கியம் என்கிறார் அவர்.

அதைத் தான், எமது மகாகவி, “காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு, என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா” என்று சிறு வயதிலிருந்தே அந்தப் பழக்கத்தை நடைமுறைப்படுத்த ஊக்குவித்திருக்கிறார்.



தொடர்ச்சியான உடல் உடற்பயிற்சி

பெருந்தொற்று காலத்தில் உடற்பயிற்சி மிக முக்கியமானது என்று Dr Tamara Cavenett கூறுகிறார்.

“உடற்பயிற்சி மன ஆரோக்கியத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை நாங்கள் அறிவோம்.  நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டிய விடயங்களில் இதுவும் ஒன்று.  நீங்கள் இதற்கு முன்னர் தொடர்ச்சியான உடல் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால், இப்போதே நீங்கள் தொடங்குவது நல்லது.”

மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் (endorphins எனப்படும்) புரதக் கூறுகளை உடற்பயிற்சி உருவாக்குகிறது.  சில போதைப் பொருட்கள் எம் உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் மகிழ்ச்சியான உணர்வுகளை, உடற்பயிற்சியும் உருவாக்குகிறது.

மெல்பன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பேராசிரியர் Cassandra Szoeke அண்மையில் “Secrets of Women's Healthy Ageing” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள நூல், முதுமையிலும் பெண்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான இரகசியங்கள் சிலவற்றை எடுத்துரைக்கிறது. 

30 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 400 ற்கும் மேற்பட்ட பெண்களின் ஆரோக்கியத்தை ஆராய்ந்து அதன் கண்டுபிடிப்புகளைக் கொண்டு வெளியிட்டப்பட்ட நூல் இது.

தினசரி உடற்பயிற்சி மக்களின் உயிரியல் ஆரோக்கியத்தை தெளிவாக மேம்படுத்துகிறது என்று ஆய்வு காட்டுகிறது என்று பேராசிரியர் Cassandra Szoeke கூறினார்.
Physical fitness
Keep it brisk. Source: Getty
"எங்கள் 30 வருட ஆராய்ச்சியில் நாங்கள் தீவிர பயிற்சி செய்பவர்கள், உடற் பயிற்சிக் கூடங்கள் மற்றும் நீச்சல் தடாகங்களில் கடுமையான பயிற்சி செய்பவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என எதிர்பார்த்தோம்.  ஆனால், ஆச்சரியப்படும் வகையில், 30 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தவர்கள் - அது ஒரு தீவிர உடற் பயிற்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஒவ்வொரு நாளும் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை காலார நடந்தவர்களும் அதே போன்ற பலனை அனுபவிக்கிறார்கள்” என்றார்.
நீங்கள் தீவிரமான உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் கலங்கத் தேவையில்லை, ஆனால் ஒவ்வொரு நாளும் சுறுசுறுப்பாக இருங்கள்.

ஆரோக்கியமான உணவு

நாம் கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு முக்கியமான விடயம் உணவு.
fruit
Being in lockdown means also having more time to cook healthy meals. Source: Trang Doan/ Pexels
முடக்க நிலையின் போது மக்கள் அதிகமாக சாப்பிடுவது அல்லது அளவுக்கு அதிகமாக மது அருந்துவது எளிதில் நடக்கும் விடயங்கள் என்று Dr Grant Blashki கூறுகிறார்.

சற்று மன அழுத்தத்தில் இருக்கும்போது, நாங்களே நல்ல முடிவுகளை எடுப்பதை எளிதாக்க சில எளிய கருத்துகளை முன்வைக்கிறார் அவர்.
ஆரோக்கியமற்ற உணவை கண்ணுக்குத் தெரிய வைக்காதீர்கள். அவற்றை உங்கள் வீட்டில் வைக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்


வேலையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரித்து வைத்திருத்தல்

சமூக தொடர்புகளைப் பராமரிக்க, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வழக்கமான அரட்டைகளை நாம் நடத்துவதும் முக்கியம்.

நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதையும் மற்றொருவருடன் இணைப்பில் இன்னும் பல வழிகள் உள்ளன என்பதை நினைவில் கொள்வது அவசியம் என்றும் Dr Tamara Cavenett கூறுகிறார்.
சில நாட்கள் நாங்கள் மனமுடைந்து போய் இருப்பது இயல்பு. அது எதிர்பார்க்கப்பட வேண்டியதும் தான்.
“எனவே நீங்கள் எதைச் செய்தால் உங்கள் மன நிலை மகிழ்வாக மாறும் என்பது உங்களுக்குத்தான் தெரியும்.  நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்” என்று அவர் ஊக்குவிக்கிறார்.

வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு, அவர்கள் எப்போது வேலை செய்கிறார்கள் அல்லது எப்போது வேலை செய்யவில்லை என்பதற்கு இடையே தெளிவான வேறுபாடுகள் இருப்பது முக்கியம்.
“பலர் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள், ஆபத்து என்னவென்றால், நீங்கள் வேலையிலேயே உங்கள் வாழ்க்கையைக் கடத்துவது போல் ஆகலாம்.  எந்த வேளையிலும் மின்னஞ்சல்கள் வரலாம்.  வேலையை முடித்து வீடு வந்துவிட்டோம் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்” என்று Dr Grant Blashki கூறினார்.
வேலை எப்போது, இல்லற வாழ்க்கை எப்போது என்பது குறித்து மிகத் தெளிவான எல்லையை உருவாக்க நான் பரிந்துரைக்கிறேன்
உங்கள் வழமையான சுகாதார நல சோதனைகளையும் மறந்து விடக்கூடாது, அவை நல் வாழ்விற்கு முக்கியமானவை என்று அவர் மேலும் கூறினார்.


மன ஆதரவு தேவைப்பட்டால், Beyond Blueவின்  இலவச 24 மணி நேர உதவி எண் 1300 22 46 36 என்பதை அழைக்கவும்.

எந்தவொரு சேவைக்கும் இலவச மொழிபெயர்த்துரைப்பாளரை அணுக, 13 14 50 ஐ அழையுங்கள்.

நீங்கள் வீட்டு அல்லது பாலியல் குடும்ப வன்முறையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் 1800 737 732 என்ற எண்ணில் 1800 RESPECT என்ற அமைப்பை அழைக்கவும்.

உங்கள் உயிருக்கு உடனடி ஆபத்து இருந்தால் உடனடியாக 000 என்ற இலக்கத்தை அழைக்கவும்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 

 


Share
Published 10 September 2021 11:13am
Updated 12 August 2022 2:59pm
By Chiara Pazzano, Kulasegaram Sanchayan


Share this with family and friends